
நம் சருமத்திற்கு கிரீம், சீரம், டோனர் என பல பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், சரியான வரிசையில் எதனை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் ஆரோக்கியமான, மென்மையான சருமத்திற்கு முக்கியம். இதையே 'ஸ்கின் கேர் லேயரிங்' (Skincare Layering) என்கிறார்கள். அந்த வகையில், ஸ்கின் கேர் லேயரிங் செய்வது எப்படி? ஏன் முக்கியம்? எது முதலில் பயன்படுத்த வேண்டும்? என்பதை பற்றி இந்த கட்டுரையில் வாசிப்போம்.
ஸ்கின் கேர் லேயரிங்கிற்கான சரியான வரிசை (The correct order for layering skincare)
ஸ்கின் கேர் லேயரிங்கில், க்ளென்சர், டோனர், எஸ்சென்ஸ், சீரம், மாய்ஸ்சரைசர் மற்றும் கடைசியாக சன்ஸ்கிரீன் என்ற வரிசையில் பயன்படுத்துவது முக்கியம். இதுபோன்ற லேயரிங் செய்து வந்தால், சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாறும்.
ஆரோக்கியமான சருமம் கொண்டவர்கள், எஸ்சென்ஸ் மற்றும் டோனரை தவிர்த்து நேரடியாக சீரம் பயன்படுத்தலாம், அதே சமயம் ஆயில் சருமம் கொண்டவர்கள் மாய்ஸ்சரைசரை தவிர்த்து சன்ஸ்கிரீனை நேரடியாக பயன்படுத்தலாம்.
பருக்கள், பிக்மென்டேஷன் மற்றும் வறண்ட சருமம் போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் தங்களின் சரும தேவைகளுக்கு ஏற்ப ப்ராடக்ட்களை தேர்வு செய்து, சரியான வரிசையில் பயன்படுத்துவது அவசியம்.
காலை மற்றும் இரவு வழக்கங்களுக்கான ஸ்கின் கேர் லேயரிங் (Layering skincare for morning and night routines)
காலை மற்றும் இரவு நேரங்களில் சரும பராமரிப்பு மிகவும் முக்கியம். காலை நேரத்தில், முதலில் முகத்தை கிளென்சர் மூலம் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின், டோனர், எஸ்சென்ஸ், சீரம், மாய்ஸ்சரைசர் மற்றும் கடைசியாக சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சிறந்தது. இதனால் சருமத்தை நாள் முழுவதும் UV கதிர்கள் மற்றும் தூசி போன்ற வெளிப்புற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க உதவும். குறிப்பாக, காலை நேரத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது கட்டாயம்.
அதே போல இரவு நேரத்தில், நாள் முழுவதும் சேகரித்த தூசியை முதலில் கிளென்சர் மூலம் நீக்கி, பிறகு டோனர் மற்றும் எஸ்சென்ஸ் பயன்படுத்தி சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின் சீரம், கிரீம், மாய்ஸ்சரைசர் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
ஸ்கின் கேர் லேயரிங் செய்யும் போது தவிர்க்க வேண்டிய குறிப்புகள் மற்றும் தவறுகள் (Tips and mistakes to avoid while layering skincare)
சரியான முறையில் லேயரிங் செய்தால், சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆனால், சில தவறுகளைச் செய்வதால், சருமப் பிரச்னைகள் ஏற்படலாம்.
1. அதிகமான ப்ராடக்ட்களை பயன்படுத்துதல்
லேயரிங் செய்யும் போது தவிர்க்க வேண்டிய முக்கிய தவறுகளில் ஒன்று ஒரே நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட ப்ராடக்ட்களை பயன்படுத்துவது ஆகும். இது சருமத்தின் துளைகளை அடைத்து, சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
2. தவறான வரிசையில் பயன்படுத்துதல்
எப்போதும் மெல்லிய, இலகுவான ப்ராடக்ட்களில் இருந்து தொடங்கி, அடர்த்தியானவற்றை பின் பயன்படுத்துவதே சரியானது. (டோனர் → சீரம் → மாய்ஸ்சரைசர் → சன்ஸ்கிரீன்)
3. ஒரே நேரத்தில் பல ஆக்டிவ் பொருட்களைப் பயன்படுத்துதல்
வைட்டமின் C, ரெட்டினாய்டு, AHA/BHA போன்ற பல ஆக்டிவ் பொருட்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவது சருமத்தை எரிச்சலடையச் செய்யும். ஒரு நேரத்தில் ஒரு ஆக்டிவ் பொருளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
4. நேரம் கொடுக்காமல் இருப்பது
ஒவ்வொரு ப்ராடக்ட் பயன்பாட்டிற்கும் இடையில் குறைந்தது 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை காத்திருக்க வேண்டும்.
5. காலாவதியான பொருட்களை பயன்படுத்துதல்
காலாவதியான அல்லது நீண்ட நாட்கள் திறந்திருந்த ப்ராடக்ட்களை பயன்படுத்துவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, தயாரிப்புகளின் காலாவதி தேதிகளை சரிபார்த்து, குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்துவது நல்லது.