
திருமணம் செய்து கொள்ள போகும் பெண்கள் மேக்கப்பிற்கு மட்டுமில்லாமல் சிகை அலங்காரத்திற்கும் தனி முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதிலும் ‘ஜடை அலங்காரம்’ தற்போது பெண்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. முன்பெல்லாம் ஜடை அலங்காரம் என்றால் பாரம்பரிய அலங்காரமான குஞ்சம் வைத்து பின்னுவதாக இருந்தது. ஆனால், தற்போது மார்டனாக பல டிசைன்கள் வந்துவிட்டது. அதில் உள்ள வகைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1.தற்போது பட்டுப்புடவைகளுக்கு ஆரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிளவுஸை தான் பெண்கள் விரும்புகிறார்கள். புடவைக்கு ஏற்றார்போல பிளவுஸை எப்படி கஸ்டமைஸ் செய்து தருகிறார்களோ அதுப்போலவே வேலைப்பாடுகளை தனியாக ஒரு நெட்டில் செய்து ஜடைக்கு பயன்படுத்தலாம். பிளவுஸ் மற்றும் ஜடை அலங்காரம் இரண்டுமே மேட்சாக அணிவது தற்போது மணப்பெண்கள் மத்தியில் மிகவும் டிரெண்டாகி வருகிறது.
2.பெண்களின் கூந்தல் நீளத்திற்கு தகுந்தார் மாதிரி வரிசையாக ஜடை பிள்ளையை பயன்படுத்தி அழகாக பின்னிக்கொள்ளலாம். இது பார்ப்பதற்கு பாரம்பரியமாகவும், அழகாகவும் இருக்கும்.
3.ஜடை அலங்காரத்தில் தற்போது டிரெண்டிங்கில் இருப்பது ஜடையில் நகைகளையும் சேர்த்து பின்னி அலங்கரிப்பதுதான். இப்படி ஜடை அலங்காரம் செய்யும் போது அது மிகவும் ரிச்சான லுக்கை மணப்பெண்ணுக்கு கொடுக்கும்.
4.ஜடை அலங்காரம் இன்னும் மார்டன் டச்சில் தெரிய வேண்டும் என்று நினைத்தில், ஜடைக்கு நடுவே செயின் பயன்படுத்தி பின்னுவது பார்க்க இன்னும் சிம்பிளாகவும், அழகாகவும் தெரியும்.
5.சமீபத்தில் நடந்த அம்பானி வீட்டு திருமணத்தில் நீத்தா அம்பானி ஜடை அலங்காரமாக பூவை பயன்படுத்தியது டிரெண்டாக உள்ளது. ஜடை முழுக்க பூவை வைத்து அலங்கரிப்பது அல்லது நெட்டில் பூவை வைத்து ஜடை அலங்காரம் செய்வது இரண்டுமே சிகை அலங்காரத்தை மேம்படுத்தி மணப்பெண்ணை ஜொலிக்க வைக்கும்.
ஆந்திர மாநிலத்தில் செய்யப்படும் திருமணத்தில் ‘பெல்லி பூ ஜடை' என்று பாரம்பரியமாக மணப்பெண்ணுக்கு ஜடை அலங்காரம் செய்வார்கள். தெலுங்கில் ‘பெல்லி’ என்றால் திருமணம், ‘பூலா’ என்றால் பூக்கள், ‘ஜடா’ என்றால் ஜடை என்று பொருள். மணப்பெண்ணின் கூந்தலில் பூக்களை வைத்து அலங்கரிப்பது என்பது பெண்மையையும், அழகையும், மங்களகரமாகவும் கருதப்படுகிறது. இவ்வாறு அலங்காரம் செய்வது மணப்பெண்ணின் மொத்த லுக்கையும் உயர்த்திக் காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.