Eye Of the Sahara
Eye Of the Sahara

Eye Of the Sahara: பாலைவனத்திற்கு நடுவே ஒரு அதிசய கண்! 

Published on

உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டலப் பாலைவனமான சகாராவின் மையப்பகுதியில் ஒரு அற்புதமான இயற்கை அமைப்பு ஒளிந்துள்ளது. அதுதான் “சகாராவின் கண்” அல்லது “ரிச்சர்ட் அமைப்பு” என்று அழைக்கப்படும் ஒரு புவியியல் அதிசயம். வானில் இருந்து பார்க்கும்போது ஒரு பிரம்மாண்ட கண் போல தெரியும் இந்த அமைப்பு, பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளையும் ஆய்வாளர்களையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. 

இந்தக் கண் எப்படி உருவாகி இருக்கும் என்பதற்கு பல்வேறு கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும், இன்னும் யாராலும் உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை. சில விஞ்ஞானிகள் இது ஒரு பழங்கால விண்கல் மோதல் காரணமாக உருவானது என நம்புகின்றனர். ஒரு சிலர் இது பூமிக்கடியில் உள்ள பாறைகளின் உயர்வு, தாழ்வு காரணமாக உருவான ஒரு புவியியல் அமைப்பு என்று கூறுகின்றனர். தொடக்கத்தில் இதைப் பார்த்த புவியியலாளர்கள் இது ஒரு பள்ளத்தாக்கு என்றே கருதினர். என்னதான் இது ஒரு பாறை அமைப்பு என்பது தெரியவந்தது. இந்த அமைப்பில் சுமார் 10 கோடி ஆண்டுகள் பழமையான பாறைகள் உள்ளன. 

சகாரா கண் சுமார் 50 கிலோமீட்டர் விட்டம் கொண்ட ஒரு வட்ட வடிவமைப்பாகும். இது பல வளையங்களைக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த வளையங்கள் வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. அமைப்பின் மையப்பகுதி மற்ற பகுதிகளை விட உயரத்தில் இருக்கும். இது வெறும் அழகான இயற்கை அமைப்பு என்பதைத் தாண்டி, விஞ்ஞானிகளின் ஆய்வுக்கூடமாகவும் உள்ளது. இந்த அமைப்பை ஆய்வு செய்வதன் மூலம் பூமியின் புவியியல் வரலாறு, காலநிலை மாற்றம் போன்ற பல விஷயங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். 

இதையும் படியுங்கள்:
இனி காலையில் தினமும் கண் விழித்தால்... வெந்தய டீ குடியுங்கள்!
Eye Of the Sahara

இந்த கண் போன்ற அமைப்பு பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளதால், இதை ஆய்வு செய்வது மிகவும் கடினமானது. அதிக வெப்பம், மணல் புயல்கள், தண்ணீர் பற்றாக்குறை போன்ற பல பிரச்சனைகளை இங்கு ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் எதிர்கொள்கின்றனர். இருப்பினும் இது சார்ந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும், சகாரா கண் ஒரு பிரபலமான சுற்றுலா தளமாகவும் உள்ளது. மனிதர்கள் அங்கு செல்வது குறைவு என்பதால், இன்று வரை மனிதர்களால் சேதத்திற்கு உள்ளாகவில்லை. இருப்பினும் இயற்கை சீற்றங்கள் இந்த அமைப்பை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகின்றன. 

logo
Kalki Online
kalkionline.com