சரும அழகைப் பராமரிக்க உதவும் மாவு வகைகள்!

பச்சை பயறு பொடி...
பச்சை பயறு பொடி...

சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தும் அரிசி, கோதுமை, கடலை, பயத்த மாவு வகைகளை அழகு பொருட்களிலும் பயன்படுத்தலாம். குளிப்பதற்கு, முகத்தில் தேய்த்துக் கழுவுவதற்கு என்று பயன்படுத்தும்போது இன்னும் சருமம் பளபளப்பாகி மென்மை வரும். அதனைப் பற்றி பதிவில் காண்போம். 

பச்சைப் பயற்றை அரைத்து மாவாக்கி அதனுடன் சலித்து எடுத்த கோதுமை தவிட்டை கலந்து தேய்த்து குளித்தால் சருமத்தில் இருக்கிற கரும்புள்ளிகள் மாறி சருமம் பளபளவென்று இருக்கும். 

நெல்லிப் பொடி கலந்த பச்சை பயறு பொடியை தேய்த்து குளிப்பதால் சருமம் பொலிவு பெற்று சுருக்கம் நீங்கி பளபளப்பும் பெறும். 

பாசிப்பயறு ஒரு கப், பச்சரிசி கால் கப், சில துண்டு கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றை போட்டு பொடித்து துணியில் சலித்து குளித்தால் சருமம்  வெடிப்பு விடாது.

ஆரஞ்சு சாற்றில் பஞ்சை நனைத்து எடுத்து முகம் முழுவதும் லேசாக தடவவும். அப்படியே 15 நிமிடங்கள் விட்டு விடவும்  அப்புறம் முகத்தை பயத்தம் மாவினால் தேய்த்து கழுவி விட வேண்டும். இப்படி தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தாலே முகம் பளபளப்பு அடைய தொடங்கி விடும். 

பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு இரண்டையும் ஊறவைத்து அதனுடன் வெள்ளரி விதை, ஒட்ஸ் மாவு, சந்தனம், படிகாரம் போன்றவைகளை கலந்து பூசி வர இயற்கையாக ப்ளீச் ஆகும். இதை பூசுவதால் சருமத்தில் பக்க விளைவுகள் ஏற்படாது. 

இதையும் படியுங்கள்:
வியக்க வைக்கும் ஐந்து இரதங்கள்!
பச்சை பயறு பொடி...

பாசிப்பயிறு, கடலைப்பருப்பு, கார்போக அரிசி இவற்றை மிஷினில் அரைத்து வைத்துக்கொண்டு, குளிப்பதற்கு முன் முட்டையின் வெள்ளை கருவை எடுத்து அதில் சில துளி தேனை கலந்து முகம், கை, கால், கழுத்து, உடல் முதலிய இடங்களில் தேய்த்து ஊற வைத்து பின்னர் மேலே கூறிய பொடியை தேய்த்து கழுவ பளபளப்பு கிடைக்கும். ஆரோக்கியமும் கூடுதலாக கிடைக்கும். 

பச்சைப்பயிறு, கடலைப்பருப்பு, கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, ஆவாரம்பூ, ரோஜா இதழ்கள் ஆகியவற்றை வாங்கி சுத்தம் செய்து காய வைத்து அரைத்து வைத்துக்கொண்டு தினசரி காலையும், மதியமும், மாலையும், இரவும் முகத்தில் தேய்த்து உடனே கழுவி விடலாம். பளபளப்பும் மினுமினுப்பும் உடனே தெரியும். 

கடைந்த புளித்த தயிருடன் வெந்தயம், துவரம் பருப்பு முதலியவற்றை ஊறவைத்து மறுநாள் காலையில் மிக்ஸியில் இட்டு அரைத்து விரல்களின் நுணியால் தலையையும், மயிர் கால்களையும் லேசாக மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். இதில் புளித்த தயிரில் வெண்ணை பசையும் கண்டிஷனிங் குணமும் இருக்கிறது. வெந்தயம் இதமான குளிர்ச்சி தந்து வேர்க்கால்களை பலப்படுத்தும். துவரம் பருப்பு அழுக்கையும் பிசுபிசுப்பையும் எடுத்து விடும். 

முகப் பொலிவுக்கு...
முகப் பொலிவுக்கு...

ஆவாரம் பூ, வெந்தயம், பயத்தம் பருப்பு ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொண்டு அந்த மாவை வெந்நீரில் கரைத்து வாரம் இரு முறை தலைக்கு அலசி வந்தால் கருகருவென்று கூந்தல் வளரும். 

கோதுமை தவிட்டை சூடாக்கி ஒத்தடம் கொடுத்தால் முதுகு வலி,  கழுத்து வலி போய்விடும். 

கடலை மாவுடன் சிறிது எலுமிச்சை சாறும் சேர்த்து கலந்து முகத்தில் தடவி குளித்தால் நல்ல நிறத்தை கொடுக்கும். ஆரஞ்சு சாற்றை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து பயத்த மாவினால் முகம் கழுவினால் நல்ல பொலிவு கிடைக்கும். 

நன்றாக அரைத்த ஆப்பிள் விழுது இரண்டு தேக்கரண்டி பால் இரண்டு தேக்கரண்டி பச்சரிசி மாவு இரண்டு தேக்கரண்டி இவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி மெதுவாக மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து பாலுடன் சிறிது தண்ணீரை கலந்து முகத்தை கழுவ வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com