காண்டாமிருகங்கள் பூமியில் வாழும் மிகப் பழைமையான உயிரினங்களில் ஒன்றாகும். புதை வடிவ பதிவுகளில் அவை 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
1. உலகில் ஐந்து வகையான காண்டாமிருகங்கள் உள்ளன. கருப்பு காண்டாமிருகம், வெள்ளை காண்டாமிருகம், இந்திய காண்டாமிருகம், ஜாவான் காண்டாமிருகம், சுமித்ரன் காண்டாமிருகம் என ஐந்து வகைகள் உண்டு. ஒவ்வொரு இனத்திற்கும் அதன் தனித்துவமான பண்புகள் மற்றும் வாழ்விடங்கள் உள்ளன.
2. காண்டாமிருகத்தின் கொம்புகள் கெரட்டின் என்கிற புரதத்தால் ஆனவை. இந்தக் கொம்பில் முடிகள் உண்டு. தங்களை தாக்க வரும் எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், மிரட்டல் விடுக்கவும் துணையை ஈர்க்கவும் கொம்பை பயன்படுத்துகின்றன.
3. இவற்றின் தோல் தடிமனான சாம்பல் நிறத்தில் இருக்கும். அவை 2.5 அங்குலம் தடிமனாக இருக்கும். குளிர்கால சூழ்நிலையில் தடிமனான தோல் இவற்றைப் பாதுகாக்கிறது. மேலும், இவற்றை வேட்டையாடும் பிற உயிரினங்களிடமிருந்து காத்துக்கொள்ள இந்த கெட்டியான தோல் உதவுகிறது.
4. காண்டாமிருகங்கள் சிறந்த நீச்சல் வீரர்கள். மைல் கணக்கில் அவற்றால் நீந்த முடியும். எதிரிகளால் ஆபத்து நேரும்போது அல்லது உணவை கண்டுபிடிக்க அவை நீருக்கடியில் நீண்ட நேரம் மூழ்கி இருக்கும்.
5. காண்டாமிருகங்களுக்கு கண் பார்வை குறைவு. அதே சமயம் அவற்றின் வாசனை உணர்வு நம்ப முடியாத அளவிற்கு வலிமையானது. உணவை தேடுவதற்கும் வேட்டையாடுபவர்களை கண்டறிவதற்கும் அவை தங்கள் வாசனை உணர்வை பயன்படுத்துகின்றன.
6. காண்டாமிருகங்கள் சுத்த சைவப் பிராணிகள். தாவர வகைகள், புற்கள், மரங்களின் பட்டைகள், இலைகள் மற்றும் பழங்களை உண்கின்றன. ஒரு நாளில் அவை 100 பவுண்டுகள் வரை தாவர உணவை உண்ணுகின்றன. இவற்றின் உணவு பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் மூலம் பல்லுயிர்ப் பெருக்கத்தை மேம்படுத்துகின்றன.
7. காண்டாமிருகத்தின் கன்றுகள் கண்களைத் திறந்த நிலையிலே பிறக்கும். மேலும் அதிசயமாக பிறந்த ஒரு மணி நேரத்திலேயே அவற்றால் நடக்க முடியும். திட உணவை உண்ணத் தொடங்கும் வரை அவை பல மாதங்களுக்கு தாயிடம் தாய்ப்பால் அருந்துகின்றன.
8. தனது கூட்டத்தாரை ஈர்க்க அவை தொடர்ச்சியான முணுமுணுப்புச் சத்தங்கள், குறட்டைகள் மற்றும் எக்காளமிடுவதன் மூலம் அவற்றை தொடர்பு கொள்கின்றன.
9. இவை தங்களுடைய கவனிப்பாளர்கள் பாதுகாவலர்களுடன் மிகவும் நெருங்கிய பிணைப்பைக் கொண்டுள்ளன. உயிரியல் பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களில் தங்களை பராமரிப்பவரிடம் மிகுந்த நட்புடன் விளையாடும். அன்பாகவும் இருக்கும்.
10. காண்டாமிருகங்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கின்றன. இவை பழங்களை உட்கொள்வதால் விதை பரவலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனால் தாவர வகைகளைப் பரப்பவும் பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன.
11. இவை அடர்ந்த தாவரங்களில் தெளிவான பாதைகளை உருவாக்குகின்றன. இதனால் பூச்சிகள் ஊர்வன மற்றும் சிறிய பாலூட்டிகள் போன்ற பிற விலங்குகளின் வாழ்விடங்களாக மாறுகின்றன. இவை மண்ணில் நடமாடுவதால் ஊட்டச்சத்துக்களை மண்ணோடு கலக்கவும் மண் காற்றோட்டமாக இருக்கவும் தாவர வளர்ச்சிக்கும் மிகுந்த உதவியாக இருக்கின்றன.
12. காண்டாமிருகங்கள் தாங்களே நீர் நிலைகளை உருவாக்கும் ஆற்றல் பெற்றவை. இதனால் சுற்றுச்சூழலையை மாற்றியமைக்க உதவுகின்றன. இதனால் மற்ற விலங்குகளுக்கும் நீர் ஆதாரம் கிடைக்கிறது.
காண்டாமிருகங்கள் மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றன. கருப்பு சந்தையில் இவற்றின் மதிப்பு அதிகம். எனவே, இந்த விலங்குகளை வேட்டையாடி சில சமூக விரோதிகள் அழித்து வருகின்றனர். எனவே, அரிய விலங்குகளான காண்டாமிருக இனத்தை பாதுகாக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.