
சரும பராமரிப்பில் உதவும் மூலிகைகளில் வெட்டிவேரும் ஒன்று. இது தோலில் ஏற்படும் அழற்சி, முகத்தில் உண்டாகும் பருக்கள் ஆகியவற்றை போக்கக்கூடியது. வெட்டிவேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறுமணத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடியது.
வெட்டிவேர் பொடியை தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் நன்கு குழைத்து முகத்தில் தடவிக்கொள்ளவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர முகம் கரும்புள்ளிகள், தழும்புகள் நீங்கி பளிச்சென்று ஜொலிக்கும்.
ஃபேஸ் பேக்:
வெட்டி வேருடன் காய்ந்த ரோஜா இதழ்கள், மகிழம்பூ, சம்பங்கி விதைகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு காயவைத்து மிஷின் கொடுத்து பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவும். வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒரு ஸ்பூன் அளவில் பொடியை எடுத்து தண்ணீரில் குழைத்து முகத்தில் ஃபேஸ் பேக் போடவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர தோலில் சுருக்கம் நீங்கி இளமையான தோற்றத்தைக் கொடுக்கும்.
பருக்களும் அதன் வடுக்களும் மறைய:
சிலருக்கு எப்போது பார்த்தாலும் வியர்த்து, எண்ணெய் வழியும். இதனால் பருக்களும் அதிகமாக இருக்கும். இதற்கு நறுமணமான ஒரு பேக் போடலாம் வாருங்கள்.
வெட்டிவேரை சின்னத் துண்டுகளாக நறுக்கி ஒரு ஸ்பூன் அளவில் எடுத்துக்கொண்டு, அத்துடன் கொட்டை நீக்கிய கடுக்காயை சிறிது சேர்த்து இரவு முழுவதும் நீரில் ஊறவிடவும். காலையில் அதை அரைத்து பருக்கள் மற்றும் பருக்களின் வடுக்கள் மீதும் தடவி வரவும். வெட்டிவேரில் உள்ள அழற்சிப் பண்புகள் சருமத்தின் நுண்துளைகளில் உள்ள பாக்டீரியாவை பெருகவிடாமல் தடுக்கும். இதனால் பருக்களும், வடுக்களும் மறையும்.
தேங்காய் எண்ணெயுடன் வெட்டிவேரை பொடியாக நறுக்கி சேர்த்து ஊறவிட்டு தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்துவர முடி உதிர்வது குறைவதுடன் நீண்டு வளரவும் செய்யும்.
பாசிப்பயிறு 1/4 கிலோ, வெட்டிவேர் 50 கிராம் இரண்டையும் சேர்த்து மிஷினில் நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் குளிக்கும் பொழுது சோப்பிற்கு பதிலாக இதனை தேய்த்து குளிக்க உடம்பில் வரும் சின்ன சின்ன உஷ்ண கட்டிகள் மறைந்து உடல் குளிர்ச்சி பெறும். நல்ல நறுமணமும் தரும்.
வெட்டிவேர் எண்ணெயின் ஈரப்பதமூட்டும் பண்புகள் அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றதாக இருக்கிறது. இது சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும், மிருதுவாகும், பொலிவுடனும் வைத்திருக்கிறது. வெட்டிவேர் எண்ணெய் வயதான தோற்றத்தைக் கொடுக்கும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது.
அரோமாதெரபி:
வெட்டிவேர் எண்ணெய் அதன் அமைதிப்படுத்தும் குணத்திற்கும், நறுமணத்திற்கும் பெயர் பெற்றது. இதன் வளமான வாசனை மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த எண்ணையை சில துளிகள் குளிக்கும் நீரில் சேர்க்கலாம் அல்லது மசாஜ் எண்ணெயில் சேர்த்து மசாஜ் செய்யலாம்.
வியர்வை நாற்றம் போக:
குளிக்கும் நேரில் வெட்டிவேரை சிறிது பொடியாக நறுக்கிப் போட்டு ஊற வைத்து குளிக்க வியர்வை நாற்றம் போய் உடல் புத்துணர்ச்சி பெறும். வெட்டிவேர் பொடியை தொடை இடுக்குகள், அக்குள் பகுதி போன்ற வியர்க்கும் இடங்களில் தடவி குளித்து வர வியர்வை நாற்றம் போகும்.
கூந்தல் தைலம்:
சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் சிறிது அளவு வெட்டிவேர், வெந்தயம், ஆவாரம் பூ, சடாமஞ்சி போன்ற மூலிகைகளை சேர்த்து ஊற வைத்து கூந்தல் தைலமாக பயன்படுத்த அதன் குளிர்ச்சி பண்பின் காரணமாக முடிகொட்டுவது குறைவதுடன், நன்கு நீண்டு வளரவும் உதவும்.