
இப்போதெல்லாம் ஒருவருக்கு இளம் வயதிலேயே நரை முடி தோன்றி விடுகிறது. முன்கூட்டிய முடி நரைப்பது இந்த நாட்களில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. வயது ஏற ஏற முடி நரைப்பது இயல்பான விஷயம்தான். ஆனால், இளம் வயதிலேயே முடி நரைத்தால், அதற்கு சில வாழ்க்கை முறை பழக்கங்கள் காரணமாக இருக்கலாம். ஒரு சிலருக்கு மரபணு காரணமாக இளநரை தோன்றலாம். இன்றைய சுற்றுச்சூழல் சீர்கேடுகள் மற்றும் உணவு பழக்கங்கள் கூட சீக்கிரமே நரை முடியை தோன்ற வைக்கலாம். சில பழக்கங்களைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்வதன் மூலம் உங்கள் தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும் அல்லது தள்ளிப்போடவாவது முடியும்.
தூக்கமின்மை :
தூக்கமின்மைதான் உங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் முதல் காரணியாக உள்ளது. போதுமான அளவில் தூங்கா விட்டால், உடல் உறுப்புகளுக்கு போதுமான அளவு ஓய்வு கிடைக்காது. இது உடலின் செயல்பாடுகளை சீர்குலைக்கும். இதனால் உடலில் உள்ள சத்துக்களின் அளவுகள் குறையும். முடியை கருமையாக்கும் மெலனின் உள்ளிட்ட நிறமிகள் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி முடியை வெளிர வைக்கிறது. மேலும் முடி உதிர்வுக்கும் காரணமாக உள்ளது.
மனஅழுத்தம்:
முடியின் வளர்ச்சியில் மனநலம் முக்கிய பங்கை வகிக்கிறது. கவலை உங்கள் தலைமுடிகளை விரைவில் வெளிர செய்துவிடும். மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், முடிக்கு நிறத்தை கொடுக்கும் செல்கள் உட்பட உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை சேதப்படுத்துகிறது. மன அழுத்தம் விரைவில் நரை முடியை கொண்டு வரும்.
புகை மற்றும் மது:
புகைப்பிடிப்பதால் விரைவில் நுரையீரல் பாதிக்கப்படும். இதனால் சுவாச சீர்கேடுகள் ஏற்படும். தூய்மையான சுவாசம் உடலின் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி முடியின் வளர்ச்சியில் அதன் நிறத்தை பாதுகாப்பதில் சிறப்பாக பங்களிக்கிறது. புகைப் பிடிப்பதால் அசுத்தமான காற்று நுரையீரலுக்கு கடத்தப்படுவதால் இரத்த ஓட்டம் சீர்கெட்டு முடியை வெளுக்க வைக்கிறது. மது பழக்கம் விரைவிலேயே கல்லீரலையும் இரைப்பை குடலையும் பாதிக்கிறது. இதனால் உடலுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு நரை முடி விரைவில் வருகிறது.
ஊட்டச்சத்து குறைபாடுகள்:
உண்ணும் உணவில் போதுமான அளவில் ஊட்டச்சத்துகள் இல்லாவிட்டாலும் அது மெலனின் அளவை பாதிக்கும். வைட்டமின் பி , டி3 , சிங்க், கால்சியம், தாமிரம், இரும்பு போன்ற தாதுக்களின் குறைபாடு முடியின் வளர்ச்சியையும் நிறத்தையும் பாதிக்கிறது.
இந்த ஊட்டச்சத்து குறைபாடுகள் மது அருந்துபவர்கள் மற்றும் புகைப் பிடிப்பவர்களுக்கு இயல்பாகவே இருக்கும். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இரைப்பை புண் உள்ளவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக தலை முடி விரைவாகவே நரைக்கும்.
சுற்றுச்சூழல் சீர்கேடுகள்:
சுற்றுச்சூழல் சீர்கேடுகள் சுவாச மண்டலத்தை பாதிக்கின்றன. புகைப் பிடிப்பதால் உண்டாகும் தீமையை, காற்று மாசுபாடும் உண்டாக்குகிறது. தொழிற்சாலையின் நச்சு புகை, வாகனங்களின் புகைகள், தூசிகள் போன்றவை தலையில் படிவதால் அவை மெலனின் சீர்கேட்டை உண்டாக்குகிறது. மாசுபாடு உள்ள தண்ணீரில் குளிக்கும் போது கலந்துள்ள வேதியியல் பொருட்கள் தலை முடியை சில வாரங்களில் பிளீச் செய்து விடுகின்றன.
மீளுதல்:
நமது மன அழுத்தத்தை தியானம் மற்றும் உடற்பயிற்சி மூலம் குறைத்து நீண்ட நேரம் தூங்க வேண்டும். மது மற்றும் புகைப் பழக்கத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும். உடல்நல பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்கள் ஆலோசனையின் படி ஊட்டச்சத்து மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியமான காற்று மற்றும் நல்ல தண்ணீர் கிடைக்கும் இடத்தில் வசிப்பதும் முக்கியம். இந்த முறைகளை கடைப்பிடித்தால் முடி நரைப்பது குறைந்து கேசம் ஆரோக்கியமாக இருக்கும்.