
சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து தலைமுடி உதிர்வைத் தடுத்து முடி நன்கு செழித்து வளர செய்ய முடியும். வெந்தயம், எலுமிச்சைச் சாறு, கிரீன் டீ, ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் முட்டை போன்றவை தான் இந்த 5 பொருட்கள்.
1. வெந்தயம்;
பலன்கள் மற்றும் பயன்பாடு; வெந்தய விதைகளில் வைட்டமின்கள் ஏ, சி, கே, இரும்பு மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச் சத்துக்கள் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. வெந்தயத்தில் உள்ள பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் பொடுகை எதிர்த்துப் போராடி உச்சந்தலைக்கு நல்ல வலுவான அடித்தளத்தை அமைத்து முடி உதிர்வை தடுக்கும்.
பயன்படுத்தும் விதம்; ஒரு சிறிய கிண்ணம் நிறைய நான்கைந்து ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து மறுநாள் காலை அதை பேஸ்ட் போல நைசா அரைத்துக் கொள்ளவும் உச்சந்தலையை நன்கு தடவி ஒரு மணி நேரம் கழித்து தலை முடியை அலச வேண்டும்.
2. எலுமிச்சை சாறு;
பலன்கள் மற்றும் பயன்பாடு; இதில் விட்டமின் சி நிறைந்துள்ளது. இது முடி வலிமை மற்றும் வளர்ச்சிக்கு தேவையான கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இது பி எச் அளவை சம நிலைப்படுத்தி அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை அகற்றுவதன் மூலம் ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிக்க உதவுகிறது. இது பொடுகு மற்றும் உச்சந்தலையில் உள்ள தொற்றுகளை எதிர்த்துப் போராடும்.
பயன்படுத்தும் விதம்; ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் உள்ள சாற்றை கிண்ணத்தில் பிழிந்து கொள்ளவும். பின் அதை விரல் நுனியால் எடுத்து உச்சந்தலையிலும் முடியிலும் தடவி 15 நிமிடங்கள் விட்டு விடவும். பின்பு மென்மையான ஷாம்பு போட்டு தலையை அலசி விடவும்.
3. கிரீன் டீ;
பலன்கள் மற்றும் பயன்பாடு; ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்தது கிரீன் டீ. இது முடி உதிர்வைத் தடுக்க உதவும். கிரீன் டீ யில் உள்ள காஃபின் மயிர்க்கால்களை தூண்டி முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
பயன்படுத்தும் விதம்; அரை டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, ஒரு கிரீன் டீ பாக்கெட்டை அதில் மூழ்க வைத்து, அதில் கிரீன் டீயின் எசென்ஸ் முழுவதும் தண்ணீரில் விழுமாறு நன்றாக பிழிந்து ஆற வைத்து தலையில் தடவ வேண்டும். அரை மணிநேரம் கழித்து, தலைமுடியை அலசி விடவேண்டும். இது முடி வளர்ச்சியை நன்றாகத் தூண்டும்.
4. ஆப்பிள் சைடர் வினிகர்;
இது உச்சந்தலையின் இயற்கையான பி ஹெச் ஐ மீட்டெடுக்க உதவுகிறது. முடி வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்குகிறது. முடியின் வேர்க்கால்களை அடைக்கக்கூடிய அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணையை நீக்குகிறது.
பயன்படுத்தும் விதம்; ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவில் கலக்கிக் கொள்ளவும். இந்தக் கலவையை உச்சந்தலையிலும் தலைமுடியிலும் தடவி 30 நிமிடங்கள் கழித்து தலையை அலசிவிடவும்.
5. முட்டை;
முட்டை புரதம் மற்றும் பயோட்டின் உள்ள சிறந்த மூலப் பொருளாகும். இது முடியின் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமானது. மஞ்சள் கருவில் உள்ள கொழுப்புகள் முடியை உதிராமல் செய்கின்றன. அதே சமயத்தில் முட்டையின் வெள்ளைக் கரு முடியை வலுப்படுத்த உதவுகிறது.
பயன்படுத்தும் விதம்; ஒரு முட்டையை உடைத்து நன்றாக அடித்துக் கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் அரை மூடி எலுமிச்சைச்சாறு கலக்கவும். இந்தக் கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு அலசவும்.