
வேலைக்கு செல்பவர்களுக்கு ஏற்ற ட்ரண்டில் உள்ள காட்டன் புடவைகளும் லினன் புடவைகளும் பராமரிப்பது சுலபம்தான். இவற்றை அணிவதால் லுக்கும் அசத்தலாக இருக்கும். பட்ஜெட்டுக்கும் ஏற்ற அளவில் இருக்கும்.
யாருக்கு பொருத்தமாக இருக்கும் :
ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களுக்கும், உடல் பருமனானவர்களுக்கும் என எந்த உடல்வாகுக்கும் ஏற்ற புடவைகள்.
இப்பொழுது ட்ரெண்டில் உள்ள லினன் மற்றும் காட்டன் புடவைகள் நம் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் கிடைக்கின்றன. லினன் புடவைகள் சிங்கிள் மற்றும் டபுள் கலர்களில் சிறந்த காம்பினேஷன்களில் கிடைக்கின்றன. காட்டன் புடவைகளும் அசத்தலான டிசைன்களிலும், கலர்களிலும் கிடைக்கின்றன. இவற்றிற்கு எடுக்கும் பிளவுஸ்களையும், அணியும் அணிகலன்களையும் கவனமாக தேர்ந்தெடுத்து அணிய, நல்ல ரிச் லுக் கிடைக்கும்.
பிளவுஸ்கள் :
அதிக டிசைன்கள் உள்ள புடவைகள் எனில் பிளைன் பிளவுஸ்களும், டிசைன்கள் இல்லாத பிளைன் புடவைகள் எனில் புடவையின் நிறத்திற்கு காண்ட்ராஸ்டாக கலம்காரி, பிரிண்டட், எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ரிச் லுக் பிளவுஸ்களையும் அணிவது நம் அழகை மேம்படுத்தும். கடைகளில் ரெடிமேடாகவே டிசைனர் பிளவுஸ்கள் நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு கிடைக்கின்றன.
துணி எடுத்து தைப்பதாக இருந்தாலும் விதவிதமான டிசைன்களில் போட் நெக், காலர் நெக், க்ளோஸ் நெக் என நெக் டிசைன்களை நம் விருப்பம் போல் வைத்து, ஸ்லீவ்லெஸ், ஷார்ட் ஸ்லீவ், த்ரீ ஃபோர்த் ஹாண்ட் என நம் விருப்பம் போல் தைத்து அணியலாம். ஆன்லைனிலும் ரெடிமேட் பிளவுஸ்கள் அழகான டிசைன்களில் கிடைக்கின்றன. பிடிக்கவில்லை என்றால் மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது.
அணிகலன்கள் :
லினன், காட்டன் புடைகளுக்கு ஏற்ற அணிகலன்கள் கிறிஸ்டல் மற்றும் ஆக்சிடைஸ்ட் ஜுவல்லரிகள் பொருத்தமாக இருக்கும். ட்ரெடிஷனல் லுக் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கேற்ற அணிகலன்களும் நிறைய உள்ளன.
பராமரிப்பது எப்படி :
லினன், காட்டன் என எந்த புடவை வாங்கினாலும் முதலில் ஃபால்ஸ் வைத்து தைத்து விடுவது நல்லது. இல்லையெனில் நாம் அணியும் கொலுசு அல்லது காலணிகளில் சிக்கி புடவையின் இழைகள் அறுபடும்.
புடவைகளை வாஷிங் மிஷினில் போடாமல் சோப்பு நீரில் ஊறவைத்து, அலசி, நிழலில் காய வைப்பது நீண்ட நாட்கள் உழைக்க உதவும்.
லினன் புடவைகள் ஆளி நார் எனப்படும் இயற்கையான மூலப் பொருளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை மென்மையாகவும், நீரை உறிஞ்சக் கூடியவையாகவும், காற்று செல்ல அனுமதிக்கும் தன்மை கொண்டதாகவும் இருப்பதால் அணிவதற்கு ஏற்றவை. இவைகளை அதிக வெப்ப நிலையில் இருந்து காக்க சேலைப் பைகளில் வைத்து பாதுகாக்கலாம். சூடான நீர் அல்லது ப்ளீச் பயன்படுத்த வேண்டாம்.
காட்டன் புடவைகளை துவைக்கும் பொழுது அடர் நிறம் உள்ள ஆடைகளை தனியாக துவைப்பது நல்லது. அத்துடன் கல் உப்பு கலந்த நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து பின்பு தோய்க்க, நிறம் மங்காமல், சாயம் போகாமல் எப்போதும் புதிது போல் இருக்கும்.