நம் வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் திரைப்படங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கேஜிஎஃப் மற்றும் துணிவு போன்ற படங்களில் கதாநாயகர்களின் நீண்ட தாடி, இன்றைய இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதே போன்று நாமும் தாடி வளர்க்க வேண்டும் என்ற ஆசையில் பியர்டு ஆயில் மற்றும் பியர்டு தைலத்தைப் பயன்படுத்துகிறார்கள். இவையிரண்டில் எது சிறந்தது என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.
ஆண்களுக்கு தாடி வளர்த்தல் என்பது இயல்பாகவே பிடித்தமான ஒன்று. வளரும் இளம் பருவத்தில் புதுப்புது மாடல்களில் தங்களின் தாடியை அலங்காரப்படுத்திக் கொள்வதில் ஆண்கள் பலரும் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னமும் ஒருபடி மேலே சொல்ல வேண்டுமென்றால், தாடியின் வளர்ச்சிக்காக சில ஆயில்களைப் பயன்படுத்தவும் துணிகிறார்கள். பெண்கள் தங்கள் முக அழகை எப்படி மேம்படுத்திக் கொள்கிறார்களோ, அதேபோல் அவர்களுக்கு இணையாக தாடியை வளர்த்து முக அழகை மேம்படுத்த ஆண்கள் மெனக்கெடுகின்றனர்.
நேரத்தையும், பணத்தையும் ஒதுக்கி தாடியை வளர்க்கும் அளவிற்கு தாடி முக்கியம் தானா என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இதில் தாடியின் வளர்ச்சியை விடவும், மற்றவர்கள் பார்வைக்கு நாம் அழகாகத் தெரிய வேண்டுமெனில் தாடியை ஸ்டைலாக வைத்துக் கொள்ள வேண்டும் என பல ஆண்கள் நம்புகின்றனர்.
ஆண்களுக்கு தலைமுடி வளர்ச்சியை விடவும், தாடியின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஏனெனில், பிறக்கும் தருணத்தில் இருந்தே தலைமுடி வளர்ச்சி தொடங்கி விடுவதால், காலப்போக்கில் உணவுப் பழக்கம் மற்றும் மரபணுவின் தாக்கத்தால் தலைமுடியின் உதிர்வை இள வயதிலேயே சந்திக்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னரே தாடியின் வளர்ச்சி தொடங்குவதால், பலருக்கும் இதன் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. இருப்பினும் இந்த வளர்ச்சி போதாதென்று பல ஆண்கள் பியர்டு ஆயில் மற்றும் பியர்டு தைலத்தை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இவையிரண்டில் எது தாடி வளர்ச்சிக்கு சிறப்பாக ஒத்துழைக்கிறது என்ற குழப்பம் ஆண்கள் மத்தியில் நிலவுகிறது.
பியர்டு ஆயில்:
ஆண்களின் தாடி வளர்ச்சிக்கு உள்ளிருந்து ஊட்டமளிக்க பியர்டு ஆயில் உதவுகிறது. தாடிக்கு ஏற்ற ஈரப்பதம் இதிலிருந்து கிடைப்பதால், அரிப்பைத் தடுக்க முடியும். இதில் ஷியா வெண்ணெய், அத்தியாவசிய எண்ணெய்கள், கேரியர் எண்ணெய்கள் மற்றும் கண்டிஷனிங் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. உராய்வைக் குறைக்கும் பியர்டு ஆயிலை, ஷேவிங் க்ரீம் அல்லது ஜெல்லிற்கு பதிலாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பியர்டு தைலம்:
கட்டுக்கடங்காமல் தாடி வளரும் நபர்களுக்கு பியர்டு தைலம் சிறந்ததாக இருக்கும். இதில் ஷியா வெண்ணெய், ஆர்கான், தேன் மெழுகு, மற்றும் ஜோஜோபா எண்ணெய் ஆகிய இயற்கையான பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தாடியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி ஸ்டைலாக மாற்றவும் இது உதவுகிறது. தாடியை எப்போதும் சுத்தமாகவும், புதிதாகவும் வைத்துக் கொள்வதில் பியர்டு தைலம் பெரும்பங்கு வகிக்கிறது.
புதிதாக தாடி வளர்ப்பவர்கள் பியர்டு ஆயிலை பயன்படுத்தலாம். ஷேவ் செய்த பிறகு இந்த ஆயிலைத் தடவுவதன் மூலம், சருமத்தில் ஊடுருவி பாதுகாப்பை அளிக்கிறது. பளபளப்பான தோற்றம் வேண்டும் என நினைப்பவர்கள் பியர்டு ஆயிலைப் பயன்படுத்தலாம்.
தாடியை ஸ்டைலாகவும், நல்ல ஃபினிசையும் விரும்புபவர்கள் பியர்டு தைலத்தைப் பயன்படுத்தலாம்.