தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்து அசத்திவரும் ராஷ்மிகா மந்தனா, ரசிகர்களின் நேஷ்னல் க்ரஷாக இருந்து வருகிறார். அவர் வீட்டில் பயன்படுத்தும் பேஸ்பேக் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களின்மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மனதைக் கவர்ந்தவர் ராஷ்மிகா. குறைந்தக் காலத்திலேயே நேஷ்னல் க்ரஷாக மாறிய அவர், தனது ஃபிட்னஸையும் தனது அழகையும் பராமரித்து, பாலிவுட் படங்கள் வரை கம்மிட்டாகி வருகிறார். அந்தவகையில் அவர் தனது அழகின் ரகசியம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இது பாட்டி சொன்ன பேஸ்பேக் என்று கூறி, அதை செய்யும் முறையையும் அந்தப் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
“இது நீங்கள் குளிப்பதற்கு முன்னர் செய்ய வேண்டும். மஞ்சள் மற்றும் அரிசி மாவை சரிசமமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை நீரில் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவைத்து கழுவிவிட வேண்டும். அல்லது குளித்துவிட வேண்டும்.” என்றார்.
மேலும் சில டிப்ஸ் கூறியிருக்கிறார்.
“அதாவது முகம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க உணவில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களிலிருந்து நான் விலகியே இருப்பேன். ஒவ்வாமை உணவுகள் முகப்பரு மற்றும் வறட்சி ஆகியவற்றை ஏற்படுத்தி சருமத்தை பாதிக்கும். ஆகையால், அதுபோன்ற உணவுகளை சிறிதும் எடுத்துக்கொள்ளவே மாட்டேன். சன்ஸ்க்ரீன் மிகமிக அவசியம். அது இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே செல்லவே மாட்டேன்.
சூரிய ஒளி சருமத்தை கருமையாக்கும் என்பதால், சன்ஸ்கிரீன் மிகவும் முக்கியம். அதேபோல் வைட்டமின் சி சீரம் சருமத்தை பாதுகாப்பாகவும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ளும். ஆகையால், இதனை தினமும் பயன்படுத்துவேன். சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க மாய்ஸ்சரைசர் சிறந்தது. மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதை நிறுத்துவது நல்லதே அல்ல . நிறைய பேர் முகத்தை ஃப்ரஷாக வைத்துக்கொள்ள அடிக்கடி முகம் கழுவுவார்கள். அது மிகவும் தவறு. அதிக முறை கழுவுவதற்கு பதிலாக, வறட்சியைத் தடுக்கும்விதமாக இரண்டு முறை தினம் கழுவலாம்.” என்றார்.
இந்த விஷயங்களையே தினமும் அன்றாடம் பின்பற்றி வருவதாகவும், இதுதான் தன்னுடைய ரகசியம் என்றும் ராஷ்மிகா கூறியுள்ளார்.