
முடி உதிர்வுப் பிரச்சனை என்பது காலாகாலமாக இருந்து வரும் ஒன்றாகும். அதுவும் இன்றைய காலத்தில் இது அதிகரித்துவிட்டது. முடி உதிர்வுக்கு பல காரணங்கள் இருந்தாலும், விட்டமின் குறைபாடு இதில் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். நாம் உண்ணும் உணவில் போதுமான அளவு விட்டமின்கள் இல்லை என்றால், நம் முடியின் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. இது முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். இந்தப் பதிவில் விட்டமின் குறைபாடுக்கும் முடி உதிர்க்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
முடி, தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரு திசு. இதன் வளர்ச்சிக்கு பல ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. இதில் மிகவும் முக்கியமானவை விட்டமின்கள். இவை முடியின் வளர்ச்சி, வலிமை, நிறம் போன்றவற்றைப் பராமரிக்க உதவுகின்றன.
முடி உதிர்வுக்குக் காரணமாகும் விட்டமின்கள்:
முடி வளர்ச்சிக்கு விட்டமின் டி மிகவும் முக்கியமானது. இது முடியின் வேர்களை உற்பத்தி செய்யவும், முடியை வலுவாக்கவும் உதவுகிறது. விட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் தலைமுடி மெலிதல், முடி உதிர்வு, பொடுகு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
பயோட்டின் எனப்படும் விட்டமின் பி7 முடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று. இது முடியின் வேர்களை வலுவாக்கி முடி உதிர்வைக் குறைக்கிறது.
இரும்புச்சத்து முடியின் வளர்ச்சிக்கான முக்கியமான தாது. இது முடி வேர்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது. இரும்பு குறைபாடு ஏற்பட்டால் ரத்த சோகை உண்டாகும். இது முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாகும்.
இரும்புச்சத்தை போலவே ஜிங்க் சத்தும் முடியைப் பராமரிக்க உதவும் முக்கியமான தாது. இதில் குறைபாடு ஏற்பட்டால் தோல் அலர்ஜி, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
உங்களுக்கு விட்டமின் குறைபாட்டால் முடி உதிர்வு ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிக்க முதலில் எந்த விட்டமின் குறைபாட்டால் முடி உதிர்கிறது என்ற காரணத்தைக் கண்டறிய வேண்டும். இதற்கு முறையான மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதில் உங்களுக்கு விட்டமின் குறைபாடு உறுதி செய்யப்பட்டால், மருத்துவர் விட்டமின் மாத்திரைகள் மற்றும் உணவுகளைப் பரிந்துரை செய்வார்.
உங்களுக்கு விட்டமின் குறைபாடு ஏற்படாமல் இருக்க பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி விட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். தினசரி காலையில் சூரிய ஒளியில் நில்லுங்கள். இது விட்டமின் டி உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். இத்துடன் தினசரி உடற்பயிற்சி செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். மன அழுத்தத்திற்கும் முடி உதிர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதால், எப்போதும் மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.