
காலையில் உங்கள் உதடுகளை உரசிச்செல்லும் சூடான காபி, நீண்ட நேர உதட்டுச்சாயம் மற்றும் சூரிய ஒளி போன்றவற்றின் தாக்கம் நாளடைவில் உங்கள் உதடுகளை மென்மையற்றும் நிறம் மங்கியும் தோற்றமளிக்கச் செய்யும். இப்பதிவில் கூறப்பட்டிருக்கும் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி மீண்டும் உங்கள் உதடுகளை ரோஜா இதழ் நிறமும் மென்மையும் பெறச்செய்யலாம், தெரியுமா?
இயற்கை முறையில் உதடுகள் பிங்க் நிறம் பெற:
இறந்த செல்கள் உதடுகளை நிறம் மங்கி உலர்தன்மை பெறச் செய்துவிடும். ஒரு டீஸ்பூன் சர்க்கரையுடன் தேன் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து, கலவையை உதடுகளின் மீது ஒரு நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்யவும். பின் வெது வெதுப்பான நீரால் உதடுகளை கழுவிவிடவும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை, தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் இறந்த செல்கள்
முற்றிலும் நீங்கி, புதிதான மென்மையான சருமம் வெளிவரும். இந்த சிகிச்சையை மிருதுவாக செய்தால் எரிச்சலை தடுக்கலாம்.
உதடுகளை நீரேற்றத்துடன் வைத்திருப்பது: அதிகளவு தண்ணீர் குடிப்பது, ஷியா பட்டர் அல்லது தேன்மெழுகு அல்லது ஆல்மன்ட் ஆயில் சேர்த்த மாய்ஸ்ஸரைசிங் லிப் பாம் உபயோகிப்பது, வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இறந்த செல்களை நீக்குவது போன்ற வழி முறைகள் உதடுகளை உள்ளும் புறமும் நீரேற்றத்துடன் வைத்திருக்கவும் மென்மை யடையவும் உதவும். வெயிலில் வெளியே செல்ல நேரும்போது SPF லிப் பாம் உபயோகிக்கலாம். படுக்கைக்குச் செல்லும் முன் உதட்டில் சிறிது நெய் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி அல்லது ஆல்மன்ட் ஆயில் தடவிக்கொள்வது உதடுகள் மென்மையாக தோற்றமளிக்க உதவும்.
இயற்கையான மூலிகைப் பொருட்களை பயன்படுத்துதல்:
புகை பிடித்தல் அல்லது வெயிலில் அலைந்ததால் உதடுகள் கருத்திருந்தால் அவை பளிச்சென மிளிர, லெமன் ஜூஸ் மற்றும் தேன் கலந்து உதட்டில் தடவி பத்து நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு மெதுவாக இறந்த செல்களை பிரித்தெடுக்கவும். பீட்ரூட் ஜூஸை தொடர்ந்து உதட்டில் தடவி வந்தால் காலப்போக்கில் உதட்டு சருமம் பிங்க் நிறமாக மாற வாய்ப்புண்டாகும்.
ஆலூவேரா ஜெல் தடவி வந்தால், உதட்டில் வெடிப்பு போன்ற கோளாறுகள் குணமாகும். கருமை நிறம் மற்றும் உலர்தன்மை நீங்கும். பீட்ரூட் ஜூஸ் மற்றும் ஆலூவேரா ஜெல்லை இடைவிடாது பயன்படுத்தி வந்தால் இயற்கையான பிங்க் நிறத்தின் சாயலை மீட்டெடுக்க முடியும். வெயிலில் செல்லும்போது உடலின் மற்ற இடத்து சருமம் கருப்படைவதுபோல் உதடுகளும் கருப்பதுண்டு. எனவே வெளியில் செல்லும் முன், SPF 15 அல்லது அதைவிட உயர்தரமுள்ள லிப் பாம் உபயோகித்து உதடுகளை மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துப் பாதுகாக்கலாம்.
ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல்: வைட்டமின் A, C, மற்றும் E சத்துக்கள் நிறைந்த பெரி, மாதுளை, தக்காளி, கேரட், பசலைக் கீரை போன்ற உணவுகளை உட்கொள்வதும், இரத்த ஓட்டத்தைப் பெருக்கி, சிதைவுற்ற செல்களை சீராக்கி உதடுகள் பிங்க் நிறம் பெற உதவும்.
இரவு நேர பாதுகாப்பு: படுக்கச் செல்லும் முன் எப்பொழுதும் உதட்டுச் சாயத்தை நீக்கிவிடவும். மேக்கப்புடன் உறங்குவது தோலின் நிறத்தை மாற்றிடச் செய்யும். ரோஸ் வாட்டரில் தேன் அல்லது வைட்டமின் E ஆயில் சேர்த்துக்கலந்து உதடுகளில் தடவிக்கொண்டு படுத்தால் காலையில் உதடுகள் பிங்க் நிறம் பெறும்.
மேற்கூறிய வழிமுறைகளைத் தொடர்ந்து பின் பற்றுவதன் மூலம், அதிகம் செலவு செய்யாமல் உதடுகளை ஆரோக்கியமாகவும் பளிச்சென்றும் வைத்துப் பராமரிக்க முடியும்.