அழகான முடிக்கு இப்போது பலரும் பார்லர்களில் ஹேர் போடோக்ஸ் சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். அந்தவகையில் ஹேர் போடோக்ஸ் சிகிச்சை எடுத்துக்கொள்வதால் என்ன பயன் என்றுப் பார்ப்போம்.
இப்போது முக்கால் வாசி பெண்கள் பார்லர் சென்று தங்கள் முடியை அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதேபோல், இதற்கு பல முறைகளும் சிகிச்சைகளும் வந்துவிட்டன. அதில் ஒன்றுதான் போடோக்ஸ் சிகிச்சை. போடோக்ஸ் என்பது முடிக்கு ஆழமாக கண்டிஷனிங் செய்யும் சிகிச்சையாகும். கெரட்டின் கொண்டு உடைந்த முடியை சரி செய்கிறது. இதனால் முடி பளபளப்பாகவும், மென்மையாகவும் மாறுகிறது.
பிளவு முனைகள், பளபளப்பு இல்லாதது, சேதமடைந்த முடி, முடி உதிர்தல் போன்றவற்றை சரி செய்ய இந்த போடோக்ஸ் உதவுகிறது.
இதனால் ஹெவி கெமிக்கல் இல்லாமல் எந்த ஸ்ட்ரெய்ட்னிங் பொருட்கள் பயன்படுத்தாமல் முடியை நேராக்கலாம். மேலும் இது பொடுகு தொல்லையை குறைக்கிறது.
போடோக்ஸ் செய்த 30 நிமிடங்களுக்கு பிறகு கூந்தலை அலச வேண்டும். அதனை நன்றாக காய வைக்க வேண்டும். இந்த சிகிச்சைக்கு பிறகு வெப்பம் தரும் கருவிகளை பயன்படுத்துதல் கூடாது. போடோக்ஸில் பயன்படுத்தும் பொருட்கள் மயிர்க்கால்களுக்கு நீரேற்றம், ஈரப்பதம் மற்றும் பளபளப்பை தருகிறது. மேலும் இந்த பொருட்கள் முடியை மென்மையாகவும் ஈரப்பதத்தை கொடுக்கவும், கூந்தலை பொலிவாகவும் வைத்துக்கொள்ளும்.
இந்த சிகிச்சைக்கு பிறகு நீங்கள் முடியை அதிகமாக கவனிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. pH சமநிலை கொண்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த சிகிச்சையின் பலன் 2 முதல் 4 மாதங்கள் வரை இருக்கும். மேலும் முடிகளை பாதுகாக்க குறைந்த சல்பேட் அல்லது சல்பேட் இல்லாத ஷாம்புவை பயன்படுத்தி வரலாம்.
போடோக்ஸ் செய்த முடிக்கு சல்பேட் இல்லாத, சிலிகான் இல்லாத மற்றும் பாரபென் இல்லாத க்ளென்சரை பயன்படுத்துங்கள். வெயிலில் செல்லும்போது கூந்தலை மறைத்துக்கொள்ளுங்கள். மேலும் உராய்வு ஏற்படாமல் இருக்க பின்னிப் போடலாம். வருடத்திற்கு 2 முதல் 3 முறை வரை போடோக்ஸ் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.