இன்றைய உலகில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவை பெரும் கவலைகளாக மாறியுள்ளன. இதனால் தனிநபர்கள் நடவடிக்கை எடுத்து தங்களின் கார்பன் தடத்தை குறைக்க முயற்சிப்பது அவசியமாகிறது. கார்பன் தடம் என்பது சுற்றுச்சூழலை பாதிக்கும் கார்பன் வெளியேற்றத்திற்கு நாம் எந்த அளவில் பங்காற்றுகிறோம் என்பதாகும். எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த பழக்க வழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதில் குறிப்பிடத்தக்க மாறுதல்களை ஏற்படுத்த முடியும்.
வீட்டில் ஆற்றலை சேமியுங்கள்: உங்கள் கார்பன் தடத்தைக் குறைப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று வீட்டில் ஆற்றலை சேமிப்பதாகும். அதாவது வீட்டில் அதிக ஆற்றலைந் பயன்படுத்தும் சாதனங்களுக்கு பதிலாக, LED பல்புகள் மற்றும் ஸ்டார் மதிப்பு அதிகம் உள்ள எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு மாறுங்கள். அதிக பயன்பாடு இல்லாத சமயங்களில் விளக்குகளை அணைக்கவும். முடிந்தவரை பகல் நேரத்தில் இயற்கை ஒளியைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
பொதுப் போக்குவரத்து: கிரீன்ஹவுஸ் வாயுக்களின்வெளியேற்றத்திற்கு போக்குவரத்து குறிப்பிட்ட பங்களிக்கிறது. எனவே முடிந்தவரை உங்களது தனிப்பட்ட வாகனத்தை தவிர்த்துக்கொண்டு, பொதுப் போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தவும். இதன் மூலமாக மாசுபாட்டை கணிசமாகக் குறைக்க முடியும். அல்லது சாதாரண காருக்கு பதிலாக மின்சார காருக்கு மாறுங்கள்.
Reduce, Reuse, Recycle: குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி போன்றவை நிலையான வாழ்க்கை முறைக்கான சிறந்த கொள்கைகளாகும். சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருட்கள் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள், முடிந்தவரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், பயன்படுத்திய பொருளை முறையாக மறுசுழற்சி செய்யும்படி அப்புறப்படுத்துங்கள்.
பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துங்கள்: உங்கள் கார்பன் தடத்தைக் குறைப்பதற்கான மற்றொரு வழி உங்களின் நுகர்வுப் பழக்கத்தில் கவனம் செலுத்துவதுதான். அதாவது மறுசுழற்சி அல்லது சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். அத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடும் நிறுவனங்களை ஆதரிக்கவும். புதிதாக ஒரு பொருளை வாங்குவதற்கு பதிலாக, செகண்ட் ஹேண்ட் பொருட்களை வாங்குவது நல்லது. இதன் மூலமாக அதிக கழிவுகள் உருவாகாமல் நீங்கள் தடுக்க முடியும்.
தண்ணீரை சேமிக்கவும்: நீர் ஒரு விலைமதிப்பற்ற வளமாகும். அதை சேமிப்பது அவசியம். கசிந்து கொண்டிருக்கும் குழாய்களை சரி செய்தல், கழிவறைகளில் குறைந்த நீர்ப் பயன்பாடு போன்றவற்றின் மூலமாக அதிக நீர் வீணாவதைக் குறைக்க முடியும்.
தாவர உணவுகளை உண்ணுங்கள்: கிரீன்ஹவுஸ் வாயுக்களின் உமிழ்வுக்கு உணவுத்துறை முக்கிய பங்காற்றுகிறது. அதாவது பாலுக்காகவும், மாமிசத்திற்காகவும் வளர்க்கப்படும் விலங்குகளிலிருந்து மீத்தேன் வாயு வெளியாகிறது. எனவே தாவர அடிப்படையிலான உணவைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் கார்பன் தடையத்தைக் கணிசமாகக் குறைக்கலாம்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஆதரிக்கவும்: காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுவது மிகவும் முக்கியமானது. எனவே உங்கள் வீட்டில் சோலார் பேனல்களை நிறுவுவது மூலமாக இத்தகை ஆற்றலை நீங்கள் ஊக்குவிக்க முடியும்.
மரங்கள் நடுவதை ஆதரிக்கவும்: மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே காட்டைப் பாதுகாப்பது மிக முக்கியமானதாகும். அனைவருமே மரம் நடும் விஷயங்களை ஆதரித்து வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பதையாவது முயற்சி செய்யுங்கள்.
விமானப் பயன்பாட்டை குறைத்தல்: கார்பன் வெளியேற்றத்திற்கு விமானங்கள் அதிகம் பங்காற்றுகின்றன. இது தவிர்க்க முடியாததாக இருந்தாலும், முடிந்தவரை உங்கள் விமானப் பயணத்தைக் குறைக்க முயற்சிக்கலாம். குறைந்த தூரம் செல்வதற்கு ரயில் அல்லது பேருந்தைத் தேர்வு செய்யுங்கள்.
கற்றுக் கொடுங்கள்: கார்பன் தடங்களைக் குறைத்து பூமியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புங்கள். உங்களால் முடிந்தவரை மாற்றத்தைக் கொண்டு வர எளிய வழிமுறைகளை மற்றவர்களுக்குக் கற்பிக்கவும். இந்த விழிப்புணர்வு, யாரேனும் ஒருவருக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டி, அதன் மூலமாகவும் கார்பன் வெளியேற்றம் குறைக்கப்படலாம்.