
நம் உடல் அழகுற தோற்றமளிக்க, நாம் முன்னுரிமை அளிக்க வேண்டியது நம் முகம் மற்றும் சருமப் பராமரிப்பிற்கே எனலாம். இதற்கு பல வகையான அழகு சாதனப்பொருட்கள் உலகமெங்கும் கிடைக்கிறது. அதை பலரும் வாங்கி உபயோகித்தும் வருகின்றனர். சமீப கால ட்ரெண்டிங்காக அந்த மாதிரியான அழகு சாதனப் பொருட்களின் தயாரிப்பில் ஸ்னைல் ம்யூசினும் ஒரு கூட்டுப்பொருளாக சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
ஸ்னைல் ம்யூசின் என்பது நத்தையின் உடலிலிருந்து சுரக்கப்படும் ஊட்டச்சத்து நிறைந்த ஒரு திரவம். இது நத்தையின் உடலிலுள்ள தோல் புத்துயிர் பெறுவதற்காக சுரக்கப்படுகிறது. இந்த திரவம் சேர்த்து தயாரிக்கப்படும் அழகு சாதனப்பொருட்கள் நம் சருமத்தை நீரேற்றத்துடன் வைக்கவும், சிதைவடைந்த சரும திசுக்களை புத்துணர்வு பெறவும் சிறந்த முறையில் உதவி புரிவதாக கண்டறியப் பட்டுள்ளது. கொரிய மக்கள் இதைப் பயன்படுத்தி பலனடைந்து வருவதாகவும் தெரிகிறது.
ஸ்னைல் ம்யூசினில் கிளைக்கோ ப்ரோட்டீன்ஸ் (Glycoproteins), ஹையாலுரோனிக் (hyaluronic) ஆசிட், கிளைக்கோலிக் (Glycolic) ஆசிட், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல நன்மை தரக்கூடிய கூட்டுப் பொருட்கள் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தனை கலவை கொண்டுள்ள ம்யூசின், நத்தையின் உடலில் நீரேற்றத்தை தக்க வைக்கவும், காயங்களை ஆற்றவும், சூழ்நிலைகளால் உருவாகும் ஸ்ட்ரெஸ்ஸை சமாளிக்க உதவும் ஒரு பாதுகாப்பு கவசமாகவும் செயலாற்றி வருகிறது.
ஹையாலுரோனிக் ஆசிட் நீரேற்றத்தை தக்க வைக்கிறது. கிளைக்கோலிக் ஆசிட் இறந்த செல்களை பிரித்தெடுக்கவும், ஹைப்பர்பிக்மென்டேஷன் உருவாகாமல் தடுக்கவும் உதவுகிறது.
காப்பர் பெப்டைட்ஸ் கொல்லாஜன் உற்பத்தியைப் பெருக்கவும், சருமத்திற்கு பலமளிக்கவும், எலாஸ்ட்டிசிட்டி அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இதிலுள்ள அல்லன்டாயின் என்ற ஆர்கானிக் கூட்டுப்பொருள் நீரேற்றம் தருவதுடன் வீக்கங்களைக் குறைத்து காயங்களை ஆற்றவும் உதவுகிறது.
ஸ்னைல் ம்யூசின் இரு வகைப்படுகிறது. ஒன்று ஃபில்ட்டர்ட்(Filtered). மற்றொன்று ஃபெர்மென்டெட் (Fermented). ஃபில்ட்டர்ட் ம்யூசின் அசுத்தங்கள் அகற்றப்பட்டு உயர் தரத்தில் வழங்கப்படுகிறது. அதிலிருந்து பெறப்படும் ஆரோக்கிய நன்மைகள் குறைவின்றி பாதுகாக்கப்படுகின்றன.
