
இயற்கையின் படைப்பில் கவர்ச்சியும் சுவாரஸ்யமும் நிறைந்த உயிரினங்களை அவை வாழுமிடங்களில் சாதாரணமாக பார்க்க முடியாதபடி மறைத்து வைத்து கண்ணாமூச்சி ஆடுவது ஒரு சுவாரஸ்யம் எனலாம். தான் உயிர் வாழவும், தன்னுடைய பாதுகாப்பிற்காகவும் அவை யார் கண்களுக்கும் புலப்படாத வகையில் கண்ணாடி (Glass) போன்ற ஒளி ஊடுருவக்கூடிய மற்றும் உரு மாறக்கூடிய தன்மையும் பெற்று ஒரு தனித்துவமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறான பத்து வகை உயிரினங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. கிளாஸ் ஆக்டோபஸ் (Glass Octopus): கடலின் ஆழமான பகுதிகளில் மிதந்து கொண்டிருக்கும் இந்த கிளாஸ் ஆக்டோபஸ் சாதாரணமாக கண்ணுக்குப் புலப்படாது. உடலுக்குள்ளிருந்து மிளிரும் அதன் கண்கள் மற்றும் ஜீரண உறுப்புகளைப் பார்த்து அது அங்கு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
2. கிளாஸ் ஃபிராக் (Glass Frog): இது மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் காணப்படுகிறது. இதன், ஒளி ஊடுருவக்கூடிய அடி வயிற்றுப் பகுதி வழியே, இதயம் மற்றும் ஈரல் போன்ற உள்ளுறுப்புகளைக் காண முடியும்.
3. ஷார்பியர் ஈனோப் ஸ்குய்ட் (Sharpear Enope Squid): இந்த சிறிய வடிவ ஸ்குய்ட், கிட்டத்தட்ட முழுவதும் ஒளிரும் தன்மையுடைய தன் உடல் மற்றும் உயிர்ப் பொருட்கள் வெளியேற்றும் (Bioluminescence) ஒளி மூலம் ஆழ் கடலின் இருட்டுப் பகுதிகளுக்குள் தன்னை மறைத்துக்கொள்ளும் குணமுடையது.
4. சல்பா (Salpa): சல்பா, கிளாஸ் ட்யூப் போன்ற உடலமைப்பு கொண்டது. பல சல்பாக்கள் ஒன்று சேர்ந்து ஒரு நீண்ட செயின் போன்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டு நீரின் மேற்பரப்பில் அமைதியாக மிதந்து சென்று கொண்டிருக்கும். அதை பார்க்கும்போது ஜெல்லி ஃபிஷ் என தவறுதலாக நினைக்கத் தோன்றும்.
5. கடல் ஏஞ்ஜல் (Sea Angel): கூடற்ற நத்தை போன்ற உடலமைப்பு கொண்ட இந்த சிறிய கடல் ஏஞ்ஜல்களுக்கு இறக்கைகளும் உண்டு. ஒளி ஊடுருவக்கூடிய தன் சிறிய உடலால் தெய்வீகமான தேவதைகள் போல் நடனமாடிக் கொண்டு, குளிர்ந்த நீரின் மேற்பரப்பில் சறுக்கிக் கொண்டு செல்லும் பழக்கமுடையவை இவை.
6. கிளாஸ்விங் பட்டர்ஃபிளை (Glasswing Butterfly): இதன் இறகுகள் மெல்லிய கண்ணாடிப் பலகை போன்று தோற்றமளிக்கும். அவற்றை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளவும், எதிரிகளிடமிருந்து தப்பிக்க வியக்கத்தக்க வகையில் உரு மாற்றவும் பயன்படுத்திக்கொள்வது இதன் இயல்பு.
7. இம்மார்டல் ஜெல்லி ஃபிஷ் (Immortal Jellyfish): நம்ப முடியாத அளவுக்கு சிறிய, கண்ணுக்குத் தெரியாத வடிவம் கொண்ட இந்த வகை ஜெல்லி ஃபிஷ், தனக்கு வயதாகும் செயல்பாட்டை எதிர்திசையில் மாற்றியமைக்கக் கூடிய திறமை கொண்டது. இதன் மூலம் இவை உயிரியல் ரீதியாக அழியா வரம் பெற்றவை எனக் கூறலாம்.
8. லார்வல் ஈல் (Larval Eal): இள வயது ஈல் ரிப்பன் போன்ற வடிவில் ஒளி ஊடுருவக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கும். கடல் நீரில் இவை இருப்பதை நம் கண்களால் காண்பது கூட இயலாதது.
9. கோம்ப் ஜெல்லி (Comb Jelly): இவற்றை உண்மையான ஜெல்லி எனக் கூற முடியாது. இவை சுத்தமான ஜெலட்டின் போன்ற உடலமைப்பு கொண்டது. அவை நீரில் நகர்ந்து செல்லும்போது அவற்றின் உடலிலிருந்து வான வில்லின் வர்ணங்கள் ஒளிர்ந்து சிதறும்.
10. கிளாஸ் கேட்ஃபிஷ் (Glass Catfish): ஆறு, குளங்களில் இவை நீந்திச் செல்லும்போது அவற்றின் எலும்புகள் மற்றும் உள்ளுறுப்புகள் அனைத்தையும் நாம் பார்க்கக்கூடிய அளவிற்கு வெளிப்படைத்தன்மை கொண்டவை இந்த கிளாஸ் கேட்ஃபிஷ்.