மழைக்காலம் என்பது என்னதான் குளிர்ச்சியான காலமாக இருந்தாலும் இந்த காலகட்டத்தில் பல சுகாதாரப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக, கண்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம். அழுக்கு, தூசி, பாக்டீரியாக்கள் என பல காரணங்களால் கண்கள் பாதிக்கப்படலாம். எனவே, மழைக்காலத்தில் கண்களை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பதிவில் மழைக்காலத்தில் கண்களைப் பராமரிக்க உதவும் வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.
கண்களைப் பராமரிக்கும் வழிகள்:
மழைக்காலத்தில் கண்களைத் தொடுவதற்கு முன் கைகளை நன்கு சோப்பினால் கழுவ வேண்டும். கைகள் மூலமாக பாக்டீரியாக்கள் கண்களுக்குள் பரவி தொற்று ஏற்படலாம். எனவே, கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
மழைக்காலத்தில் காற்று, தூசி அதிகமாக இருக்கும். இது கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும். வெளியே செல்லும்போது கண்ணாடிகள் அணிவது நல்லது. கண்ணாடிகள் கண்களை தூசி மற்றும் காற்றில் இருந்து பாதுகாத்து எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.
என்னதான் மழைக்காலம் ஈரப்பதமான காலமாக இருந்தாலும் கண்கள் எளிதில் வறண்டு போகும். இதனைத் தவிர்க்க கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம். இது கண்களுக்கு ஈரப்பதத்தை அளித்து வரட்சியை போக்க உதவும். நீங்களாகவே சொட்டு பயன்படுத்துவதை தவிர்க்கவும். மருத்துவரின் பரிந்துரை பேரிலேயே உங்கள் கண்களுக்கு உகந்த மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
மழைக்காலத்தில் அதிகமாக மேக்கப் போடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், மேக்கப் பொருட்களில் உள்ள ரசாயனம் கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி தொற்று ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும்.
கண்களில் ஏதேனும் தூசி விழுந்துவிட்டால் அதைத் துடைப்பதற்கு தூய்மையான துணியைப் பயன்படுத்தி துடைக்க வேண்டும். அழுக்குள்ள துணியைப் பயன்படுத்துவது நல்லதல்ல. அதேபோல ஒரே துணியை பலமுறை பயன்படுத்த வேண்டாம்.
மழைக்காலங்களில் கண்களில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தாமதித்தால் தொற்று அதிகரித்து பிரச்சனையை மோசமாக்கும் வாய்ப்புள்ளது.
மழைக்காலங்களில் கண்கள் எளிதில் பாதிக்கப்பட்டு விடும் என்பதால் அவற்றைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். மேலே, குறிப்பிட்டுள்ள எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் கண்கள் தொடர்பான பிரச்சனைகளை எளிதாகத் தவிர்க்கலாம். இது குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் உடனடியாக ஒரு கண் மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது.