

சருமப் பராமரிப்பு என்பது வெறும் அழகு சார்ந்த விஷயம் மட்டுமல்ல; அது ஒருவருடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் கண்ணாடி. இன்றைய அவசர உலகில் மாசு நிறைந்த காற்று, போதிய உறக்கமின்மை மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம் காரணமாகப் பலருக்கும் முன்கூட்டியே முதுமைத் தோற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக 30 வயதைத் தொடும்போதே முகத்தில் மெல்லிய கோடுகளும், சுருக்கங்களும் எட்டிப்பார்க்கின்றன. ரசாயனங்கள் நிறைந்த விலையுயர்ந்த கிரீம்களை விட, நம் வீட்டுச் சமையலறையில் உள்ள இயற்கைப் பொருட்களே இதற்குச் சிறந்த தீர்வைத் தரும்.
சருமச் சுருக்கங்கள் தோன்றக் காரணம் என்ன?
சருமத்தில் உள்ள 'கொலாஜன்' மற்றும் 'எலாஸ்டின்' என்ற புரதங்கள் குறையும்போது சருமம் தனது இறுக்கத்தை இழந்து தளர்வடைகிறது. இதனால் கண்கள், நெற்றி மற்றும் வாய் ஓரங்களில் சுருக்கங்கள் தோன்றுகின்றன.
1. கற்றாழை:
கற்றாழை ஒரு சிறந்த இயற்கையான மாய்ஸ்சரைசர். இதில் உள்ள மாலிக் அமிலம் சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை மீண்டும் கொண்டு வர உதவுகிறது. இது சருமத்தின் ஆழமான அடுக்குகளுக்குச் சென்று ஈரப்பதத்தை அளிக்கிறது. தொடர்ந்து கற்றாழை ஜெல் பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள தழும்புகள் மறைந்து முகம் மென்மையாகும்.
பயன்படுத்தும் முறை: சுத்தமான கற்றாழை ஜெல்லை மட்டும் எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்யவும். இது சருமத் துளைகளில் உள்ள அடைப்புகளை நீக்கி புத்துணர்ச்சி தரும்.
2. முட்டை வெள்ளைக்கரு:
சருமத் தளர்ச்சியைப் போக்க முட்டையின் வெள்ளைக்கருவை விடச் சிறந்த பொருள் வேறில்லை. இதில் உள்ள புரதச்சத்து சருமத்தைச் சுருக்கி, இளமையாகக் காட்ட உதவும்.
பயன்கள்: இது சருமத்தில் உள்ள பெரிய துளைகளை சிறிதாக்கி, முகத்தை உடனடியாக இறுக்கமாக்கும் தன்மையைக் கொண்டது. எண்ணெய்ப் பசையுள்ள சருமத்திற்கு இது மிகச்சிறந்தது.
பயன்படுத்தும் முறை: முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு அடித்து முகத்தில் தடவ வேண்டும். இது காய்ந்ததும் முகம் இழுப்பது போல இருக்கும். அப்போது குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பளிச்சென்று மாறும்.
3. பப்பாளி:
பப்பாளி ஒரு சிறந்த 'எக்ஸ்ஃபோலியேட்டர்' ஆகச் செயல்படுகிறது. இதில் உள்ள பாப்பைன் என்ற நொதிப்பொருள் சருமத்திற்குப் புத்துயிர் அளிக்கிறது.
பயன்கள்: கனிந்த பப்பாளியில் உள்ள சத்துக்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புதிய செல்கள் வளர்வதை ஊக்குவிக்கும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி இயற்கை நிறத்தைக் கூட்டும்.
பயன்படுத்தும் முறை: 2 ஸ்பூன் பப்பாளி விழுதை முகத்தில் தடவி மென்மையாகத் தேய்ப்பதன் மூலம் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து சுருக்கங்கள் குறையும்.
‘மேஜிக்’ ஃபேஸ் மாஸ்க் - செய்முறை;
இந்த மூன்றையும் தனித்தனியாகப் பயன்படுத்தலாம் என்றாலும், இவற்றைச் சேர்த்து ஒரு ஃபேஸ் மாஸ்க்காகப் போடும்போது அதன் பலன் இரட்டிப்பாகும்.
தேவையான பொருட்கள்:
சுத்தமான கற்றாழை ஜெல் - 2 டேபிள் ஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு – 1,அல்லது 2 ஸ்பூன் கனிந்த பப்பாளி விழுது
கெட்டித் தயிர் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 5 சொட்டுகள்
செய்முறை: ஒரு கிண்ணத்தில் முதலில் கற்றாழை ஜெல் மற்றும் முட்டை வெள்ளைக்கரு அல்லது பப்பாளி விழுதை சேர்த்து நன்கு நுரை வரும் வரை கலக்கவும். பின் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும் (சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் எலுமிச்சையைத் தவிர்க்கவும்). முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவித் துடைத்த பின், இந்தக் கலவையை முகத்தில் கீழிருந்து மேலாக தடவவும். 20 நிமிடங்கள் கழித்து, மாஸ்க் நன்கு காய்ந்து முகம் இழுப்பதைப் போன்ற உணர்வு வரும்போது குளிர்ந்த நீரால் கழுவவும். முகசுருக்கங்கள் நீங்கி பொலிவாக காட்சியளிக்கும்.