கோடுகள், சுருக்கங்கள் இல்லாமல் முகம் பொலிவுடனும் இளமையுடனும் இருக்க அன்றாடம் சில ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
உங்கள் முகச்சருமம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். முகத்தில் கோடுகள், சுருக்கங்கள் இல்லாமல் இருந்தாலே முகச்சருமம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். சருமத்தின் ஆரோக்கியத்திற்கு எப்போதும் நாம் ஃபேஸ் பேக் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தக்கூடாது. சில உணவுகளையும் உடம்பில் சேர்க்க வேண்டும். அந்தவகையில் எந்தெந்த உணவுகள் முகச்சருமத்திற்கு பயனளிக்கக்கூடியவை என்றுப் பார்ப்போம்.
கீரை:
முகச்சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் கீரையில் அதிகம் உள்ளன. இவற்றில் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, சி, கே ஆகியவை இருக்கின்றன. அவற்றோடு ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் இரும்புச் சத்துகளும் இருக்கின்றன. இவை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து செல்களைப் புதுப்பிக்கும். இதனால், சருமம் பொலிவாகவும் இளமையாகவும் மாறும்.
தக்காளி:
தினமும் தக்காளியை எடுத்துக்கொண்டால் கூட பிரச்சனை இல்லை. வயதானாலும் சருமம் இளமையாகவே இருக்கும். குறிப்பாக, தக்காளியை சமைக்காமல், பச்சையாக எடுத்துக்கொள்வது கூடுதல் நன்மைகளை விளைவிக்கும்.
அவகேடோ:
இதில் வைட்டமின் ஈ, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற சரும ஆரோக்கியத்திற்குத் தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன. அவகேடோவில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் சருமத்தை நன்கு மாய்ஸ்ச்சராகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். சருமத்திற்கு ஏற்ற ஒரு சூப்பர் உணவு அவகேடோ.
பெர்ரி வகைகள்:
பெர்ரி வகைப் பழங்களில் நிறைய ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இவை சருமத்தில் ஃப்ரீ - ரேடிக்கல்ஸ்களின் பாதிப்பைத் தடுத்து சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்கச் செய்யும். மிகச்சிறிய அளவே இருக்கும் இந்த பெர்ரி பழங்கள், உண்மையில் அவ்வளவு நன்மைகளைக் கொண்டிருக்கும்.
நட்ஸ் வகைகள்:
நட்ஸில் வைட்டமின் ஈ, ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. இந்த நட்ஸ் சருமத்தில் ஏற்படும் அனைத்துப் பிரச்சனைகளையும் சரி செய்துவிடும். ஆகையால் இதனை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
முடிந்த அளவு இந்த ஐந்து உணவுகளையும் உங்கள் டையட்டில் தினமும் எடுத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல், ஒருநாள் விட்டு ஒருநாளாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். நல்ல பலனைத் தரும்.