

நமது உச்சந்தலை முடியை ஈரப்பதமாக வைத்திருப்பதற்கு சீபம் எனப்படும் இயற்கை எண்ணெய் உற்பத்தி நமது தலையில் நடக்கிறது. அது அதிக அளவில் உற்பத்தியானால் தலைமுடி எண்ணெய் பசை தன்மையுடனும், தளர்வாகவும் காட்சியளிக்கும். உங்கள் உச்சந்தலையில் 1,80,000 எண்ணெய் சுரப்பிகள் உள்ளன. அவற்றை நீங்கள் தவறாமல் கழுவவில்லை என்றால், அது அழுக்கு மற்றும் குப்பைகளைச் சேகரிக்கிறது. எனவே சல்பேட் ரசாயனம் கலப்பில்லாத ஷாம்புவை தினசரி பயன்படுத்தி தலைமுடியை சுத்தம் செய்வது, எண்ணெய் பசை அதிகரிப்பதை கட்டுப்படுத்தும். குறிப்பாக இயற்கையாகவே அதிக எண்ணெய் பசைத்தன்மை கூந்தல் கொண்டவர்கள் தினமும் ஷாம்பு போட்டு குளிப்பது இந்த பிரச்னைக்கு தீர்வாக அமையும்.
தரையில் படுத்து தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்றுபவர்கள், மாசுபாடு நிலவும் பகுதியில் வசிப்பவர்கள் தினமும் ஷாம்பு பயன் படுத்துவது கூந்தலை சுத்தமாக பராமரிக்க உதவும்.
அடிக்கடி ஷாம்பு உபயோகிப்பது தலைமுடியில் இருக்கும் இயற்கை எண்ணெய்யை அகற்றி முடி உதிர்தல், முடி வறட்சி போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதிலும் முடியில் எண்ணெய் பசைத்தன்மை குறைவாக இருப்பவர்களுக்கு இந்த பாதிப்புகள் அதிகரிக்கும். சில ஷாம்புகளில் கடுமையான ரசாயனங்கள் மற்றும் சல்பேட்டுகள் உள்ளன. அவை உச்சந்தலையை எரிச்சலடைய செய்யலாம்.
பல பெண்கள் இன்றைக்கு தலைக்கு 'ஷாம்பு" தேய்த்துதான் குளிக்கிறார்கள். இது இன்றைக்கு தொடங்கியது அல்ல, அந்தக் காலத்திலேயே ஆரம்பித்ததுதான். ஆனால், அந்தக்காலத்தில் பயன்படுத்தியவை எல்லாம் எந்தவிதமான தீங்கும் செய்யாததை ,சில ஆரோக்கியமான அந்தக்கால இயற்கை ஷாம்புகள்....
வெட்டிவேர், விலா மிச்சை வேர், கோரை, பூலான் கிழங்கு, சந்தன துகள்கள், பாசிப்பயறு என அனைத்தையும் சம எடை எடுத்து அரைத்து பொடி செய்தனர்.அதற்கு அந்த காலத்தவர்கள் வைத்த பெயர் "நலுங்குமா". இதனை குளிக்கும்போது தலைக்கு மற்றும் உடலில் அழுத்தித் தேய்த்து குளித்து வர உடலில் உள்ள கற்றாழை நாற்றம் போய் உடலும் மனமும் உற்சாகம் பெற்றது.
ஊருணிக்கரையில் கிடக்கும் "கரம்பை" மண்ணெடுத்து, உச்சந்தலையில் இட்டு அழுத்தி தேய்த்துக் குளிக்க தலை அழுக்கு கரைந்து, தலையில் குளிர்ச்சி ஏற்படும். சிலர் கரம்பை மண்ணுடன் புளிக்கரைசல், சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் கலந்தும் தலைக்கு குளித்து வந்தனர்.
சிகைக்காய்களை வாங்கி ஊறவைத்து, அதனுடன் சிறிதளவு வெந்தயம் சேர்த்து அரைத்து எடுத்து கிண்ணங்களில் போட்டு குழைத்து தலைக்கு தடவி குளித்து வந்தனர். அன்றைய மணப்பெண் சீர் பொருட்களில் சிகைக்காய் கிண்ணம் முக்கிய இடம் பெற்றன.
ஆவாரை இலை, பூக்களை பறித்து குளியலறையில் உள்ள மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் கல்லில் இட்டு தட்டி தலைக்கு தேய்த்து குளித்து வந்தனர். இதனால் கண் எரிச்சல் நீங்கும், உடல் சூடு தணியும் மற்றும் சர்க்கரை நோயின் காரணமாக ஏற்படும் அரிப்பு நீங்கும் என்பதால் அதை செய்து வந்தனர். சிலர் உசில மரத்து இலைகளை பறித்து காயவைத்து பொடி செய்தும் தலைக்கு தடவி குளித்து வந்தனர். இதனால் தலை அழுக்கு கரைந்து தலையும் குளிர்ந்து வந்தது.
எள்ளு செடியை பிடுங்கி வந்து அதை அப்படியே அரைத்துப் பொங்கிய நுரையைத் தலை முடியில் தேய்த்துக் குளித்தும் வந்தனர். இதனால் தலைமுடி அழுக்கு கரைந்து தலைமுடியும் பளபளப்பாக மாறியது.
இலுப்பை புண்ணாக்கை பொடி செய்து விளக்கெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து பூசி பத்து நிமிடம் ஊறவைத்து பிறகு குளித்து வந்தால் தலைவலி, மண்டைக்கரப்பான்,முடி உதிர்தல் நிற்கும் என்பது நமது பாட்டி காலத்தில் இருந்து இன்றும் சில இடங்களில் நடைபெறுகிறது.
விளக்கெண்ணெயைத் தலையில் தடவும் பழக்கம் கிராமப்புற பெண்களுக்கு உண்டு! அதனால்தான் வயதான பிறகும் கூட அவர்கள் தலை நரையே இல்லாமல் கருகருவென இருக்கும். விளக்கெண்ணெயைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து தினமும் தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் சூடு பிடிக்காது, தலைமுடியும் கருகருவென அடர்த்தியாக வளரும்.