இக்கால இளைஞர்களும் இளம்பெண்களும் நல்ல அடர் நிறத்தில் ஹேர் கலரிங் செய்துகொள்ளவே விரும்புகிறார்கள். அதுதான் தற்போதைய ரெண்டிங்கில் உள்ளது. இளம்பெண்கள் ஆம்ரி எபெக்ட் உள்ள ஹேர் கலரிங்கை விரும்புகிறார்கள். தலைமுடியின் கீழ்பகுதியில் அடர்ந்த நிறத்திலும் மேலே போகப்போக வெளிர் நிறத்திலும் இந்த ஹேர் கலரிங் இருக்கும். அவர்கள் மொத்த தலைமுடியையும் ஹேர் கலரிங் செய்துகொள்ளாமல் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே செய்துகொள்கிறார்கள். இதனால் தலைமுடியின் வேர்ப்பகுதி உடையாமல் பாதுகாக்கப்படுகிறது.
தலைமுடியை ஒட்ட வெட்டிக்கொண்டு அங்கங்கே பேட்சஸ்போல ஹேர் கலரிங் செய்துகொள்வதும் பிரபலமாகி வருகிறது. ஆரஞ்சு, பிங்க் ப்ளூ போன்ற அடர் நிறங்கள் இன்றைய ‘யூத்’ விரும்பும் சாய்ஸ். தலையின் ஒரு பகுதியில் தலைமுடியை முழுவதுமாக நீக்கிவிட்டு ஹேர் கலரிங் செய்துகொள்ளும் இளைஞர்களும் உண்டு. இளம்பெண்கள் போனி டைல் ஸ்டைலில் சிவப்பு, மஜந்தா போன்ற வண்ணங்களில் ஹேர் கலரிங் செய்து கொள்கிறார்கள். இப்படி செய்துகொள்வது அவர்களை தனித்துவமாக காட்டும் என்பதால் இந்தச் சாய்ஸ். உடம்பில் டாட்டூ குத்திக்கொள்வதைப்போல ஹேர் கலரிங் செய்துகொள்வது இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
சிலர் தற்காலிகமாக ஹேர் கலரிங் செய்துகொள்வதும் உண்டு. ஒரு திருமணம் விசேஷம் அல்லது பார்ட்டி என்று ஒரு நாளுக்காக மட்டும் ஹேர் கலரிங் செய்துகொள்வதும் உண்டு. இது ஒரு நாள் மட்டுமே இருக்கும். அடுத்த நாள் தலைக்கு குளிக்கும்போது கரைந்துவிடும்.
சமீபத்தில், ஒரு இளம் பெண் தன் தலைமுடி முழுக்க வெள்ளை கலரில் ஹேர்கலரிங் செய்துகொண்டு வீட்டுக்கு வர, அவரது அம்மா அவரைத் திட்டி 'முதலில் பார்லருக்கு போய் உன் தலைமுடியை பழைய மாதிரி சரி செய்துகொண்டு வா' என்று அனுப்பிவிட்டார். அந்த அளவுக்கு இளம் பெண்களுக்கு ஹேர் கலரிங் மேல் அதீத பிடித்தம் இருக்கிறது. புதுமையான முறைகளைக் கையாள ஆர்வமும் இருக்கிறது.
ஹேர் கிரேயான்ஸ்:
வெள்ளைத் தாளில் பென்சிலில் ஓவியம் வரைந்து அதில் கிரேயான்கள் கொண்டு வண்ணம் தீட்டுவதுபோல தலைமுடியிலும் செய்துகொள்ளலாம். தலைமுடியில் கிரேயான்களைக் கொண்டு வரைந்துவிட்டால் போதும் .இது ஒரு நாள் இருக்கும். அடுத்த நாள் தலைமுடியை அலசும்போது போய்விடும்.
ஹேர் கிளிப்ஸ் போன்ற ஹேர் கலரிங்:
இந்த வகையில் ஒட்டுமொத்த தலைமுடியையும் ஹேர் கலரிங் செய்துகொள்ளாமல் ஆங்காங்கே சின்ன சின்ன கிளிப்புகள் போல குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஹேர் கலரிங் செய்துகொள்ளலாம். பிங்க், சிவப்பு இளஞ்சிவப்பு போன்ற வண்ணங்களில் ஆங்காங்கே ஹேர் கலரிங் செய்துகொள்ளலாம். இதனால் தலைமுடிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
குளோபல் ஃபேஷன் கலரிங்:
இந்த குளோபல் ஃபேஷன் கலரிங் மிகவும் பிரசித்தம். இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி இந்த மாதிரி ஹேர் கலரிங்தான் செய்திருக்கிறார். முடியை நீளமாக வளர்த்து நல்ல அடர் நிறத்தில் ஹேர் கலரிங் செய்திருக்கிறார். இது பார்ப்பதற்கு தனித்துவமாகவும் அழகாகவும் இருக்கும். இது ஒரிஜினல் தலைமுடி மாதிரியே இருக்கும். ஹேர் கலரிங் பண்ணின மாதிரி தெரியவே தெரியாது.
ஹேர் கலரிங் செய்ய நினைப்பவர்கள் பயமே இல்லாமல் தைரியமாக பார்லருக்கு சென்று ஹேர் கலரிங் செய்துகொள்ளலாம்.
தொகுப்பு - எஸ். விஜயலட்சுமி