
நம் சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்க புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் மிக அவசியம்.
பழங்கள், பழச்சாறுகள் முக்கியமாக எலுமிச்சை ஆரஞ்சு மற்றும் தேன் முதலியவை இரத்தத்தைச் சுத்திகரித்து நம் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவும். அதுவும் கோடை காலத்திற்கு இவை மிக அவசியம்.
பூசணி, வெள்ளரி, முலாம்பழம், தர்ப்பூசணி, இளநீர் இவற்றைத் தவிர சிறிது சீரகத்தைப்போட்டு காய்ச்சி அந்த நீரை அருந்தினால் கோடை காலத்தில் நிறம் மங்காமல் காக்கும். சிவப்புச் செழுமையும் அதிகரிக்கும்.
நம் சருமம் எந்த வகையாக இருப்பினும் குளிப்பதற்கு 15 நிமிடத்திற்கு முன்னால் கொஞ்சம் தேங்காய் எண்ணையை எடுத்து உடல் முழுக்க அழுத்தமாகத் தேய்த்துவிட்டு , பின்னர் பயத்தமாவு அல்லது கடலைமாவு தேய்த்துக் குளிக்க தோல் பளபளப்பாகும். சிவப்பு நிறமும் சிறிது சிறிதாக ஏற்படும்.
கோடை காலத்தில் பகல் 12 முதல் பிற்பகல் மூன்று மணிவரை வெயிலில் வெளியே செல்வதை கூடியவரைத் தடுப்பது நல்லது.
நம்மைப் போன்ற உஷ்ணம் பிரதேசத்தில் வசிப்பவர் களுக்கு எல்லா காலத்திலும் ஏற்ற உடைகள் பருத்தியால் ஆன உடைகள் தான். செயற்கை இழை ஆடைகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். அதிலும் உள்ளாடைகள் கண்டிப்பாக பருத்தி ஆடைகளாக இருப்பதே நல்லது.
கோடைக்காலத்தில் மேக்கப் சாதனங்களை உபயோகிக்கு முன் சிறிது கோல்டு க்ரீம் அல்லது மாய்ஸ்டரைசர் கலந்த க்ரீமை தடவிக்கொள்ள வேண்டும். சருமம் உலராமல் மிருதுவாகவும் தளதளப்பாகவும் இருக்க உதவும். கூடியவரை கோடைகாலத்தில் மேக்கப் சாதனங்களை அதிகமாக உபயோகிக்காமல் மிருதுவான க்ரீம்களை மிதமாக உபயோகிப்பதே நல்லது.
நம் தோலின் அழகைப் பாதிக்கும் முகப்பரு. அதை வைட்டமின் ஏ க்ரீம்களை உபயோகித்துப்போக்க வேண்டும். கையால் கிள்ளிவிடக் கூடாது.
இறுக்கமான ஆடை அணிதல், வெயிலில் சுற்றுதல், காரம் மசாலா கலந்த உணவுகளை அதிகம் உட் கொள்ளுதல், மேக்கப் சாதனங்களை அடிக்கடி மாற்றுதல் முதலியவை சருமத்தின் பளபளப்புக்கு தீங்கு விளைவிக்கும்.
பிரசவித்த பெண்களுக்கு சருமத்தில் உண்டாகும் சுருக்கத்தையும் தழும்புகளையும் , கருமையையும் போக்க ஆலிவ் எண்ணை தேங்காய் எண்ணை தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பொதுவாக சருமத்தில் ஈரப்பசையும், எண்ணைப் பசையும் இருக்கும்படி பார்த்துக்கொள்வது சருமப்பாதுகாப்புக்கு உகந்த வழி.
சில பெண்களுக்கு வயிற்றில் கோடுகள்போல் சருமம் சுருங்கி காணப்படும். மஞ்சள் தூளையும் நல்லெண்ணெயும் சமஅளவில் கலந்து வயிற்றில் தேய்த்துக் குளிக்க அவை நீங்கும்.
பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் தழும்புகளை நீக்க நாட்டு மருந்து கடைகளில் இரத்தச் சந்தனத்தை வாங்கி தழும்புகளில் தடவ அவை மறையும்.
ஐஸ் கட்டியினால் முகத்திற்கு ஒத்தடம் கொடுப்பதால் முக அழகு பாதுகாக்கப்படுகிறது.