முகப்பரு தொல்லையிலிருந்து விடுபட முதலில் இத படியுங்க...!

முகப்பரு தொல்லையிலிருந்து விடுபட முதலில் இத படியுங்க...!

முகப்பருக்கள் ஹார்மோன் இம்பேலன்ஸினால் நிகழக்கூடிய ஒரு சாதாரண விஷயம் தான். சிறுமிகள் இளம்பெண்களாக முதிர்ச்சி அடையும் போதும், சிறுவர்கள் இளைஞர்களாக முதிர்ச்சி அடையும் போதும் நிகழும் ஹார்மோன் சுரப்புகளின் ஏற்றத் தாழ்வினால் இது வரக்கூடியது தான். யதார்த்தமான இந்த நிஜம் பல நேரங்களில் நமக்குப் பிடிப்பதே இல்லை என்பது உண்மைதான்!

முகப்பருக்கள் பெரும்பாலான வேளைகளில் அழையா விருந்தாளிகளாக வந்து நம்மை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும். இது நமக்கு எரிச்சலை ஏற்படுத்தும்

பருக்கள் வருவதும் போவதும் இயல்பான விஷயம் என்றே எடுத்துக் கொண்டாலும் சில கடினமான பருக்கள் தரும் வலியை நம்மால் பொருத்தக் கொள்ள முடியாது என்பதும் நிஜம். தலையணையில் குப்புறப் படுத்துப் பழகியவர்கள் பருக்கள் நிறைந்த முகத்துடன் அப்படிச் செய்ய முடியாமல் திண்டாடுவார்கள்.

அகஸ்மாத்தாக பருக்கள் மலிந்த பகுதியில் நச்சென்று இடித்துக் கொண்டு ரத்த காயம் அடைந்தவர்கள் கூட இருக்கிறார்கள்.

இதெல்லாம் உங்களை பயமுறுத்துவதற்காகச் சொல்லவில்லை.

பருக்களை சாதாரணமாக எண்ணி அப்படியே விட்டு விடத் தேவையில்லை. அவற்றைக் களைய முறையாக முயன்றாலே போதும். வீட்டில் இயற்கை முறையிலேயே அவற்றிலிருந்து விடுபட நமக்கு விமோசனம் கிடைத்து விடும்.

இந்த பருக்கள் ஏன் வருகின்றன என்று முதலில் தெரிந்து கொள்வோம்... பிறகு தானே அவற்றைத் தவிர்க்க வழி கண்டுபிடிக்க முடியும்.

நமது முக சருமத்துக்கு அடியில் உள்ள செபேசியஸ் சுரப்பிகளில் இருந்து எண்ணெய் போன்ற வழுவழுப்பான திரவத்தைச் சுரக்கிறது. இதை, சீபம் என்கிறார்கள். நமது உடல் முழுதும் இந்த சுரப்பி இருந்தாலும் கூட , முகத்தில் கன்னம், மூக்கு, நெற்றி ஆகிய பகுதிகளில்தான் இந்த சுரப்பி அதிகமாகச் சுரக்கும். நமது சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைப்பதோடு, சருமம் வறட்சி அடையாமல் பாதுகாக்கவும் இது உதவுகிறது. முகம் பளபளப்பாக இருக்கவும், முகத்தசைகள் சுருங்கி விரியவும் இந்தச் சுரப்புகள் உதவும். பருவ வயதில் ஆண்ட்ரோஜன் (Androgen) என்ற ஹார்மோன் சுரக்கத் தொடங்கும். சிலருக்கு ஆண்ட்ரோஜன் சுரப்பு அதிகமாகும்போது, அது சீபத்தையும் அதிகமாகச் சுரக்கச்செய்து விடுகிறது. இதனால் முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரித்து, பருக்கள் உருவாகின்றன. காற்றில் உள்ள கண்ணுக்குத் தெரியாத தூசுக்கள் பருக்களில் ஒட்டிக்கொள்ளும்போது, பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சீழ் பிடிக்கிறது.

பருத்தொல்லை நீங்க உடனடியாக நாம் பின்பற்ற வேண்டிய லைஃப்ஸ்டைல் மாற்றங்களை முதலில் பார்த்து விடலாம். சில நேரங்களில் இதுவே கூட போதுமான தீர்வாக அமைந்து விடும்.

