
சிலருடைய சருமம் இயற்கையாகவே எப்பொழுதும் ஈரப்பதமின்றி வறண்டு காணப்படும். எவ்வளவு தண்ணீர் குடித்தபோதும் அதே நிலைதான். இதற்கு அழகு நிலையம் சென்றுதான் ஆலோசனை பெறவேண்டும் என்றில்லை.
இதற்குப் பதிலாக நம் நாட்டில் பல காலமாக சரும அழகைப் பராமரிக்க நெய் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஒரு சொட்டு நெய் சருமத்தை பூ போல மிருதுவாக்க உதவும் என்றும் படுக்க செல்வதற்கு முன் சருமத்தில் நெய் பூசிக்கொள்வது சருமத்தின் ஈரப்பசையைக் காக்கும் என்றும் கூறப்படுகிறது.
நெய்யில் உள்ள வைட்டமின் A, E, K மற்றும் கொழுப்பு அமிலங்கள் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. நெய்யில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆன்டி பாக்ட்டீரியல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் அதிகம் நிறைந்துள்ளன. நெய்யில் இயற்கையாகவே உள்ள ஈரப்பசையானது சருமத்தை உலர்ந்துவிடாமல் பாதுகாக்க உதவி புரிகிறது. உங்கள்சருமம் எண்ணெய்ப்பசை கொண்டதாயின் நெய் அதிகம் அப்ளை பண்ணுவதை குறைத்துக் கொள்ளவும்.
வயதானதின் காரணமாக உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை நெய் குறையச் செய்யும். சருமத்ன் நீட்சித் தன்மையை சரியான அளவில் வைத்துப் பராமரிக்கவும் நெய் உதவிபுரியும். நெய்யில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உங்கள் சருமம் இளமையாகத் தோற்றம் தர உதவிபுரியும். இதிலுள்ள வைட்டமின்கள் மற்றும், பிற ஊட்டச் சத்துக்களும் கண்களைச் சுற்றி வீக்கம், கருவளையம் மற்றும் ஃபைன் லைன்ஸ் உருவாகும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தும். சருமம் பளபளப்பு பெறவும் உதவும்.
நெய்யை ஓர் இயற்கையான லிப் பாம் (lip balm) மாகவும் உபயோகிக்கலாம். வறண்ட அல்லது குளிர் காலங்களில் உதட்டில் பிளவு ஏற்படுவதைத் தடுத்து உதட்டை மென்மையாக வைக்க உதவும் நெய். முரட்டுத் தோலுடன் வறண்டு போயிருக்கும் கை கால்களை நெய் தடவி மென்மையாகச் செய்யலாம். வெடிப்பு உண்டாகியிருக்கும் குதிகால்களில் இரவில் படுக்கும்போது நெய் தடவி நன்கு மசாஜ் செய்து வந்தால் வெடிப்பு மறையும்.
நெய்யுடன் சிறிது கடலை மாவு (Besan) மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து முகத்தில் மாஸ்க்காக போட்டு வரலாம். இதனால் முகத்தில் உள்ள கறைகள், பரு, நிற மாற்றம் போன்ற கோளாறுகள் நீங்கி முகத்தில் சருமம் புதுப்பொலிவு பெறும். இந்த மாஸ்கை போட்ட பின் பதினைந்து நிமிடங்கள் வைத்திருந்து பின் கழுவி விடலாம்.
நெய்யை உணவாக மட்டும் உட்கொள்ளாமல், சரும அழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவும் ஒரு பொருளாகவும் கருதி உபயோகிக்கலாம்; பயன் பெறலாம்.