
அதிகமாக முடி வளர வேண்டும் என்று ஆசைப் படாதவர்கள் இருக்கமுடியாது. இந்தக் காலத்தில் முடி உதிர்தல் என்பது இளைஞர்களுக்கு மத்தியில் ஒரு பெரிய பிரச்னையாகவே உள்ளது. அதற்காக செயற்கையாக பல எண்ணெய்களையும் லோஷன்களையும் அதிகமான விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தவும் பலர் தயாராகவே உள்ளனர். எனினும் அவர்களின் பிரச்னைக்கு சரியான தீர்வு அமையாமல் அல்லல்படுவதைக் கண்கூடாகவே பார்த்திருப்போம். அப்படிப்பட்ட முடி உதிர்தல் பிரச்னைக்கு இயற்கை தந்த தீர்வுதான், வேம்பாளம் பட்டை.
இந்த வேம்பாளம்பட்டை அல்காநெட் என்னும் செடியின் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேர் இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது முடிவளர்ச்சிக்கு மட்டுமில்லாமல் ஆரோக்கியம், அழகு என்று அனைத்திற்கும் பயன்படக்கூடிய ஒரு அற்புத மூலிகையாகும். இந்த மூலிகையை எண்ணெயில் ஊற வைத்தால், எண்ணெய் சற்று நேரத்தில் சிகப்பு நிறமாக மாறத்தொடங்கும்.
வேம்பாளம்பட்டை எண்ணெய் செய்யும் முறை:
வேம்பாளம் பட்டை
சுத்தமான தேங்காய் எண்ணெய்
கருஞ்சீரகம்
முதலில் வேம்பாளம் பட்டையையும் கருஞ்சீரகத்தையும் ஒரு பாட்டிலில் எடுத்துக்கொள்ளவும். பிறகு அந்த பாட்டில் நிறையும் வரை தேங்காய் எண்ணெயை நிரப்பி மூடி வைத்துவிடவும். சரியாக 24 மணி நேரம் கழித்து அந்த எண்ணெயை எடுத்துப் பார்த்தால் சிவப்பு நிறமாக மாறியிருக்கும்.
இந்த எண்ணெயைக் காய்ச்சி பயன்படுத்தக் கூடாது. அந்த வேரை ஊற வைத்தே பயன்படுத்த வேண்டும். வேர் எண்ணெயிலே ஊறுவதால் எந்த பிரச்னையும் இல்லை. கருஞ்சீரகம் பயன்படுத்துவதன் காரணம், இதனால் முடி நன்றாக கருமையாக வளரும்.
வேம்பாளம் பட்டை எங்கே கிடைக்கும்?
வேம்பாளம் பட்டை, கருஞ்சீரகம் இரண்டுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
வேம்பாளம்பட்டை எண்ணெயைப் பயன்படுத்தும் முறை:
இதை தினமும் தேங்காய் எண்ணெயைத் தடவுவது போலவும் பயன்படுத்தலாம். அல்லது இரவு தலையில் தேய்த்து ஊற வைத்துவிட்டு அடுத்த நாள் காலையில் தலை குளித்துவிடுவதும் நல்ல பலனை தரும்.
இந்த எண்ணெய் முடியை பளபளப்பாகவும் கருமையாகவும் ஆக்கும். விரைவாக முடி வளரவும் உதவும்.
வேம்பாளம் பட்டை எண்ணெயின் பயன்கள்:
இந்த எண்ணெய் தலைமுடியின் நெகிழ்ச்சி தன்மையை அதிகரித்து முடியை ஆரோக்கியமாக வளர உதவுகிறது. இந்த எண்ணெய் தடவுவதால் உடல்சூட்டை தணித்து, உடலை குளிமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் முடி கொட்டுவது மட்டுப்படும்.
இந்த எண்ணெயை தலை மற்றும் மூக்கின் மீது தடவினால் மன அமைதி கிடைக்கும். நன்றாக தூக்கமும் வரும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது.