உலகம் முழுவதும் தற்போது சீரற்ற கால நிலையே இருந்து வருவதால், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இலங்கையிலும் பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.
உலகம் முழுவதும் எப்போதும் வெயில் அடிக்கும் நாடுகளில் மழையும், மழைப் பெய்யும் நாடுகளில் வறட்சியும் ஏற்படுகிறது. ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் காலநிலை மாற்றத்தால் அதிக மழையுடன் சூராவளி காற்று வீசியதில் கொத்து கொத்தாக மக்கள் இறந்தனர். இந்தியாவிலேயே வட மாநிலங்களில் ஒரு காலநிலையும், தென்பகுதியில் ஒரு காலநிலையும் இருந்து வருகிறது. அதாவது, வடக்கில் வறட்சி, தெற்கில் மழை என காலநிலையின் மாற்றமானது யூகிக்க முடியாத அளவு இருக்கிறது.
இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம், சில நாடுகளில் எரிமலை வெடிப்பு, நில அதிர்வு போன்ற பேரிடர்களும் ஏற்படுகின்றன. அதேபோல் சில நாட்களுக்கு முன்னர் ஏதென்ஸ் நாட்டில் வானம் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்தது. மேலும், எப்போதும் போல் இல்லாமல், இந்தியாவில் அரோரா ஒளி தோன்றியது. இதுபோன்ற ஏராளமான இயற்கை சம்பவங்கள் காலநிலை மாற்றத்தால் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து ஏற்படுகின்றன.
இயற்கை ஒருபக்கம் மக்களை காவுவாங்குகிறது என்றால், மனிதர்கள் போரினால் மறுபக்கம் பல உயிர்களை காவுவாங்குகிறார்கள். இயற்கைக்கும் மேல் மனிதர்களே தற்போது சீற்றம்கொண்டுள்ளுனர். அதற்கு ஒரு உதாரணம் சமீபத்தில் ரஃபா மீது நடத்தப்பட்ட தாக்குதல்.
அந்தவகையில் தற்போது இலங்கையில் காலநிலை மாற்றத்தால், தொடர்ந்து உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. பொருளாதார வீழ்ச்சியின் படுகுழியிலிருந்து இப்போதுதான் இலங்கை மீண்டு வந்தது. அப்படியிருக்க தற்போது ஒரு புதிய பிரச்சனை உருவாகியுள்ளது. அந்தவகையில் இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. அதிக மழை பெய்து பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் 6 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 5 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 3 பேரும், காலி மாவட்டத்தில் 2 பேரும், கம்பஹா மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக 08 மாவட்டங்களில் 21,353 குடும்பங்களைச் சேர்ந்த 84,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதேபோல் இலங்கை அரசு, காலநிலை மாற்றத்திலிருந்து தப்பிக்க பல ஏற்பாடுகளை செய்து வருகிறது.