அழகுக்கு அழகு சேர்ப்பதில் அடர்த்தியான புருவத்துக்கும் பங்குண்டு. சிறிய கண்களுக்கும் அடர்த்தியான புருவம் மிகுந்த அழகைத் தரும். முகத்தில் கண்களுக்கு அடுத்தபடி சட்டென்று வசீகரிக்கும் புருவங்களை அடர்த்தியாக வளரச் செய்ய சில இயற்கை முறைகள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொண்டால் பலன் பெறலாம்.
* வெங்காயச் சாறு : வெங்காயத்தை மிக்ஸியில் அடித்து சாறெடுத்து புருவத்தில் தடவி காயவைத்து, பின் அதனைத் துடைத்து, எலுமிச்சை சாற்றை புருவத்தின் மீது பூசிவிட்டுத் தூங்கவும்.
* வெந்தயம் : வெந்தயத்தை ஊற வைத்து, அதனை நைஸாக அரைத்து இரவில் புருவத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவவும். இந்த முறையைத் தினமும் செய்து வந்தால் பலன் தெரியும்.
* எலுமிச்சைத் தோல் : எலுமிச்சைத் தோலைத் துருவி வெயிலில் காய வைக்கவும். ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், விட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் அரை ஸ்பூன் காய்ந்த எலுமிச்சைத் தோல் போன்றவற்றைக் கலக்கி தினமும் இரவில் மஸ்காரா பிரஷ் மூலம் புருவம் மற்றும் கண் இமைகளில் தேய்த்து வரவும்.
* விளக்கெண்ணெய் : இரவில் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெயை சூடுபடுத்தி அதில் கறிவேப்பிலை பொடியைச் சேர்த்து குளிர வைத்து, வெதுவெதுப்பானதும் புருவங்களில் தடவி லேசாக மசாஜ் செய்து வரவும்.
* வேஸலின் : அரை ஸ்பூன் அளவு வேஸலின் எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் அளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து புருவங்கள் மீது தடவி லேசாக மசாஜ் செய்து வரவும்.
* கற்றாழை : கற்றாழை ஜெல்லை அரை ஸ்பூன் எடுத்து, அதில் சம அளவு விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கி புருவத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்பு அரைமணி கழித்து கழுவவும்.
* தேங்காய்ப்பால் : நல்லெண்ணெய் அரை ஸ்பூன் எடுத்து அதே அளவு தேங்காய்ப்பால் கலந்து புருவத்தில் தடவி மசாஜ் செய்து காய்ந்ததும் கழுவவும். தினமும் இரவில் செய்துவந்தால் பலன் அதிகம்.