
இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரமே எடுத்துக் கொள்ளும் அழகான, ஸ்டைலான சிகை அலங்காரங்கள் சிலவற்றை பார்க்கலாம்.
1) ஹேர்பின்கள், கிளிப்புகள், ஸ்கார்ஃப்கள் போன்றவை காலை நேர அவசரத்திற்கு அழகாகவும், அதே சமயம் எளிமையாகவும் சிகை அலங்காரத்தை செய்ய உதவும்.
2) பின்னல் போடுவது, போனிடெயில்கள் போடுவது இரண்டும் குட்டையான முடிக்கும் அதே சமயம் நீளமான முடிக்கும் அழகாக பொருந்தக் கூடிய சிகை அலங்காரமாகும்.
3) இன்றைய பெண்கள் அனைவரும் குட்டையான கூந்தலைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். காரணம் இவை காலை ஆபிஸ் செல்லும் அவசரத்தில் தயாராக அதிக நேரம் எடுக்காது; குறைந்த பராமரிப்பும் போதும்.
4) தலைமுடியை வாரி எடுத்து உயரமாகவோ அல்லது தாழ்வாகவோ போனிடெயில் போடவும். சிம்பிள் அதே சமயம் சூப்பர் லுக் கொடுக்கும்.
5) தலைமுடியை ஒரு பக்கமாக எடுத்து ப்ரெஞ்ச் பின்னல் போட்டு பின்பு அனைத்து முடிகளையும் சேர்த்து ரப்பர் பேண்ட் அல்லது கிளிக் கொண்டு கட்ட மிகவும் அழகாகவும், ஸ்டைலாகவும் காட்டும்.
6) தலைமுடியை இரண்டாகப் பிரித்து இரண்டு போனிடெயில்களாக போடவும். பின்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து சுருட்டி ரப்பர் பேண்ட் போட அழகாக இருக்கும். நடுவில் ஒரு சின்ன ரோஜாப்பூ வைக்க ஆஹா ஓஹோ தான்.
7) மெஸ்ஸி பன்(Messy Bun):
இதை செய்வதற்கு 45 வினாடிகளே போதும். முடிகள் அனைத்தையும் சேர்த்து அழகாக கொண்டை போட்டு ரோஜா பூக்களை அல்லது மல்லிச்சரத்தை வைக்கலாம்.
8) இரட்டை பன்கள்:
முடியை இரண்டு பக்கமும் சமமாக அழகாக சுருட்டி பன் போல் அமைத்து கொண்டை போடவும்.
9) முறுக்கப்பட்ட அல்லது பின்னப்பட்ட முன்பக்கம்:
பிரெஞ்சு பின்னல் அல்லது இரண்டு இழைகள் கொண்டு நம் தலைமுடியை முன் பக்கத்தில் பின்னி ஹேர்பின் கொண்டு முனையை பிரியாமல் கிளிப் செய்யவும். அத்துடன் ஹேர் ஸ்பிரேயை சிறிது பயன்படுத்த இந்த ஹேர் ஸ்டைல் அழகாக இருக்கும்.
10) பின்னல் போனிடெயில்:
போனிடெயிலில் முடியை இரண்டு அல்லது மூன்று பிரிவுகளாக பிரித்து பின்னல் போடவும். பின்பு அதை போனிடெயிலுடன் இணைக்கவும். பின்னலின் ஓரங்களை லேசாக இழுத்து அழகான பஞ்சு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவும். எளிதில் செய்து விடக் கூடிய சிகை அலங்காரம் இது. லுக்கும் நன்றாக இருக்கும்.
11) குமிழி ஜடைகள்:
போனிடெயிலை உயரமாகவோ அல்லது சற்று தாழ்த்தியோ போடவும். போனிடெயிலின் நீளம் முழுவதும் முடிகளை அழகான ரப்பர் பேண்ட் சேர்த்து குமிழ்களாக உருவாக்கவும். ஒவ்வொரு குமிழியின் பக்கங்களிலும் மெதுவாக இழுத்து வட்ட வடிவத்தை உருவாக்க அழகான சிகை அலங்காரம் தயார்.
12) அரை முடி வைத்தல்:
தலை முடியை நன்கு வாரி பாதியாகப் பிரித்துக் கொள்ளவும். மேல் பகுதியை மட்டும் பின்னி அதை பன் போல சுற்றி விடவும். பிறகு கீழ் பகுதியை அப்படியே விட எளிமையான அதே சமயம் வசீகரமான தோற்றத்தைத் தரும்.
13) பின் செய்யப்பட்ட ஸ்டைல்:
முடியின் சில பகுதிகளை காதுக்கு பின்புறம் தள்ளிவிட்டு, ஹேர் பின்கள் கொண்டு பின் செய்ய ஒரு எளிமையான ஸ்வீப் ஸ்டைலாக இருக்கும்.
14) அலை அலையான முடி:
முடியை இரவே பின்னி வைத்து இரவு முழுவதும் அப்படியே விடவும். மறுநாள் காலையில் பிரிக்க அழகான அலை அலையான முடி கிடைக்கும். ஒரு கிளிப்போ அல்லது முடியை ப்ரீ ஹேர் ஸ்டைலாகவோ விட அழகாக இருக்கும். அல்லது ரெண்டு அங்குல கர்லிங் இரும்பை(ஹேர் ஆக்சஸரி) பயன்படுத்தி முடி முழுவதும் தளர்வான அலைகளை உருவாக்கலாம். பிறகு கர்லிங் இரும்பை எடுத்துவிட அழகான அலை அலையான ஹேர் ஸ்டைல் உருவாகிவிடும். இதனை பாதுகாக்க டெக்ஸ்சர் ஸ்ப்ரேயை ஸ்ப்ரே செய்யலாம்.
15) ஒருபுறம் முடி:
முடியை ஒரு பக்கமாக இழுத்து சீவி, ஒரு அழகான கிளிப் அல்லது ஸ்க்ரஞ்சி கொண்டு கட்ட மிகவும் அழகான, ஸ்டைலான தோற்றத்தைத் தரும்.