பலரது அழகைக் கெடுக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனைதான் Open Pores. இவை முகத்தில் குறிப்பாக T-Zone (நெற்றி, மூக்கு, கன்னங்கள்) பகுதியில் அதிகமாகத் தோன்றும். இந்தத் துளைகள் சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம். இது சருமத்தின் தோற்றத்தை மட்டுமின்றி ஒருவரின் சுயமரியாதையையும் பாதிக்கக்கூடும். இந்தப் பதிவில் சருமத்தில் ஏற்படும் Open Pores ஏன் வருகிறது என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.
Open Pores: சருமத்தில் உள்ள ஒவ்வொரு துளையும் ஒரு ‘செபாசியஸ்’ சுரப்பியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சுரப்பிகள் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க ‘செபம்’ எனப்படும் எண்ணையை உற்பத்தி செய்கின்றன. இந்த எண்ணெய், இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் துளைகளை அடைத்துவிட்டால் அவை விரிவடைந்து Open Pore-களாக மாறும்.
காரணங்கள்: மரபணு, ஹார்மோன்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் போன்ற காரணங்களால் சிலருக்கு அதிகப்படியான செபம் உற்பத்தியாகும். இது ஓபன் போர்ஸ் ஏற்படக் காரணமாக அமையும். நமது சரும செல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படும். இறந்த செல்கள் சரியாக நீங்காவிட்டால் அவை துளைகளை அடைத்துவிடும்.
தோலில் உள்ள அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் சருமத்தில் உள்ள துளைகளுக்குள் சென்று அடைப்பை ஏற்படுத்தும். மேலும், சருமத்தில் ஏற்படும் ஒயிட் ஹெட்ஸ் மற்றும் பிளாக் ஹெட்ஸ் போன்றவை படிப்படியாக விரிவடைந்து, திறந்த துளைகளாக மாறலாம்.
நமக்கு வயது அதிகரிக்கும்போது சருமத்தின் இயற்கையான கொலாஜன் உற்பத்தி குறையும். இதனால், துளைகள் தளர்ந்து பெரிதாகிவிடும். சில முகப்பூச்சுகள், மாய்ஸ்சரைஸர்கள் போன்ற தயாரிப்புகள் கூட சருமத்தில் ஓபன் போர்ஸை உருவாக்கலாம்.
மாதவிடாய், கர்ப்பம், மன அழுத்தம் போன்ற ஹார்மோன் மாற்றங்கள் செபம் உற்பத்தியை அதிகரித்து சருமத்தில் துளைகளை விரிவாக்கும்.
ஓபன் போர்ஸ் குறைப்பதற்கான வழிகள்:
தினசரி இரண்டு முறை முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். வாரத்திற்கு ஒருமுறை சருமத்தை எக்ஸ்போலியட் செய்து இறந்த செல்களை நீக்க வேண்டும். எண்ணெய் அதிகம் இல்லாத மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டும். சூரிய ஒளியில் வெளியே செல்லும்போது சருமத்தை சன்ஸ்கிரீன் பயன்படுத்தி பாதுகாக்கவும்.
எப்போதும் ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை உண்ணவும். மது, புகைப்பழக்கம் போன்றவற்றை உடனடியாக நிறுத்தவும். ஒருவேளை ஓபன் போர்ஸ் சருமத்தில் அதிகமாக இருந்தால், தோல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.