
பனிக்காலத்தில் கை கால்களில் மீன் செதில்போல் நிறம் மாறும். உதடுகளில் வெடிப்பு தோன்றும். கால்களிலும் வெடிப்பு தோன்றும். இவற்றைப் போக்கும் விதங்கள் பற்றி பார்ப்போம்.
பனிக்காலத்தில் வீசும் குளிர் காற்றினால் சருமத்தின் இயற்கை தன்மையை பாதிக்கிறது. இதனால் சருமம் எளிதாக வறண்டு போகிறது. எண்ணெய் தன்மையை கொண்ட சருமத்தை உடையவர்களையும் இது விட்டுவைப்பதில்லை. உதடுகளில் சுரப்பிகள் எதுவும் இல்லாததால் காற்றின் தாக்குதல் உதடுகளையும் அதிகம் பாதிக்கிறது. இவற்றை போக்குவதற்கு தகுந்த உணவு முறைகளையும், அழகு குறிப்புகளையும் பயன்படுத்தினால் எப்பொழுதும்போல் நல்ல சருமத்துடன் மிளிரலாம்.
குளித்துவிட்டு உதடுகளில் கிரீம் தடவிக்கொள்ளலாம். இரவில் தூங்க சொல்வதற்கு முன்பு உதடுகளில் வெண்ணெய் அல்லது பாலாடையை தேய்த்து மெதுவாக வருடி கொடுத்தால் உதடுகளில் வெடிப்பு ஏற்படாது.
ஒரு பாத்திரத்தில் சுடுநீரும் மற்றொரு பாத்திரத்தில் குளிர்ந்த நீரும் எடுத்து இரண்டிலும் சிறிது அளவு கிளிசரினும், பன்னீரும் விட வேண்டும். பின்பு ஒரு பஞ்சை எடுத்து அதை சுடுநீரிலும் குளிர்ந்த நீரிலும் மாற்றி மாற்றி முக்கி பிழிந்து உதடுகளில் வைத்து மெதுவாக அழுத்தினால் உதட்டுவெடிப்பை தடுக்கலாம்.
கை கால்களை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னர் பன்னீர் கிளிசரின் இரண்டையும் கலந்து தூங்க செல்லும்போது கால் பாதங்களிலும், கை விரல்களிலும் தேய்த்துக்கொண்டால் சருமம் மிருதுவாகி அழகுபெறும்.
தேங்காய் எண்ணெய், பசு நெய், தேன், மஞ்சள் பொடி ஆகியவற்றை கலந்து காலில் வெடித்த பகுதிகளில் தேய்த்தால் நல்ல பலனைத் தரும். பனிக்காலத்தில் நகங்கள், கால் பாதங்களிலும் மருதோன்றி இலை அரைத்து தேய்ப்பது நல்லது.
பனிக்காலத்தில் தினமும் உடற்பயிற்சி செய்தால் ரத்த ஓட்டம் அதிகமாகும். கூடவே உடலில் தட்பவெப்ப நிலை பராமரிக்கப்படும் . முறையான உடற்பயிற்சிகளை செய்து உடல் நன்றாக வியர்த்து விட்டால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி அழகும் கிடைக்கும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் சுரப்பிகள் ஓரளவு பணி செய்யும். அதன் மூலம் சருமத்திற்கு ஈரத்தன்மையும், எண்ணெய் தன்மையும் கிடைக்கும் .இதனாலும் சரும அழகு பாதுகாக்கப்படும்.
பனிக்காலத்தில் பெண்கள் உடலில் தேங்காய் எண்ணெயை தேய்த்துவிட்டு பின்பு குளிப்பது நல்லது. இதன் மூலம் உடல் வறட்சி வெடிப்பு போன்றவற்றை தடுக்கலாம். விருப்பப்பட்டால் நல்லெண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் ஆயிலையும் பயன்படுத்தி குளிக்கலாம். முதலில் எண்ணெயை லேசாக சூடாக்கி தலையின் மேற்பரப்பு பகுதியில் நன்றாக தேய்த்துவிட்டு இளம் சுடுநீரில் குளிக்கலாம். இதையே உடலில் தேய்த்து பத்து நிமிடம் நன்றாக பிடித்து விடவேண்டும். இதனால் வறட்சி போகும். சருமம் மிளிரும்.
பனிக்காலத்தில் உணவு சத்துடனும் சூடாகவும் இருக்க வேண்டியது அவசியம். சூப் குடிப்பது நல்லது. கூடவே உடல் புஷ்டிக்குறிய உணவுகளையும் தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும். வேர்கடலை, பாதாம் பருப்பும், முந்திரி பருப்பு போன்றவற்றை பனிக்காலத்தில் அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. அரிசி வகை உணவுகள், கோதுமை வகை உணவுகளை பனிக்காலத்தில் அதிகம் சாப்பிட்டால் உடல் சூடு பாதுகாக்கப்படும்.
பனிக்காலத்தில் வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அப்பொழுது ஷாம்பு உபயோகிக்காமல் சிகைக்காய் பொடி, செம்பருத்தி பொடி போன்றவற்றை பயன்படுத்தினால் முடி வறண்டு போகாமல் இருக்கும்.
சோப்பை தவிர்த்து பயத்தம்பொடி தேய்த்து குளிக்கலாம். உடம்பின் இடுக்குப் பகுதியில் மட்டும் சோப்பை பயன்படுத்தினால் போதுமானது. குளித்தவுடன் உடம்பில் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் வறண்டு போகாமல் ஈரப்பசையுடன் இருக்கும். இதனால் சருமத்தில் ஒரு மினு மினுப்புத் தோன்றும்.