ஃபெர்மென்டெட் ஸ்னைல் ம்யூசினிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் மேம்படுத்தப்பட்டவையாகவும், சுலபமாக சருமத்திற்குள் உறிஞ்சப்பட ஏதுவானவை களாகவும் உள்ளன. மேலும், நொதிக்கச்செய்யும் செயலின்போது இதிலுள்ள
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அமினோ ஆசிட் மற்றும் பல நன்மை தரக்கூடிய கூட்டுப் பொருட்களின் அளவும் அதிகரிக்கிறது. அதன் தொடர்ச்சியாக மூப்படையும் செயலை மேலும் தாமதிக்கச் செய்யவும், சருமத்தை நீண்டகாலம் புத்துணர்வுடன் வைக்கவும் முடிகிறது.
ஆரம்ப காலங்களில் ஸ்னைல் ம்யூசின், வெட்டுக்காயம், தீக்காயம் போன்றவற்றை குணப்படுத்தும் மருந்துகளின் தயாரிப்பில் மட்டும் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகே இது அழகு சாதனப் பொருட்களின் தயாரிப்பு மற்றும் சரும ஆரோக்கியம் காக்க பயன்படும் பொருட்களின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்னைல் ம்யூசின் சேகரிப்பில் நத்தைகள் எந்தவித துன்புறுத்தல்களுக்கும் ஆளாவதில்லை.
ஸ்னைல் ம்யூசின் சேர்ந்து தயாரிக்கப்படும் அழகு சாதனப்பொருட்களிலிருந்து கிடைக்கும் நன்மைகள்:
1.சருமம் நீரேற்றம் பெறும்.
2.சிதைவடைந்த சரும செல்களுக்கு புத்துயிர் கொடுத்து புதுப்பிக்க முடியும்.
3.சருமத்திலுள்ள காயங்கள் மற்றும் தழும்புகளை ஆற்ற லாம்.
4.சருமத்தில் சுருக்கம் மற்றும் ஃபைன் லைன் தோன்றுவதை தடுக்கலாம். முதுமைத் தோற்றம்
பெறுவதைத் தள்ளிப்போடலாம். கொல்லாஜன் உற்பத்தி அதிகரிக்கும்.
5.அதிலுள்ள கிளைக்கோலிக் ஆசிட் இறந்த செல்களை
பிரித்தெடுக்கவும், ஸ்கின் டோனை மேம்படுத்தவும் உதவும்.
6.இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் சருமத்தின் எரிச்சலை நீக்கும். சிவந்த தடிப்புகளை குணமாக்கும். சூரியக் கதிர்களால் உண்டாகும் பாதிப்புகளை குணமாக்கும்.
சீரம், மாய்ச்சரைசர், மாஸ்க், ஐ கிரீம் போன்ற பல வகையான சருமப் பாதுகாப்புப் பொருட்களில் ஸ்னைல் ம்யூசின் ஒரு சுறு சுறுப்பான கூட்டுப் பொருளாக சேர் க்கப்படுகிறது. உலர் சருமம் உள்ளவர்கள் ஸ்னைல் ம்யூசின் சேர்க்கப்பட்ட மாய்ச்சரைசர் பயன் படுத்தலாம்.
ஆயிலி மற்றும் பருக்கள் தோன்ற வாய்ப்புள்ள சருமம் உள்ளவர்கள் லேசான, ஜெல் சேர்த்த மாய்ச்சரைசர் அல்லது சீரம் போன்றவற்றை உபயோகிக்கலாம். தாமதமாக மூப்பை எதிர்கொள்ள விரும்புவோர் அதிக அளவு ஸ்னைல் ம்யூசின் சேர்க்கப் பட்ட சீரம் அல்லது கிரீம்களை உபயோகிக்கலாம். அதாவது தனிப்பட்ட நபர், அவர் கொண்டுள்ள சரும வகை மற்றும் தேவைக்கேற்ப ஸ்னைல் ம்யூசின் சேர்க்கப்பட்ட பொருட்களை தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம்.
அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் உடலில் ஒரு சிறு பகுதியில் உபயோகித்துப் பார்த்த பின் முடிவெடுக்கலாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின் முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.