

கோடையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சரும செல்கள் சேதமடையும்.வறண்ட சருமம் உள்ளவர்கள் தங்களின் தோல் வறட்சி அடையாமல் பாதுகாக்க வேண்டும்.
அதற்குரிய எளிய வழிகள்:
தினமும் காலையில் பாலாடையுடன் கஸ்தூரி மஞ்சள் சிறிது கலந்து முகம், கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் சருமம் வறட்சி அடையாது.
கடலைமாவு ஒரு டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை, பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றை பன்னீரில் குழைத்து முகம், கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் சாதாரண சருமம், எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இதனை செய்யலாம்.
கடலைமாவு, பாசிப்பருப்பு மாவு, கஸ்தூரி மஞ்சள், காய்ந்த எலுமிச்சை தோல் பொடி அனைத்தும் கலந்து உடலில் தேய்த்து குளித்து வந்தால் வெயில் காலத்தில் உடலில் அதிகம் வியர்வை ஏற்படுவதால், உடல் துர்நாற்றம், வியர்க்குரு பிரச்னைகள் தீரும்.
கற்றாழை ஜெல், தயிர், பால் ஏடு, முட்டை வெள்ளைக் கரு அனைத்தும் சமஅளவு எடுத்துத் தலையில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளித்தால் தலை முடி உதிர்வு பிரச்னைகள் இருக்காது. வியர்வையால் தலை வறண்டும் போகாது.
பப்பாளி, தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவற்றை அரைத்து முகத்தில் ஃபேஸ் பேக்காக போட்டு அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் ஈரப்பதத்துடன் பொலிவாக இருக்கும்.
வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்துக் குறையும். அதை ஈடு செய்யத் தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும்.
பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழ வகைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இளநீர், மோர், குடிக்கலாம்.
எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழச்சாறு, இவற்றில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள உதவும். கோடையில் அதிக காரம் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
இந்த எளிய வழி முறைகளைப் பின்பற்றினால் வெயில் காலத்தில் சருமம் பாதிப்படைவதைத் தடுத்துச் சரும அழகைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.