

சிலருக்கு நகைகள் வாங்கப்பிடிக்கும். ஆனால் அவற்றை புதிதுபோல பராமரிக்கத் தெரியாது. சரியாக பராமரிக்கப்படாத நகைகள், குறிப்பாக கல் நகைகள் சில வருடங்களிலேயே பொலிவிழந்து, சின்ன சின்ன டேமேஜ்களுடன் காணப்படும். லைட் வெயிட் நகையென்றால் தானே நசுங்கும்.
நாங்கள் கெட்டியான நகைகளைத்தான் வாங்குகிறோம் என்று கூற வேண்டாம். கெட்டியான நகைகளைப் பராமரிப்பது என்பது இன்னும் கஷ்டமான காரியம். அவற்றிலுள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள் சீக்கிரமாக அழுக்கு சேர தொடங்கி நாளடைவில் சரி வர பராமரிக்காமல் இருந்தால் நகையின் நிறம் மங்கிவிடும்.
நகைகளை வாங்கிவிட்டால் மட்டும் போதுமா? அதை எப்படி பராமரிப்பது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். காஸ்ட்லியான கற்கள் பதித்த நகைகளை வெதுவெதுப்பான நீர் மற்றும் லேசான சோப்பு கொண்டு மென்மையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.
பொதுவாகவே பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் நகைகள் என்பது மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக கல் பதித்த நகைகள் மிகவும் பிடிக்கும். ஆனால் பலரும் கற்கள் பதித்த நகைகளை வாங்கத் தயங்குவார்கள். காரணம் அவற்றை தினமும் அணிந்தால் ஒளி மங்கிப் போய்விடும் என்பதுதான்.
இதற்கான எளிய தீர்வு, நகைகளை அணிந்துவிட்டு கழற்றி வைக்கும்பொழுது அப்படியே வியர்வை, தூசி, எண்ணெய் பிசுக்கு கலந்த கோலத்தில் வைக்காமல் மைல்டான ஷாம்பூ கலந்த வெதுவெதுப்பான நீரில் மென்மையான பிரஷ் அல்லது பனியன் துணியால் மெதுவாகத் துடைத்து, பிறகு தண்ணீரில் நன்கு கழுவி நீராவியில் காண்பிக்க அவற்றில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்கி புத்தம் புதிதுபோல ஜொலிக்கும்.
சுத்தம் செய்யும் முறை:
பற்பசை, பல்பொடி அல்லது கடுமையான ரசாயனங்கள் (அமோனியா, ப்ளீச் போன்றவற்றை) கொண்டு கற்கள் பதித்த நகைகளை தேய்க்கக்கூடாது. இது கற்களின் பளபளப்பைக் குறைத்துவிடும்.
நகைகளைக் கழுவிய பின் பேப்பர் டவல் அல்லது டிஷ்யூ கொண்டு துடைக்கக் கூடாது. இது கீறல்களை ஏற்படுத்தலாம். மென்மையான பருத்தித் துணியால் ஒத்தி எடுப்பதே சிறந்தது.
சுத்தம் செய்ய கடினமான பிரஷ்களை பயன்படுத்தக் கூடாது. ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீருடன் சில துளிகள் மைல்டு சோப் அல்லது ஷாம்பூ சேர்க்கவும். நகைகளை சிறிது நேரம் அதில் வைத்து மிக மென்மையான பிரஷ் கொண்டு அழுக்குகளை மெதுவாக நீக்கவும். சுத்தமான தண்ணீரில் அலசிவிட்டு, மென்மையான துணியால் ஈரம் இல்லாமல் துடைத்து வைக்கவும்.
பாதுகாக்கும் முறைகள்:
நகைகளை நகைப்பெட்டியில் பராமரிக்கிறீர்கள் என்றால் நகைப்பெட்டி கடினமானதாக இல்லாமல் சாட்டின் துணியால் வடிவமைக்கப்பட்டு அதனுள் வளையல்கள், மோதிரங்கள், நெக்லஸ்கள், கற்கள் பதித்த நகைகளை ஸ்டோர் செய்வதற்கான தனித்தனியான ஸ்டோரேஜ் செக்க்ஷன்கள் இருக்கின்றனவா என்று பார்த்து வாங்கிப் பயன்படுத்த வேண்டும். ரெகுலர் மாடல் நகைப்பெட்டிகள் என்றால் அவற்றில் தனித்தனியே ஸ்டோர் செய்யும் வசதிகள் இருக்காது.
ஒரு நகையுடன் இன்னொரு நகை உராயாதவாறு தனித்தனி பவுச்கள் அல்லது மென்மையான துணி பதிக்கப்பட்ட பெட்டிகளில் வைக்க வேண்டும். கற்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து சேதமடையாமல் இருக்க கல் நகைகளை தனித்தனி பெட்டிகளில் வைப்பது பாதுகாப்பானது.
நகைகளை வைக்கும்போது வெள்ளை காட்டன் (பருத்தி) துணியால் மூடிவைப்பது ஈரப்பதத்தைத் தடுக்கும்.
வைர நகைகள் முத்து, பவளம் போன்ற மென்மையான கற்களை எளிதில் கீறிவிடும். எனவே அவற்றைத் தனித்தனியாக பாதுகாப்பது அவசியம்.
நகைகளை எப்பொழுதும் நேரடி சூரிய ஒளிபடாத, குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.
தினசரி பயன்பாட்டின் பொழுது கவனிக்க வேண்டியவை:
எப்பொழுதும் மேக்கப், ஹேர் ஸ்ப்ரே மற்றும் வாசனை திரவியங்கள் பயன்படுத்திய பிறகே நகைகளை அணிய வேண்டும். பெர்ஃப்யூம், லோஷன் மற்றும் சோப்பு பயன்பாட்டுக்குப் பிறகு அணிவதுடன், கழற்றும்போது அப்படியே உள்ளே வைக்காமல் மென்மையான பருத்தித் துணியால் துடைத்துவிட்டு வைக்க வேண்டும்.
சமையல் செய்யும்போதும், நீச்சல், குளியல், வீட்டு வேலைகள், உடற்பயிற்சி செய்யும் பொழுதும் கற்கள் பதித்த நகைகளை கழற்றி வைப்பது நல்லது. வியர்வை மற்றும் குளோரின் தண்ணீர் கற்களின் அமைப்பைச் சேதப்படுத்தும்.
நகைகளை போடுவதற்காக எடுக்கும் பொழுது கற்களைத்தொடாமல் அதன் உலோகப் பகுதியை மட்டும் பிடித்துக் கையாள்வது நல்லது.
வைரம், மரகதம், ரூபி போன்ற விலை உயர்ந்த கற்கள் பதித்த நகைகளை மிகவும் கவனமாகக் கையாள்வது அவசியம். தவறான பராமரிப்பு முறைகளால் கற்களில் கீறல்கள் விழவோ அல்லது உடையவோ வாய்ப்புகள் அதிகம்.
உங்கள் விலைமதிப்பற்ற கல் பதித்த நகைகள் நிறம் மங்காமலும், கீறல்கள் விழாமலும் வாழ்நாள் முழுவதும் புத்தம் புதிது போல ஜொலிப்பதற்கான சிறந்த பராமரிப்பு நுட்பங்களை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.