

நிறைய வீடுகளில் நேரமின்மை காரணமாகவும், அவசரத்தில் தேடுவதாலும், துணி அலமாரியை திறந்தாலே துணிகள் அதிலிருந்து விழுந்துவிடும்போல இருக்கும். சில சமயம் உண்மையாகவே விழுந்துவிடும்.
அன்றாடம் பயன்படுத்தும் நமது துணி வைக்கும் shelf-ஐ அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்தால், திறந்தவுடன் நமக்கு தேவையான ஆடைகளை உடனே எடுத்து அணிந்துகொள்ள முடியும்.
கீழே குறிப்பிடப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றினால், அலமாரியில் தேடுதல் அவசியம் இருக்காது; நேரமும் மிச்சப்படும், அலமாரியும் எப்போதும் அழகாக இருக்கும்.
அலமாரி அல்லது பீரோவில் அதிக இடத்தை பிடிப்பதில் முதல் இடம் பெறுவது சேலைகள்தான். அவற்றை பிரித்து வைத்துக்கொண்டாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும்.
முதலில் பட்டுச்சேலைகளை கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்:
அதிக விலை உள்ளதும் முக்கியமானவர்களின் விழாக்களில் மட்டும் உபயோகப்படுத்தப்படுவது.
உள்ளூர் மற்றும் சிறு விசேஷங்களுக்கு மட்டும் அணிவது.
கோவில்கள் மற்றும் பூஜைகளுக்கு மட்டும் உடுத்தும் வகை.
திருமண விழாக்களில் பங்கேற்கும் போது அணியும் சேலைகள்.
இப்போது ஆன்லைனில் பட்டுச்சேலைகள் வைப்பதற்கென்றே தனியாக பைகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, ரகம் வாரியாக பிரித்து, அதற்குரிய பிளவுஸ் மற்றும் இன் ஸ்கர்ட் (Inskirt) உடன் மடித்து செட்டாக வைத்துவிடுங்கள்.
அந்த பைகளைக் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்காமல், நேராக நிறுத்தி வைப்பது சிறந்தது. இப்படி வைத்தால் இடம் குறைவாக பிடிக்கும்; எடுப்பதும் எளிதாக இருக்கும்.
அதே முறையில் மற்ற வகை சேலைகளையும் ஒவ்வொரு பைகளிலும் செட்டாக அடுக்கி வைக்கலாம். புதிய சேலைகள் மற்றும் இதர ஆடைகள் போன்றவற்றை தனியாக ஒரு பையில் அடுக்கி, பீரோவில் கீழே உள்ள அடுக்கில் வைக்கலாம்.
சேலைகளை பிரிக்கும்போது கொஞ்சம் பழைய, அடர் நிற சேலைகளை தனியாக எடுத்து வையுங்கள். அவை மருத்துவமனை செல்லும்போது அல்லது மரண நிகழ்வுகளில் அணிவதற்காக உதவும்.
சுரிதார்களையும் செட்டாக, தேவையான உள்ளாடைகளுடன் சேர்த்து அடுக்கி வைத்தால் அலமாரியில் இடம் நிறைய இருக்கும்.
தினமும் நாம் அணியும் ஆடைகள், துண்டுகள், கர்சீப்கள் ஆகியவற்றை ஒரு இடத்தில் வைத்துக்கொள்ளலாம். அவற்றை எளிதில் எடுக்கும் வண்ணம் அடுக்குவது சிறந்தது.