

தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு காபி குடிக்க வில்லை என்றால் அன்றைய நாளே பெரும்பாலானவர் களுக்கு ஓடாது. ஆனால் நீங்கள் தினமும் குடிக்கும் காபி தலைமுடிக்கு அதிசயத்தை செய்யும் என்றால் நம்புவீர்களா?
ஆம், காபி பொடி பொடுகு மற்றும் நரைமுடி போன்ற பிரச்சனைகளைப் போக்க உதவும். சுவையான காபியை குடித்துக்கொண்டே மறுபடியும் அந்த காபி பொடியை உங்கள் தலையில் தடவி அதன் ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் அடையமுடியும்.
உங்கள் தலைமுடியை பராமரிப்பதற்கான இயற்கையான ஆற்றல் காபி பொடிக்கு உள்ளது. அது தலையில் உள்ள பொடுகை நீக்குவது மட்டுமின்றி, உச்சந்தலையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
பொடுகை விரட்டும் காபி மாஸ்க்:
தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு வாரம் இரு முறை காபி மாஸ்க் போட்டால் போதும் பொடுகு இருந்த இடம் தெரியாமல் போகும். இந்த மாஸ்க் செய்வதற்கு கால் கப் காபி பவுடர் மற்றும் வெந்நீர் போதுமானது. சூடான வெந்நீரை காபி பவுடரில் போட்டு கலக்க வேண்டும் அவ்வளவுதான். இதை உச்சந்தலையில் ஊற்றி மெதுவாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். தலைமுடியில் வேர் முதல் நுனி வரை நன்றாகத் தடவி 30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவி விடுங்கள்.
இப்படி செய்வதால் காபியில் உள்ள காஃபீன் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. இது முடி வளர்ச்சி மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் தலை குளிக்கும்போது முதலில் ஷாம்பு போட்டுவிட்டு இறுதியில் காபி தண்ணீரை தலையில் ஊற்றி அலசினால் பொடுகு பிரச்னை முற்றிலுமாக நீங்கிவிடும்.
காபியில் உள்ள அமிலத்தன்மை தலையின் pH அளவை சமன் செய்வதால், பொடுகு முற்றிலுமாக நீங்க உதவுகிறது. கூடுதலாக, இது தலைமுடிக்கு பிரகாசத்தைக் கொடுத்து பளபளப்பாக மாற்றுகிறது.
இப்படி காபியினால் தலையில் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைத்தாலும், சில சென்சிடிவான ஸ்கால்ப் உள்ள நபர்களுக்கு அதனால் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே இதனால் உங்களுக்கு எவ்விதமான எதிர்வினையும் ஏற்படாது என்பது உறுதியாக தெரிந்தால் மட்டுமே காஃபியை தலைக்கு பயன்படுத்துங்கள்.