
இயற்கை அழகு கொஞ்சும் பனி படர்ந்த மலைகள் மற்றும் பசுமை எழில் மிகுந்த காஷ்மீர், 'பூமியின் சொர்க்கம்' என்று அழைக்கப்படும். காஷ்மீர்ப் பெண்கள் அழகில் சிறந்தவர்கள் மட்டுமல்ல, அவர்கள் அணியும் உடையும் தனித்துவம் வாய்ந்தவையே. அவர்கள் அணியும் பாரம்பரிய மற்றும் சமகால உடைகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. ஃபெரான் (Pheran)
காஷ்மீர் பெண்கள் அணியும் பாரம்பரிய ஆடையான ஃபெரான் தளர்வான நீண்ட கவுன் போன்ற ஒரு ஆடை ஆகும். இது பொதுவாக கம்பளி, பருத்தி, பாஷ்மினா அல்லது பட்டில் தயாராகும் உடையாகும். குளிர்காலத்தில் அணிய ஏற்ற இது சிக்கலான எம்பிராய்டரி வேலைப்பாடுகளைக் கொண்டது.
இங்கு வசிக்கும் இந்தியப் பெண்கள் கண்ணாடி வேலைப்பாடுகள் மற்றும் இந்து புராணங்களின் மைய கருத்துக்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகளை கொண்ட ஃபெரான்களை அணிந்திருப்பார்கள். இஸ்லாமியப் பெண்கள் ஃபெரான்களை ஹிஜாப்புடன் சேர்த்து அணிந்து கொள்வார்கள்.
2. டெரங்கா (Teranga)
திருமணங்கள் மற்றும் முக்கியமான பண்டிகை களின்போது காஷ்மீரி இந்து பெண்கள் அணியும் உடை இது. அழகான எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் கொண்ட நீளமான பாவாடை, பொருத்தமான ரவிக்கை மற்றும் துப்பட்டாவுடன் அணிந்து கொள்வார்கள்.
3. காஷ்மீரி புடவை
விசேஷமான சந்தர்ப்பங்களின்போது அணியப்படும் காஷ்மீரி புடவைகளில் எம்ராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்திருக்கும். இதில் மலர் வடிவங்கள், சினார் இலைகள் போன்ற டிசைன்கள் வடிவமைக்கப் பட்டிருக்கும்.
4. லெகங்கா சோளி & காக்ரா சோளி
பண்டிகைகள் மற்றும் திருமணங்களின்போது லெகங்கா சோளி & காக்ரா சோளி ஆடைகளை அணிகிறார்கள். இவை பெரும்பாலும் ஜரிகை வேலைப்பாடுகள், சீக்வன்ஸ்கள் மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். லெஹங்காக்கள் மற்றும் காக்ராக்களை சோளி, துப்பட்டாவுடன் சேர்த்து அணிந்து கொள்கிறார்கள்.
5. ஃபுல்காரி (Phulkari)
ஃபுல்காரி என்பது வாழ்க்கையைக் குறிக்கும் பூக்களின் வடிவங்களை குறிப்பது என்று பொருள்படும். இது ஒரு துப்பட்டா வகையைச் சேர்ந்தது பஞ்சாபில் பிரபலமான இந்த துப்பட்டா காஷ்மீர் பெண்களாலும் விரும்பி அணியப்படுகிறது. மேலும் சால்வைகளிலும் ஃபுல்காரி எம்பிராய்டரி டிசைன்களை வடிவமைத்துக் கொள்கிறார்கள்.
பாரம்பரிய உடையானது துப்பட்டா (தாவணி) மற்றும் டிக்கா (நெற்றியை அலங்கரிக்கும் ஆபரணம்), ஜும்காக்கள் (காதணிகள்) மற்றும் வளையல்கள் போன்ற அலங்கரிக்கப்பட்ட நகைகளால் பூர்த்தி செய்யப் படுகிறது. ஆடம்பரமான பஷ்மினா சால்வைகளும் ஒரு தனிச்சிறப்பாகும், அவற்றின் மென்மை மற்றும் சிறப்பான கை நெசவுக்காக பாராட்டப்படுகின்றன.
நவீன உடைகள்
1. மேக்ஸி உடைகள்
கோடை காலத்தில் இங்கு பெண்கள் பருத்தியால் செய்யப்பட்ட நீண்ட காற்றோட்டமான மேக்சி ஆடைகளை அணிகிறார்கள். இவை பெரும்பாலும் இலகு ரக தாவணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
2. சல்வார் கம்மீஸ், சுடிதார்கள்;
பருத்தி குர்தா செட்டுகள், சல்வார் கம்மீஸ், சுடிதார்கள், பலாஸோக்கள், அனார்கலி சூட் போன்றவற்றையும் அணிகிறார்கள்.
3. அடுக்கு உடைகள்;
காஷ்மீரின் மாறுபட்ட வெப்ப நிலைகளுக்கு ஏற்ப அடுக்கு உடைகள் மிகவும் பிரசித்தம். கோடைகாலமாக இருந்தாலும் இங்கு காலை மற்றும் மாலை வேலைகளில் ஓரளவு குளிர் இருக்கும். எனவே இந்த வகை அடுக்கு ஆடைகளை விரும்பி அணிகிறார்கள்.
இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் எனப்படும் தலைக்கவசம் அணிந்து கொள்வார்கள். மேலும் பஷ்மினா மற்றும் கம்பளி சால்வையால் தங்களை போர்த்திக் கொள்வார்கள். மேலும் அபாயா எனப்படும் தளர்வான முழு நீள மேலங்கி அல்லது புர்காவை தேர்வு செய்து கொள்வார்கள். இது கண்களைத்தவிர முழு உடலையும் முகத்தையும் மறைக்கிறது.