

"மார்கழி மாசம் வந்தாச்சு... குளிரும் வந்தாச்சு." குளிர்காலம் என்றாலே ஒருவித சோம்பேறித்தனம் நம்மைத் தொற்றிக்கொள்ளும். போர்வைக்குள்ளேயே இருக்கத் தோன்றும். இதில் மிக முக்கியமாக நாம் செய்யும் தவறு, தண்ணீர் குடிப்பதை நிறுத்துவது. அடிக்கடி பாத்ரூம் போக வேண்டுமே என்ற சோம்பேறித்தனத்தால் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால், நம் உடல் மட்டுமல்ல, சருமமும் வறண்டு பாலைவனம் போல ஆகிவிடும்.
காற்றில் இருக்கும் வறட்சி நம் முகத்தில் இருக்கும் ஈரப்பதத்தை மொத்தமாக உறிஞ்சிவிடும். "இந்த நேரத்தில் ஃபேஸ் பேக் போடலாமா? போட்டால் இன்னும் வறண்டு விடுமா?" என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.
Face Masks ஏன் அவசியம்?
உண்மையில், குளிர்காலத்தில் ஃபேஸ் பேக் மிகவும் அவசியம். வெளியே இருக்கும் குளிர்ந்த காற்று, நம் சருமத்தின் பாதுகாப்பை உடைத்து, தோலை உரியச் செய்யும். இந்த நேரத்தில் நாம் போடும் சரியான ஃபேஸ் பேக், சருமத்திற்குத் தேவையான நீர்ப்பசையை ஆழமாகச் செலுத்தி, ஒரு பாதுகாப்பு அரணாகச் செயல்படுகிறது. இது சருமத்தை வலுவாக்கி, பளபளப்பைக் கூட்டும்.
செம்பருத்தியும் தேனும்!
செம்பருத்திப் பூவில் இயற்கையாகவே சருமத்தைப் பொலிவாக்கும் தன்மை உள்ளது. இதனுடன் தேன் மற்றும் தேங்காய் எண்ணெய்யைக் கலந்து முகத்தில் தடவினால், அது வறண்ட சருமத்திற்கு ஒரு அமிர்தம் போலச் செயல்படும். இது சருமத்தை மிருதுவாக்குவதுடன், நல்ல நிறத்தையும் கொடுக்கும்.
பழங்களின் பவர்!
அடுத்ததாக, பப்பாளி மற்றும் எலுமிச்சை. பப்பாளியில் வைட்டமின் A, C, E என சருமத்திற்குத் தேவையான அத்தனை சத்துக்களும் உள்ளன. பப்பாளிக் கூழுடன், சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவினால், வறண்ட திட்டுகள் மறைந்து முகம் மென்மையாக மாறும்.
அதேபோல, தயிர் மற்றும் ஆரஞ்சு பழச்சாறு கலவையும் குளிர்காலத்திற்கு ஏற்றது. தயிர் முகத்திற்கு ஈரப்பதத்தைத் தரும்; ஆரஞ்சு சாறு முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் கருமையை நீக்கி, ப்ளீச் செய்தது போல மாற்றும். 20 நிமிடம் ஊற வைத்து எடுபட்டால் முகம் பளிச்சென்று இருக்கும்.
மசாஜ்!
வெறும் ஃபேஸ் பேக் மட்டும் போதாது. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை முகத்திற்கு மென்மையான மசாஜ் கொடுப்பது அவசியம். பாதாம் எண்ணெய், கற்றாழை அல்லது சந்தனம் கலந்த க்ரீம்களைக் கொண்டு மசாஜ் செய்யும்போது, ரத்த ஓட்டம் அதிகரித்து, ஃபேஸ் பேக்கின் சத்துக்கள் சருமத்தின் உள்ளே இறங்க உதவும். இது முகத்தை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.
இந்தக் குறிப்புகள் அனைத்தும் பொதுவான சருமத்திற்கானவை. ஒருவேளை உங்களுக்கு மிக அதிகப்படியான முகப்பரு அல்லது உணர்திறன் மிக்க சருமம் இருந்தால், எதையும் முயற்சிக்கும் முன் உங்கள் தோல் மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை பெறுவது நல்லது.
குளிர்காலம் தானே என்று சருமத்தைக் கவனிக்காமல் விட்டால், அது நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்திவிடும். மேலே சொன்ன எளிய வழிமுறைகள் மூலம், இந்த பனிக்காலத்திலும் உங்கள் சருமத்தை வறட்சியின்றி, பட்டுப்போல வைத்துக்கொள்ள முடியும்.