ஒவ்வொரு முறையும் ஸ்கின் கேர் ( Skin care ) செய்யும்போது, தனி தனியாக டோனர், சீரம், மாய்ஸ்சரைசர் என போடும்போது நேரமும், பணமும் வீணாவதுதான் மிச்சம். இது மூன்றும் ஒரே தயாரிப்பில் வாங்கி பயன்படுத்தும்போது சருமத்திற்கு அதே பலன்தான் கிடைக்கும் என்றபோது எதற்காக இந்த வீண் செலவுகள். வாருங்கள் இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம்.
மேக்கப் போடாதவர்கள் கூட, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஸ்கின் கேர் செய்வது வழக்கம். இது சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ளும். காலை, இரவு என நாளுக்கு இரண்டு முறை ஸ்கின் கேர் செய்ய வேண்டும்.
அதுவும் தினமும் செய்து வந்தால், ரிசல்ட் நன்றாகவே கிடைக்கும். தொடர்ந்து பின்பற்றுவது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம், எந்த தயாரிப்புகளை தேர்ந்தெடுப்பது என்பதாகும். நல்ல தயாரிப்புகள் ஒரு மாதத்திலேயே சருமத்தை அழகாக்கிவிடும். ஆனால், அந்த தயாரிப்புகளை வாங்குவதற்கென்றே சம்பாதிக்கும் சூழல் ஏற்பட்டுவிடுகிறது. அந்த அளவிற்கு அதிக பணம் கொடுத்து அனைத்து தயாரிப்புகளையும் வாங்குவது முக்கியமாகிவிடுகிறது.
ஆனால், நினைத்துப் பாருங்கள். மூன்று தயாரிப்புகளையும் ஒரே தயாரிப்பாக வாங்கும்போது பணம் மிச்சம் தானே. நேரமும் கூட குறையும். ஆகையால், மூன்றையும் சேர்த்து ஒரே தயாரிப்பாக வாங்குவதின் நன்மைகள் மற்றும் எப்படி வாங்குவது என்பது குறித்து பார்ப்போமா?
ஆல் இன் ஒன் தயாரிப்புகளின் நன்மைகள்:
1. இந்தத் தயாரிப்பு, உங்கள் சருமப் பராமரிப்பு வழக்கத்தை எளிமையாக்கி, நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
2. காலையில் அவசரமாக கிளம்பும்போதோ அல்லது இரவில் சோர்வாக இருக்கும்போதோ, பல தயாரிப்புகளை தவிர்த்து, ஒரே ஒரு தயாரிப்பைப் பயன்படுத்துவது மிகவும் வசதியானது.
3. மூன்று தனித்தனி தயாரிப்புகளை வாங்குவதற்குப் பதிலாக, ஒன்றை மட்டும் வாங்குவது பொருளாதார ரீதியாகப் பயனுள்ளது.
4. டோனரின் pH சமநிலைப் படுத்துதல், சீரத்தின் தீவிர ஊட்டச்சத்துக்கள் மற்றும் மாய்ஸ்சரைசரின் நீரேற்றம் ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் வழங்குவதால், சருமம் முழுமையான பாதுகாப்பைப் பெறுகிறது. இது பயணத்தின்போது மிகவும் உபயோகமாக இருக்கும். குறிப்பாக சருமப் பராமரிப்பைத் தொடங்கி புதியவர்களுக்கு இது குழப்பமில்லாத எளிய முறையாக இருக்கும்.
இந்தத் தயாரிப்பைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
சந்தையில் பல வகைகள் உள்ளதால், சரியான ஒன்றைத் தேர்வு செய்வது அவசியம். உங்கள் சரும வகை மற்றும் தேவைக்கேற்ப இதைத் தேர்வு செய்ய வேண்டும்:
1. சரும வகையை அறிதல்
எண்ணெய் பசை சருமம் (Oily Skin): 'ஜெல்' அல்லது இலகுரக ஃபார்முலாக்களைத் தேர்வு செய்யவும். இதில் சாலிசிலிக் அமிலம் (Salicylic Acid) போன்ற முகப்பருவைக் கட்டுப்படுத்தும் பொருட்கள் உள்ளதா என்று பார்க்கவும்.
வறண்ட சருமம் (Dry Skin): அடர்த்தியான, கிரீம் போன்ற (ஃபார்முலாக்களைத் தேர்வு செய்யவும். இதில் ஹையலூரோனிக் அமிலம் (Hyaluronic Acid) அல்லது செராமைடுகள் (Ceramides) போன்ற அதிக நீரேற்றம் தரும் பொருட்கள் இருக்க வேண்டும்.
சென்சிட்டிவ் சருமம் (Sensitive Skin): வாசனை (Fragrance) மற்றும் ஆல்கஹால் (Alcohol) இல்லாத, "ஹைப்போஅலர்ஜெனிக்" (Hypoallergenic) என்று குறிப்பிடப்பட்ட தயாரிப்புகளைத் தேர்வு செய்யவும்.
2. முக்கியப் பொருட்களைச் சரிபார்த்தல்:
தயாரிப்பில் நியாசினமைடு (Niacinamide), வைட்டமின் சி (Vitamin C) அல்லது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (Antioxidants) போன்ற, உங்கள் சருமத்திற்குத் தேவையான பொருட்கள் உள்ளதா என்று பாருங்கள்.
3. SPF உள்ளதா?:
பகலில் பயன்படுத்துவதாக இருந்தால், சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க, குறைந்தபட்சம் SPF 30 உள்ள தயாரிப்பைத் தேர்வு செய்வது மிக அவசியம்.
இந்தியாவில் பல பிராண்டுகள் ஆல் இன் ஒன் தயாரிப்புகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. ஆனால், உங்கள் சருமத்திற்கு ஏற்ற ப்ராண்டுகளை ஆலோசித்து வாங்குவது நல்லது.