கண் கருவளையம் மறைய பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீ வழங்கும் பியூட்டி டிப்ஸ்!
கண்களில் கருவளையம் என்பது இப்போதெல்லாம் ஒரு பொதுப் பிரச்சினை. எல்லோருக்குமே… அதாவது இரவில் நீண்ட நேரம் கண் விழித்துப் படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது நைட் ஷிஃப்ட் வேலையில் இருந்தாலோ இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் கண்ணில் கருவளையம் வருவது இயல்பாகி விட்டது.
இதில் ஆண்கள், பெண்கள் பாகுபாடு கூடக் கிடையாது.
இதனால் கண்களின் அடிப்பகுதியில் மட்டும் தோலின் நிறம் மாறி கன்றிப் போய்த்தெரியும். இப்படிப் பழுத்துப் போன தோலை அப்படியே விட்டோம் பிறகு அந்த இடம் வறண்டு சருமம் முரடாகிப் போகும்.
இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் நாம் பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீ இதற்காக என்றே ஸ்பெஷலாகப் பகிர்ந்திருக்கும் இந்த அழகுக் குறிப்பைத் தாராளமாகப் பின்பற்றலாம். ஏனென்றால் நடிகர், நடிகைகள் திரைப்பட படப்பிடிப்புகளுக்காக நேரம், காலம் பாராது உலகின் பல்வேறு பாகங்களுக்குப் பயணப்படக்கூடியவர்கள். அவர்களுக்கும் நிச்சயம் இந்தக் கண் கருவளையம் மற்றும் வறண்ட சருமம் உள்ளிட்ட பிரச்சினைகளைக் கடந்தாக வேண்டிய தேவை இருந்திருக்கக் கூடும். ஆகவே அதனடிப்படையில் அவர்கள் தரும் அழகுக் குறிப்புகளும், ஆரோக்யக் குறிப்புகளும் நிச்சயம் தரும்.
தேவையான பொருட்கள்:
நன்கு கனிந்த வாழைப்பழத்தின் தோல் – 1
கற்றாழை ஜெல்- 1 டீஸ்பூன்
செய்முறை:
கனிந்த வாழைப்பழத்தின் தோலை உரித்து அதன் உட்புறத்தில் படிந்திருக்கும் மெல்லிய பகுதியை ஸ்பூனால் சுரண்டி எடுக்கவும். இதைப் பின்னர் கற்றாழை ஜெல்லுடன் கலக்க வேண்டும். கற்றாழை ஜெல் என்பது வேறொன்றுமில்லை கற்றாழை மடலை அறுத்தால் உள்ளே ஜெல்லி போன்று கூழ் வடிவில் இருக்கும் சோறு தான் கற்றாழை ஜெல். இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸியில் அடித்துக் கூழ் போலாக்கிக் கொண்டால் போதும் இப்போது கருவளையத்தில் தடவ பேஸ்ட் தயார்.
சிரமம் பாராமல் இந்த பேஸ்ட்டை காலையில் ஒருமுறையும் மாலையில் ஒரு முறையும் கருவளையம் இருக்கும் பகுதிகள் மற்றும் வறண்ட சருமம் தென்படும் இடங்களில் எல்லாம் தேய்த்து வந்தால் போதும் வெகு சீக்கிரத்திலே கருவளையப் பிரச்சினை உடனடியாகத் தீரும்.
- என்கிறார் பாக்யஸ்ரீ.