1. பெரும்பாலான சரும மருத்துவர்கள் முகப்பருக்கள் வர வயது மட்டுமல்லாமல் நமது வாழ்க்கைமுறையும் காரணம் என்கிறார்கள். அதில் முக்கியமானது நீளமாக நகம் வளர்ப்பது, அடிக்கடி முகத்தில் கை வைப்பது, லேசாக பருக்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை நீக்குகிறேன் என்று நகத்தால் கிள்ளி அகற்றுவது, தலையில் பொடுகு இருக்கும் பட்சத்தில் தலையை சொரிந்து விட்டு அப்படியே அதே கை விரல்களால் முகத்தைத் துடைப்பது போன்ற நடவடிக்கைகள் பருக்கள் பெருகக் காரணமாகி விடுகின்றன. இந்தப் பழக்கங்களைத் தவிர்த்தால் பருத்தொல்லையையும் தவிர்க்க வாய்ப்பு உண்டு.

2. அடுத்து மலச்சிக்கல், இன்றைய ஜங்க் வகை உணவுகளால் பெரும்பாலானோருக்கு உண்ட உணவு முறையாக ஜீரணம் ஆவதே இல்லை. கழிவு அகற்றம் சரியாக நடைபெறாவிட்டால் அதனாலும் முகப்பருக்கள் வரக்கூடும் என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.

3. உடலில் நீர்சத்து குறைந்தாலும் முகத்தில் பருக்கள் தோன்றும். நாள் பட அதிகரிக்கும். எனவே தினமும் நிறைய தண்ணீர் அருந்தும் பழக்கத்தை நாம் முறைப்படுத்த வேண்டும்.

4. கீரைகள், காய்கறிகள், பழங்கள், கொட்டைகள் நிறைந்த சரி விகித உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அப்போது தான் ஜீரணமண்டலம் முறையாகச் செயல்படும். பெரும்பாலும் கொழுப்புச் சத்து மிகுந்த உணவுகளைத் தவிர்த்து விடுதல் நல்லது.

5. முகத்துக்கு மஞ்சள் பூசுவதை தவிர்த்து விடலாம். இன்றைக்கு மஞ்சள் தூளில் ரசாயணக் கலப்பு அதிகமிருப்பதால் அதனால் நன்மையைக் காட்டிலும் தொல்லைகள் தான் அதிகம். உங்களால் முடிந்தால் விரலி மஞ்சள் கிழங்குகளை நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கி அரைத்துப் பயன்படுத்துங்கள். அல்லது அந்தப் பழக்கத்தையே தவிர்த்து விடுங்கள்.

6. அதிகம் பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களைத் தவிருங்கள்.

7. குளிப்பதற்கு அமிலத்தன்மை குறைந்த சோப்களை பயன்படுத்துங்கள்.

8. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சியில் ஈடுபடும் போது வியர்வைத் துளைகள் வழியாக சருமத்தின் மேற்பகுதி சுத்தமாகி விடும்.

9. குளிப்பதற்கு கை பொறுக்கும் சூட்டில் வெந்நீர் இருந்தால் போதும். புகை வரும் அளவுக்கு சூடான நீரில் குளிக்கும் பழக்கம் தேவை இல்லை. அது சருமத்திற்கு மிகப்பெரிய எதிரி.

10. கடைசியாக ஒரு முக்கியமான விஷயம், வீடுகளில் இப்போதெல்லாம் 4 அல்லது 5 பேர் கொண்ட நியூக்ளியர் குடும்பம் தான். எனவே ஆளாளுக்கு தனித்தனியாக துண்டு, சோப், கைக்குட்டை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒருவர் பயன்படுத்தியதை மீண்டும் மீண்டும் குடும்பத்தில் அனைவரும் மாற்றி மாற்றி பயன்படுத்தும் பழக்கத்தை தவிர்த்து விடுங்கள்.

முகப்பரு தொல்லையில் இருந்து விடுபட எளிய ஹோம்மேட் டிப்ஸ்:

1. அரை மூடி லெமன் சாற்றில் கொஞ்சம் சர்க்கரை கலந்து நன்கு கரைந்த பின் முகத்தில் மென்மையாகத் தேய்த்து 10 நிமிடங்கள் ஊற வைத்துப் பின் கழுவவும். தொடர்ந்து 1 வாரம் இதைச் செய்தால் போதும் பருத்தொல்லை மட்டுப்படும். நாள்பட முற்றிலுமாக ஒழிந்து விடும்.

