
பலம் வாய்ந்த பாலூட்டிகள் முதல் சிறிய மண்புழு வரையிலான உயிரினங்கள் சில, தங்கள் உணவு, உறைவிடம் மற்றும் பாதுகாப்பு போன்ற கரணங்களுக்காக பூமிக்கடியில் சுரங்கப்பாதை (Tunnel) அமைத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. அவ்வாறான 10 விலங்குகள் பற்றின விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
1.மோல் (Mole): மோல்ஸ் தங்கள் வலிமையான முன்னங்கால்கள் மற்றும் கூர்மையான நகங்களையும் வைத்து, பூமிக்கடியில் ஒரு மணி நேரத்தில் 18 அடி பாதையை மிக நுணுக்கமான வடிவமைப்பில் அமைத்து, அதைத் தங்கள் உணவுக்காகவும் தங்குமிடமாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
2.நேகட் மோல் ரேட் (Naked Mole Rat): வினோதமான இந்த கொறித்துண்ணிகள் கூட்டமாக குடியேற காலனிகளை நுணுக்கமான வடிவில் அமைத்துக்கொள்ளும் திறமை கொண்டவை. இவை கிழக்கு ஆபிரிக்க பாலைவனப் பகுதிகளில் சுரங்கப் பாதை அமைத்து வாழ்பவை. சுரங்கப்பாதை தோண்டும்போது மண்ணோ அழுக்கோ வாய்க்குள் போய்விட வாய்ப்பில்லாதபடி இதன் பற்கள் உதட்டிற்கு வெளியே அமைந்துள்ளன.
3.மண் புழு (Earthworm): அளவில் சிறியதாயினும்
மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரியளவில் உதவுபவை. இவை மிக ஆழமாக வளை தோண்டுவதால், மண், சுழற்சி முறையில் ஊட்டச்சத்துக்களும், காற்றோட்டமும் பெறுகிறது. தாவரங்கள் சுலபமாக வேர்விட்டு செழித்து வளர முடிகிறது.
4.ப்ரைரி டாக் (Prairie Dog): இது பூமிக்கடியில், விரிவான தனித் தனி அறைகளை, வெளியே செல்வதற்கு ஏதுவாக வாசலையும் அமைத்துக் கட்டிக்கொள்கிறது. 30 மீட்டர் நீளத்துக்கு விரிந்துள்ள இச் சுரங்கம் மொத்த உறுப்பினர்களும் குடியேற ஏற்ற இடமாகிறது.
5.ஆர்மடில்லோ (Armadillo): 15 அடி நீளமுள்ள வளை தோண்டுவதற்கு, இது தன் வலுவான நகங்களைப் பயன்படுத்துகிறது. அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இவ்விலங்கு தீவிர வெப்ப நிலை மற்றும் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள இந்தக் குகைகளைப் பயன்படுத்திக்கொள்கிறது.
6.ஃபென்னெக் ஃபாக்ஸ் (Fennec Fox): சஹாரா பாலை வனத்தில் காணப்படும் இவ்விலங்கு பாலைவன வெப்பத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள பூமிக்கடியில் வளைகளைத் தோண்டுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட இதன் குகை பத்தடி ஆழத்தில் அமைக்கப்படுகிறது.
7.பேட்ஜெர் (Badger): இது பூமிக்கடியில் மிக வலுவான, பல பாதைகளைக் கொண்ட பெரிய பெரிய வீடுகளைக் கட்டக் கூடிய திறமை பெற்றது. தூங்குவதற்கு தனி அறைகளைக் கொண்ட இந்த வீடு, பல தலைமுறைகள் வாழத்தகுந்த விதத்தில் கட்டப்படுகிறது.
8.ஆர்ட்வார்க் (Aardvark): இது கரையான்களை வேட்டையாட மிக வேகமாகவும் ஆழமாகவும் வளைகளைத் தோண்டும். சுமார் 40 அடி நீளம் வரை கூட சுரங்கப்பாதை நீண்டு செல்லும். ஆர்ட்வார்க் தான் தோண்டிய டன்னல்களை அப்படியே விட்டுச் சென்ற பின் அவற்றை பிற விலங்குகள் உபயோகப்படுத்துவதுண்டு.
9.ராப்பிட் (Rabbit): முயல்கள் தோண்டும் இந்த வகைக் குழிகள் வார்ரென்ஸ் (Warrens) என அழைக்கப்படுகின்றன. தன்னை வேட்டையாடுபவர்களிடமிருந்து காத்துக்கொள்ள முயல் இதற்குள் மறைந்து கொள்கிறது. குளிர்ச்சியும் இருட்டும் நிறைந்த இவ்வளைக்குள் முயல் குட்டிபோட்டு அதைப் பத்திரமாக வளர்க்கவும் செய்யும்.
10.கோஃபெர் (Gopher): குழி தோண்டுவதில் அசாத்திய திறமை கொண்டது பாக்கெட் கோஃபெர். ஒரு வருடத்தில் டன் கணக்கில் மண்ணைத்தோண்டி இடம் பெயரச் செய்யும். அதன் சுரங்கப்பாதை 200 மீட்டர் நீளம்வரை கூட செல்லும். அதில் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க தனி அறைகளும் உண்டு.