வைட்டமின் D3யானது நம் உடலின் கொழுப்புகளிலேயே சேர்ந்திருக்கும் ஒரு வகையான ஊட்டச்சத்து. நம் உடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்படுவதற்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் D3 உதவும். நம் உடலில் வைட்டமின் D3 குறைபாடு ஏற்படும்போது எலும்புகள் பலமிழக்கும்; தொற்றுக் கிருமிகள் தாக்கும் அபாயம் உண்டாகும்; உடலில் ஏற்படும் காயங்கள் ஆற நாளாகும்; உடல் சோர்வடையும். எந்தெந்த உணவுகளில் இருந்து நம் உடலுக்கு வைட்டமின் D3 அதிகம் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. முட்டை: முட்டைகளிலிருந்து வைட்டமின் D3 அதிகம் கிடைப்பதுடன், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களாகிய புரோட்டீன், ச்சோலைன் மற்றும் செலீனியம் சத்துக்களும் கிடைக்கும்.
2. செரிவூட்டப்பட்ட பால்: வைட்டமின் D3 தருவதில் இந்தப் பால் ஒரு சூப்பரான உணவு. ஒரு கப் செரிவூட்டப்பட்ட பால், ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் D3 அளவில் முப்பது சதவிகிதத்தை தரக்கூடியது.
3. செரிவூட்டப்பட்ட ஆரஞ்சு ஜூஸ்: ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் D3 சத்துக்களைத் தரக்கூடிய மற்றொரு சூப்பர் உணவு இந்த செரிவூட்டப்பட்ட ஆரஞ்சு ஜூஸ்.
4. சால்மன் மீன்: சால்மன் மீனில் அதிகளவு வைட்டமின் D3 சத்துக்களுடன் உடலுக்கு வேறு பல ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் அதிகம் உள்ளன.
5. சீஸ்: ஒரு அவுன்ஸ் அளவிலான வெவ்வேறு வகை சீஸ்களில், ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான வைட்டமின் D3 சத்தில் பத்து சதவிகிதம் வைட்டமின் D3 அடங்கியுள்ளது.
6. ஷீடேக் மஷ்ரூம்: வெஜிடேரியன் உணவுகளில் அதிகளவு வைட்டமின் D3 சத்தை உள்ளடக்கியது இந்த ஷீடேக் மஷ்ரூம். சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்களின் வெளிச்சம் அதிகம் படும்படியாக வைத்து வளர்க்கப்பட்ட இவ்வகை மஷ்ரூம்களிலிருந்து வைட்டமின் D3 சத்து அதிகம் கிடைக்கும்.
7. துனா ஃபிஷ்: மூன்று அவுன்ஸ் அளவிலான துனா (Tuna) மீனில், உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் D3 சத்தில் சுமார் நாற்பது சதவிகிதம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மேற்கூறிய உணவுகளை அடிக்கடி உட்கொண்டு, நோய்க் கிருமிகளின் தாக்குதலின்றி நம் எலும்புகளின் ஆரோக்கியம் காப்போம்.