2. நல்ல நாட்டுச் சந்தனக் கட்டை கிடைத்தால் வாங்கி வைத்துக் கொண்டு அதில் லேசாகப் பன்னீர் தெளித்து கல்லில் உரசி பேஸ்ட் பக்குவத்தில் எடுத்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்கள் ஊற வைத்துப் பின் கழுவலாம். இதுவும் பருத்தொல்லைக்கு நல்ல தீர்வு என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

3. முகத்தில் பருக்களால் காயம் ஏற்பட்டு வலி இருந்தால் தூய்மையான மலைத்தேன் சில துளிகள் எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்துப் பின் கழுவலாம். தேனுக்கு பருக்களால் உண்டாகும் தழும்புகளையும் துடைத்து ஒழிக்கும் சக்தி உண்டு.

4. வீட்டில் நாம் தினமும் உண்பதற்கு எடுக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் மிச்சமாவதை அரைத்து அப்படியே முகத்தில் தேய்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்துப் பின் கழுவலாம். ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, ஆரஞ்சு, பீட்ரூட், உருளை என இதில் எதற்கும் விதிவிலக்கே இல்லை. பருக்கள் தீர இதுவும் காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு வழிமுறையே.

5. 1 டேபிள் ஸ்பூன் கெட்டித் தயிரில் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவி ஊற வைத்துப் பின் கழுவலாம்.

6. வீட்டில் அரைத்த கடலை மாவில் ஒரு டீஸ்பூன் எடுத்து அதில் அரை டீஸ்பூன் தயிர் கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம். இதுவும் நல்ல பலன் தரக்கூடிய பழைய நடைமுறை தான்.

7. சிலருக்கு ஐஸ் ஒத்தடம் நல்ல பலன் தருகிறது. வறண்ட சருமம் கொண்டவர்கள் முதலில் ஆவி பிடித்து விட்டு சருமத் துளைகள் திறந்து வியர்வை வெளியேறிய பின் ஐஸ்கட்டிகளை ஒரு மெல்லிய துணியில் சுற்றி முகத்திற்கு ஐஸ் ஒத்தடம் தரலாம். இதனால் பருத்தொல்லைகள் தீர வழியுண்டு என்கிறார்கள் சரும நோய் சிகிச்சை நிபுணர்கள்.

8. இது தவிர வெள்ளைப்பூண்டு, குப்பை மேனி இலை, ரோஜா இதழ்கள், சோற்றுக்கற்றாழை, வேப்பிலை என இன்னும் பல பொருட்கள் இருக்கின்றன பருத்தொல்லையில் இருந்து நிவாரணம் பெற. இவை அனைத்தையும் தனித்தனியாக அரைத்து முகத்தில் தேய்த்து ஊற வைத்துக் கழுவினாலும் பருத்தொல்லையில் இருந்து விடுபடலாம்.

9. முக்கியமான விஷயம்... கடைகளில், சூப்பர் மார்க்கெட்டுகளில், அழகு நிலையங்களில் கிடைக்கும் அழகு சாதனப் பொருட்களை அவை உங்கள் சருமத்துக்கு உகந்தவை தானா? என்பதை தகுந்த சரும மருத்துவர்களின் ஆலோசனை இன்றி பயன்படுத்துவதை நிச்சயமாகத் தவிர்த்து விடுங்கள்.

மேற்சொன்ன வழிமுறைகளையும், ஆரோக்ய டிப்ஸுகளையும் முறையாகப் பின்பற்றினாலே போதும். பருத்தொல்லை இனிமேல் இல்லை என அடித்துச் சொல்லலாம்.

ஒரே நாளில் மிகப்பெரிய ஆசுவாசம் தருகின்றன இந்த ஹோம்மேட் வழிமுறைகள். ஆனால், அது நீங்கள் நினைக்கும் அளவுக்கு ஸ்விட்ச் போட்டதும் லைட் ஒளிர்கிற அளவுக்கான விரைவில் இல்லை. ஒவ்வொரு நாளும் நாம் மறக்காமல் இந்த டிப்ஸுகளை பின்பற்ற வேண்டும். குறைந்த பட்சம் அவற்றின் தொல்லை நிரந்தரமாகத் தீரும் வரை.

செய்து பாருங்கள் பிறகு நீங்களே ஒப்புக் கொள்வீர்கள்,

ரசாயண அழகு சாதனப் பொருட்கள், மருத்துவர் பரிந்துரைக்கும் அலோபதி கிரீம்களைத் தாண்டி இந்த குறிப்புகள் பயன்மிகுந்தவை என்பதை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com