
மருதாணி ஒரு மங்கலப் பொருள். மருதாணி ஒரு அழகு சாதனப் பொருள். (The glories of henna) பண்டிகை, விழாக்காலம் என்று எது வந்தாலும் மருதாணி போட்டுக்கொள்வது என்பது அனைவருக்கும் பிடித்தமான விஷயம். குறிப்பாக கை, கால், விரல்களை அழகுப்படுத்தவும், தலை முடியை எழில் குறையாமல் தைத்துக்கொள்ளவும் அதிகம் பயன் கொண்டது. அவற்றின் அழகியல் குறிப்புகள் இதோ:
மருதாணியை கையில் வைத்து அழகுபடுத்திக் கொள்வது அனைவருக்கும் பிடித்த விஷயம். அப்படி மருதாணியை கையில் இட்டு காய்ந்த பிறகு அதன் மேல் சிறிதளவு சர்க்கரை கலந்த எலுமிச்சை சாற்றையும் ஊற்றி ஈரப்படுத்தி, பின்னர் காயவிட்டால் கைகளுக்கு அழகான அரக்கு சிவப்பு நிறம் கிடைக்கும்.
மருதாணி விழுதுடன் சிறிது கோந்து கலந்த இட்டுக் கொண்டால் உதிராமல் இருக்கும்.
அவுரி இலை, மருதாணி இலை இந்த இரண்டையும் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு, இந்த எண்ணையை தலையில் தடவிவந்தால் முடி கறுப்பாக மாறும்.
மருதாணி இலையை சுத்தம் செய்து மைய அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் உலர வைத்தால் மாத்திரை போல் கிடைக்கும். பின் இதனை சலித்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தடவி வர முடி வளர்ச்சி கருமையாக இருக்கும்.
மருதாணி இலையை மைய அரைத்து இரவு படுக்கப் போகும்போது தலையில் தேய்த்து சிறிது காய்ந்ததும் படுத்துவிடலாம். மறுநாள் காலை எழுந்து குளித்தால் முடி சிறிது நிறம் மாறியிருக்கும். இம்மாதிரி தொடர்ந்து செய்து வர நரை மறையும்.
மருதாணி இலையை சுத்தம் செய்து எலுமிச்சம் சாறு விட்டு மைய அரைத்து கால் வெடிப்பு உள்ள இடத்தில் போட்டு வர கால் வெடிப்பு குணமாகும். இதனால் பாதங்கள் அழகு பெறும்.
அம்மை கண்டுள்ள காலங்களில் கண்களுக்கு அம்மையால் வறட்சி, கண்களின் கீழ் கருவளையம் வராமல் இருக்க மறுதோன்றி இலையை அரைத்து இரு பாதங்களிலும் கட்டலாம். இதனால் கண்கள் வறட்சியின்றி எப்பொழுதும்போல் இருக்கும். கருவளையம் எட்டிப் பார்க்காது. இரண்டு ஒருமுறை கட்டினால் போதும் அதிகம் கட்டக்கூடாது.
கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணி பொடி, தேங்காய் பால், தேங்காய் எண்ணெயையும் சேர்த்து குழைத்து தலையில் மசாஜ் செய்யவும். அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கலாம். வறட்சி நீங்கி பளபளப்பு கிடைக்கும்.
மருதாணியையும் கருவேப்பிலையையும் அரைத்து சாறெடுத்து சம அளவு தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தடவிவர முடி கருமையாகவும், பளபளப்புடனும், நீண்டும் வளரும்.
மருதாணி, கருவேப்பிலை மற்றும் வேப்பிலை மூன்றையும் வெயிலில் உலர்த்தி பொடி செய்து பொடியினை வெள்ளைத் துணியில் கட்டி எண்ணெயில் போட்டு அந்த எண்ணெய்யை உபயோகித்து வரலாம். பொடுகு வராமல் தடுப்பதோடு கூந்தல் கருப்பாகவும் வளரும்.
மருதாணி இலைக்கு தலைமுடியின் வறட்சியைப் போக்கி மிருதுவாக்கும் தன்மை உண்டு. ஆதலால், வேப்பிலை, துளசி இலை, மருதாணி இலை அவற்றை எட்டு கப் நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி சூடு ஆறிய பிறகு தலையில் தடவி ஒருமணி நேரம் கழித்து குளித்து வந்தால் கூந்தல் பட்டு போல பளபளப்பாக இருக்கும்.