
உலகின் வெப்பமண்டல நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் காலநிலை மிகவும் வித்தியாசமானது. இங்கு அதிக வெப்பம், அதிக மழை, அதிக குளிர், அதிக வறட்சியும் நிலவும். இந்தியாவில் வெயிலின் தாக்கமும் நாடு முழுக்க அதிகமாக இருக்கும். கிராமப்புறங்களில் பசுமையின் காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தாலும், நகர்ப்புறங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். கடந்த மூன்று தசாப்த காலத்தில் இந்தியாவில் வெப்பத்தின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை பலரையும் அதிர்ச்சியடைய வைக்கலாம்.
சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் 1990ம் ஆண்டு மற்றும் 2019ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தின், உலகளாவிய காலநிலை மற்றும் மாசுபாடு தரவுகளை பகுப்பாய்வு செய்துள்ளனர். கடுமையான வெயில், அதனால் ஏற்படும் காற்று மாசுபாடு ஆகியவற்றின் காரணமாக பலவித நோய்களை ஏற்படுத்துகிறது. வெயிலின் அதிகப்படியான தாக்கம் வெப்ப பக்கவாதம் போன்ற திடீர் உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சுவாச நோய்கள், இதய நோய்கள், நீரிழிவு நோய்கள் மற்றும் மூளை சார்ந்த எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
கோடைக் காலத்தில் சுற்றுச்சூழலில் 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான சிறிய துகள்கள், காற்றில் இருக்கும் தூசி, கார்பன், உப்பு, சல்பேட் மற்றும் உயிரியல் துகள்களால் ஆனது. இந்தத் துகள்கள் மிகச் சிறியவை. அவை சுவாசிக்கும்போது நுரையீரலுக்குள் சென்று இரத்த ஓட்டத்தில் நுழைந்து, நீண்டகால உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த ஆராய்ச்சி பற்றி ஜியோஹெல்த் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று தசாப்த காலத்தில் வெப்பம் மற்றும் மாசுபாடு இரண்டும் அதிகரித்துள்ளன. வெப்பம் மற்றும் மாசுபாடு நிகழ்வுகள் முன்பை விட அதிகரித்துள்ளது என்று ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன. இந்தக் காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டில் PM2.5 அளவு நுண்ணிய துகள்களும் கணிசமாக அதிகரித்துள்ளது. 1990ம் ஆண்டிலிருந்து 2019க்கு இடையில் வெப்பம் மற்றும் மாசுபாட்டின் காரணமாக உலகம் முழுவதும் 6,94,440 பேர் பலியாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி, பாட்னா, லக்னோ, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களும் வெப்பநிலை அதிகரித்து வருவதால், சுற்றுச்சூழல் மாசுபாட்டில் நுண்ணிய துகள்கள் (PM2.5) நுண்ணிய அளவுகளில் மிகவும் ஆபத்தான உயர்வைக் கொண்டுள்ளது. அதிக வெப்பநிலை வேதியியல் எதிர்வினைகளையும் துரிதப்படுத்துகிறது. இதனால் ஆவியாகும் கரிம சேர்மங்களின் அளவு அதிகரிக்கிறது. இந்த தனிமங்கள் காற்றில் கலந்து அதிக நச்சுத் தன்மையுள்ள மாசுக்களை உருவாக்குகின்றன.
இந்தியாவில் கடும் வெப்பம் மற்றும் காற்று மாசுபாட்டின் ஒருங்கிணைந்த விளைவு காரணமாக, கடந்த மூன்று தசாப்த காலத்தில் மட்டும் நாட்டில் சுமார் 1,42,765 பேர் இறந்துள்ளார்கள். காலநிலை மாற்றம் மற்றும் வளிமண்டல மாசுபாட்டின் கலவையானது, சுற்றுச்சூழல் சீர்கேட்டை உருவாக்குவது மட்டுமல்லாமல், கடுமையான பொது சுகாதார நெருக்கடியாகவும் மாறியுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. இந்தியாவில் கடுமையான வெப்பம் மற்றும் அதே நேரத்தில் அதிக நுண்ணிய துகள்கள் PM2.5 அளவுகள் இருக்கும்போது, இறப்பு விகிதங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன.