

சம்மர் வந்துவிட்டது. அனைவரும் அடிக்கடி சுற்றுலா, பயணம் மேற்கொள்வது இனிமேல் நடைமுறைக்கு வரும். வெளியில் சுற்றி விட்டு வந்தால் முகம் கருமை படிந்து மாசுகளால் சூழப்பட்டிருக்கும். அவற்றை எளிமையான முறையில் எப்படி போக்கலாம். நம்மை நாமே புத்துணர்ச்சியுடன் எப்படி காக்கலாம் என்பதை இப்பதிவில் காண்போம்.
எப்பொழுது வெளியில் அலைந்துவிட்டு வந்தாலும் குளிர்ந்த நீரால் முகம், கண்கள், கால், கைகளை நன்றாக தேய்த்து கழுவிவிட்டு வரும் பொழுது சோர்வடைந்த கண்களுக்கு ஒரு ஒளி கிடைக்கும். இதனால் எப்படிப்பட்ட சோர்வும் நீங்கி நல்ல ஒரு புத்துணர்ச்சி கிடைத்து விடும்.
சில வீடுகளில் எப்பொழுதும் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் வைத்திருக்க மாட்டோம். இனிமேல் ஐஸ் க்யூப்களை அதிகமாக வைத்திருந்தால் நல்லது. இந்த ஐஸ்கட்டியில் ஒன்றை எடுத்து ஒரு துணியில் சுற்றி கண்களைச் சுற்றி ஒத்தடம் கொடுப்பது போல் ஒத்தி எடுத்தால் கருவளையம் வராது. தூசு படிந்து இருந்தாலும் இந்த ஒத்தடத்தால் சுத்தமாகி தூய்மையாக காட்சியளிக்கும். கண்களில் களைப்பு தெரியாது.
வெட்டி வேர், வேப்பிலையையும் ஒன்றாக சேர்த்து தண்ணீரில் போட்டு நல்ல வெயிலில் வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து அதை குளிர்ச்சியான இடத்தில் வைத்து முகம் கழுவலாம் குளிக்கலாம். முகத்தில் படிந்த கருமையை போக்கி எண்ணெய் பிசுக்கை அகற்றும். இதனால் முகத்தில் பருக்கள் வருவது தடைபடும்.
தர்பூசணியை எப்பொழுது எல்லாம் சாப்பிடுகிறீர்களோ அப்பொழுதெல்லாம் அந்த சாற்றை பஞ்சில் நனைத்து முகத்தில் பூசி குளிர்ந்த நீரில் முகம் கழுவி வர அழுக்குகளும் கருமையும் நீங்கி முகம் பளபளப்பாகும்.
பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், வேப்பிலை அனைத்தையும் பொடித்து வைத்துக்கொண்டு தண்ணீரில் கரைத்து உடம்பில் பூசி 20 நிமிடம் ஊறவிட்டு தேய்த்து குளித்தால் வியர்க்குரு, கொப்புளங்கள், வேனல் கட்டிகள் வராது.
சந்தன வில்லைகள், மிக்ஸியில் பொடித்த சுத்தமான மஞ்சள் தூள், வேப்பிலை அனைத்தையும் நன்றாக அரைத்து வைத்துக்கொண்டு தினசரி தேய்த்து குளித்தால் வேர்க்குரு வருவதைத் தடுக்கலாம்.
புதினா இலைகள் அதிகமாக கிடைக்கும்பொழுது தண்ணீரில் அதை நன்றாக கசக்கிவிட்டு குளித்தால் வியர்வை நாற்றம் போய்விடும்.
கஸ்தூரி மஞ்சளை உபயோகிக்கும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் கலந்து உடலில் பூசிக்கொண்டு பயத்த மாவு தேய்த்து குளிக்கலாம். இதனால் வியர்வை நாற்றம் போய்விடும். சருமத்தை அழகாக பாதுகாக்கும் சரியான சன் ஸ்கிரீன் இதுவே.
கஸ்தூரி மஞ்சளை குளிக்கும்போது தனியாக பூசி குளித்தாலும் வியர்வை நாற்றம் போகும்.
சந்தனம் , அகில், வெட்டிவேர் இவற்றை தண்ணீரில் கலந்து குளித்து வர நல்ல குளிர்ச்சி கிடைக்கும். எந்தவிதமான கட்டிகளும் வராது. சிலருக்கு கோடையில் சருமத்தில் அரிப்பு தடிப்பு என்று இருந்தாலும் இதனால் போய்விடும்.
வெட்டிவேரை பானை தண்ணீரில் போட்டு குடிக்கலாம். சர்பத் ஜூஸ் வகைகளில் கலந்து குடிக்கலாம். இதனாலும் உடல் குளிர்ச்சி பெறும். வேணல் நாள் கட்டிகளும் வராது.
தினசரி துளசி ,வேப்பிலை, மஞ்சள் என்று இவற்றை தண்ணீரில் நீண்ட நேரம் போட்டு வைத்திருந்து குளித்தால் கோடையில் வியர்வையால் நச நசத்து அரிப்பது அடங்கும். இதனால் சருமம் பாதுகாக்கப்படும்.
சிலர் மஞ்சளை உரைத்து பித்த வெடிப்புகளில் தடவுவார்கள். அது போல் செய்யும்பொழுது எல்லோருக்கும் அது ஒத்துக்கொள்ளாது. வெடிப்பை அதிகப்படுத்தும். அதனால் அதை விடுத்து எண்ணெய்யுடன் கலந்து தடவ பித்த வெடிப்பு வராது தடுக்கலாம்.
இதுபோல் எளிய முறைகளை பயன்படுத்தி கோடையில் சருமத்தை பாதுகாக்கலாம்.