டை அடிக்கும் போது இதெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்!

Hair Dye
Hair Dye

நரைமுடியை கருமையாக மாற்ற பலரும் டை அடிக்கின்றனர். அப்படி டை அடிக்கும் பலரும் செய்யும் தவறுகளை நீங்கள் செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காண்போம். 

இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும், தலைமுடி ஆரோக்கியத்தில் சிலர் அலட்சியமாக இருக்கின்றனர். இதனால் தான் இளவயதில் நரைத்தல் மற்றும் வழுக்கை உண்டாகிறது.

இளநரையை மறைக்க பலரும் டை அடித்துக் கொள்கின்றனர். இது அப்போதைக்கு மட்டும் தான் தீர்வாக இருக்கும். மேலும் இப்படிச் செய்வதால் பக்க விளைவுகள் ஏற்படும். நீங்கள் டை அடிக்கும் போது எம்மாதிரியான தவறுகளை செய்யக் கூடாது என தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

நரைமுடியை மறைப்பதற்காக இளைஞர்களும், வயதானவர்களும் சலூன் மற்றும் அழகு நிலையங்களுக்குச் செல்கின்றனர். ஆனால் கொரோனா வந்து சென்று பிறகு, பலரும் வீட்டிலேயே டை அடித்துக் கொள்கின்றனர். இயற்கையான ஹேர் டை மற்றும் செயற்கையான ஹேர் டை என இரண்டு விதங்களில் டைகள் விற்கப்படுகின்றன. இயற்கையான ஹேர் டை எல்லோருக்கும் ஒத்துப்போகும் என்றாலும், செயற்கையான ஹேர் டை ஒரு சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.

செயற்கை ஹேர் டையைப் பயன்படுத்துவதற்கு முன், முதலில் கை முடிகளில் அல்லது காதோரம் சிறிதளவு கலந்து தேய்த்து நமைச்சல், எரிச்சல் அல்லது அரிப்பு என ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை பரிசோதித்துப் பார்க்க வேண்டும். இப்படி எதுவும் ஏற்படவில்லை என்றால் மட்டும் தான் தலை முழுக்க டை பயன்படுத்த வேண்டும்.

வீட்டில் இருந்து டை அடித்தால் முடிகள் மற்றும் உச்சந்தலையில் மட்டுமே படும்படி டை அடித்துக் கொள்ள வேண்டும். புருவம் மற்றும் முகத்தில் சாயம் தெறிப்பதை தவிர்ப்பது நலம். இல்லையேல் முகம் கருத்துப் போவதுடன், புருவங்களும் நரைக்கத் ஆரம்பித்து விடும்.

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் டை தயாரிக்க 8 வழிகள்!
Hair Dye

தலையில் டை போடுவதற்கு முன்னதாக வேறு எங்கெல்லாம் ஹேர் டை படக் கூடாது என நினைக்கிறோமோ, அங்கெல்லாம் தேங்காய் எண்ணெய் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை சிறிதளவு தடவிய பின் டை அடிக்க வேண்டும். இதையும் மீறி முகம் அல்லது மற்ற இடங்களில் ஹேர் டையின் கறை படிந்து விட்டால், சிறிதளவு ஆல்கஹாலை பருத்தி துணியில் நனைத்து தேய்த்தாலே கறை நீங்கி விடும்.

தலைக்கு டை அடித்தபின், அதிக நேரம் காய விட்டால் முடிகளில் நன்றாக ஒட்டி, நீண்ட நாட்களுக்கு இதன் பயன் கிடைக்கும் என்பது பலரின் தவறான நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் இவ்வாறு நீண்ட நேரம் கழுவாமல் இருப்பது, அனைவரும் செய்யும் மிகப்பெரிய தவறாகும். இவ்வாறு செய்வது நாளடைவில் உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்தி, கொப்புளங்களையும் ஏற்படுத்தி விடும். ஆகவே, நரைமுடியை கருமையாக மாற்ற அதிகபட்சமாக 30 நிமிடங்கள் வரை தான் டையை வைத்திருக்க வேண்டும். ஒருசில ஹேர் டைகளுக்கு வெறும் 15 நிமிடங்களே போதுமானது. ஆகவே, ஒவ்வொரு ஹேர் டையையும் அதற்கென பரிந்துரைக்கப்பட்ட நேரத்திலேயே கழுவி விடுவது மிகவும் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com