இந்த கொளுத்தும் வெயிலிலும் உங்கள் முகம் தங்கம் போல ஜொலிசலிக்க வேண்டுமா? அப்படியானால் இந்தப் பதிவை முழுமையாகப் படியுங்கள்.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டாலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதுவும் கொஞ்ச நேரம் வெயிலில் சென்றாலே முகம் கருமையாக மாறிவிடும். இதனால் பலர் தங்களது முக அழகு குறைவதை நினைத்து அதிகம் வருத்தப்படுவார்கள். எனவே இந்த கோடை வெயிலிலும் சருமம் பளபளப்பாக இருக்க வீட்டிலேயே இயற்கையான முறையில் கிரீம் தயாரித்து முகத்தில் தடவுங்கள்.
தேவையான பொருட்கள்:
சர்க்கரை - ½ ஸ்பூன்
காபித்தூள் - ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
தக்காளி - 1
செய்முறை:
முதலில் ஒரு தக்காளிப் பழத்தை நன்கு கழுவி இரண்டாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். இந்த தக்காளி பேஸ்டில் சர்க்கரை, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்ததும், காபி தூளையும் சேர்த்து நன்கு கலக்கினால் கிரீம் பதத்திற்கு மாறிவிடும்.
பின்னர் இந்த கிரீமை முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே காய விடவும். அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவினால், முகத்தில் இயற்கையான பிரகாசத்தை நீங்கள் பார்க்கலாம். இப்படி தினசரி செய்து வந்தால், முகத்தில் உள்ள இறந்த செல்கள், கரும்புள்ளிகள், அழுக்குகள் நீங்கி முகம் பளபளவென மாறிவிடும்.
இந்த பேஸ்ட்டை தினசரி தயாரித்து முகத்தில் தடவுவது நல்லது. ஒருமுறை தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டாம். கோடைகாலத்தில் நீங்கள் உங்கள் சருமத்தை எந்த அளவுக்கு பார்த்துக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு இயற்கையான பளபளப்பு முகத்திற்குக் கிடைக்கும்.
எனவே வெயில் காலங்களில் உங்கள் சருமத்திற்கு கொஞ்சம் கூடுதல் கவனிப்பு கொடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் வெயிலின் தாக்கத்திலிருந்து சருமத்தை பாதுகாக்க முடியும்.