முடியை இறுக்கி ஹேர்ஸ்டைல் செய்தால் நன்றாக வளரும் எனக் கேள்விப்பட்டிருப்போம். சிறுவயதில், முடியை நன்கு இழுத்து கட்டிக் கொண்டுதான் நம்மில் பெரும்பாலோர், பள்ளிக்குச் சென்றிருப்போம். ஆனால், முடிக்கு நாம் கொடுக்கும் இந்த அழுத்தம் பின்னாளில் நமக்கு மன அழுத்தமாக மாறுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், தினமும் முடிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாம் செய்யும் ஹேர்ஸ்டைல்ஸ் முடி உதிர்வுக்கு காரணமாகிறது. மன அழுத்தத்திற்கும் காரணமாகிறது. இதற்கு ‘ட்ராக்ஷன் அலோபீசியா’ என்ற பெயர்.
‘ட்ராக்ஷன் அலோபீசியா’ என்றால் என்ன?
ட்டிராக்ஷன் அலோபீசியா என்பது இறுக்கமான போனிடெயில், ஜடை போன்று முடிக்கு நன்கு அழுத்தம் தரக்கூடிய சிகை அலங்காரங்களால் ஏற்படும் முடி உதிர்தல் பிரச்சனையைக் குறிக்கும். இந்த வகை முடி உதிர்தல் 'வழுக்கைப்' பிரச்சனையில் இருந்து வேறுபட்டது. டிராக்ஷன் அலோபீசியா பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனித்தால், முழுமையாக சரி செய்ய முடியும். மீண்டும் முடியை வளர வைக்க முடியும். இருப்பினும், காலப்போக்கில் இதை அப்படியே விட்டுவிட்டால், முடியின் வேர்கள் மற்றும் மயிர்க்கால்கள் மீள முடியாத அளவுக்கு சேதமடையலாம். இந்தப் பிரச்சனை ஆண்களை விட பெண்களிடமே அதிகம் காணப்படுகிறது என்று சொல்லவும் வேண்டுமா?
‘ட்ராக்ஷன் அலோபீசியா’ எதனால் ஏற்படுகிறது?
தலைமுடிகள் மற்றும் தாடிகளை இறுக்கமாக கட்டுதல், ஸ்போர்ட்ஸ் ஹெல்மெட் அல்லது இறுக்கமான எலாஸ்டிக் ஹெட் பேண்ட்கள், ஒவ்வொரு நாளும் ஒரே விதத்தில் அணியும் ஹேர் கிளிப்ஸ், ஹேர் பன் போன்ற சிகை அலங்கார பொருட்களை பயன்படுத்துதல் மூலமாக டிராக்ஷன் அலோபீசியா ஏற்படுகிறது.
‘ட்ராக்ஷன் அலோபீசியா'-வை அறிவது எப்படி?
நெற்றி, பின் கழுத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் போன்ற அழுத்தம் கொடுக்கும் இடங்களில் முடி இல்லாமல் இருத்தல், முடியில் பிளவுகள் (முடி பிளவுகள்) அல்லது முடி உடைதல், உச்சந்தலை மற்றும் ஜடைகளின் அடிப்பகுதியில் சிறிய பருக்கள் தோன்றுதல், முடியின் வேர்க்கால் பகுதியில் அல்லது முடி உதிர்ந்த பகுதியில் அரிப்பு, சிவப்பாக மாறுதல் மற்றும் புண்கள் போன்ற அறிகுறிகள் மூலம் டிராக்ஷன் அலோபீசியா பிரச்னையை எளிதாக கண்டறியலாம்.
'ட்ராக்ஷன் அலோபீசியா' தடுக்கும் முறைகள்:
முடிந்த அளவு இறுக்கமான சிகை அலங்காரங்களைத் தவிர்க்கலாம். இறுக்கமான சிகை அலங்காரங்கள் அவசியம் கட்ட வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டால் முடிந்தவரை தளர்வாகக் கட்ட முயற்சி செய்யலாம். வாரத்திற்கு ஒருமுறை சிகை அலங்காரங்களை மாற்றலாம். முடி வளர்ச்சிக்குத் புரதம் மற்றும் இரும்புச்சத்து போதுமான அளவு கிடைப்பதன் மூலம் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். எனவே, பீன்ஸ், பருப்பு வகைகள், பழுப்பு அரிசி, மற்றும் கீரை போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். முடி உதிர்ந்த சில மாதங்களுக்குப் பிறகு முடி வளரவில்லை என்றால், மயிர்க்கால்கள் சேதமடையக்கூடும். இதைத் தடுக்க, இரசாயனங்கள் இல்லாத, உங்கள் முடிக்கு ஏற்ற முடி வளர்ச்சிக்கான தயாரிப்புகளை மருத்துவரின் ஆலோசனையோடு முயற்சிக்கலாம். இல்லையெனில், சிறந்த சிகிச்சை முறையைக் கண்டறிய மருத்துவரை அணுகலாம்.