
இன்றைய காலகட்டத்தில் நாம் பருகும் நீர் எல்லா நேரங்களிலும் தூய்மையாக இருப்பதில்லை. பல்வேறு காரணங்களால் மாசடைந்து குடிக்க தகுதியற்றவையாக இருக்கின்றன. ஆனால், இதற்கு நேர்மாறாக சில நாடுகளில் உள்ள நீர்நிலைகள் இயல்பாகவே சுத்தமாக இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?
1. ஐஸ்லாந்து (Iceland):
பூமியில் மிகவும் தூய்மையான நீரைக் கொண்ட நாடு ஐஸ்லாந்து. அங்கு பனிப்பாறைகளிலிருந்து உருகி, எரிமலை பாறைகள் வழியாக வடிகட்டப்பட்டு, நிலத்தடி நீரூற்றுகளிலிருந்து உருவாகிறது. இதனால் இயற்கையாகவே நீரிலிலுள்ள அசுத்தங்கள் நீக்கப்படுகின்றன.
ஐஸ்லாந்தின் குடிநீரில் கிட்டத்தட்ட 95% இந்த முறையில்தான் கிடைக்கிறது. இதற்காக எந்த ஒரு இரசாயன முறையும் (No chemical treatment) பின்பற்றப்படுவதில்லை. கடுமையான நிலப் பயன்பாட்டுக் கொள்கைகள், அங்கு செய்யப்படும் குறைவான விவசாயங்கள் நீரின் தூய்மையைப் பாதுகாக்க உதவுகின்றன.
2. பின்லாந்து (Finland):
இந்த நாட்டில் 1,68,000க்கும் மேற்பட்ட ஏரிகள், பல பரந்த காடுகள் உள்ளன. நாட்டின் நீர் தேவை பைஜேன் (Paijanne) ஏரியிலிருந்து பூர்த்தி செய்யப்படுகிறது; UV வடிகட்டுதல் (Filtration), கார்பன் (activated carbon) போன்ற மேம்பட்ட முறைகளைப் பயன்படுத்தி நீரானது சுத்திகரிக்கப்படுகிறது. பின்லாந்தின் குறைந்த தொழில்துறை, வலுவான கழிவு மேலாண்மை சட்டங்கள் குறைந்தபட்ச மாசுபாட்டை உறுதி செய்கின்றன. அரசின் வழக்கமான கண்காணிப்பு நீரின் தரத்தைத் தொடர்ந்து உயர்வாக வைத்திருக்கிறது.
3. சுவிட்சர்லாந்து (Switzerland):
சுவிட்சர்லாந்து நீர் ஆல்பைன் நீரூற்றுகள் (alpine springs), பனிப்பாறைகளிலிருந்து உருவாகிறது. அதன் பின் இயற்கையாகவே பாறை, மண் அடுக்குகள் வழியாக வடிகட்டப்படுகிறது.
நாட்டின் நீர் விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு எந்த சுத்திகரிப்பும் முறையும் தேவையில்லை. மீதமுள்ளவை ஓசோனேஷன் (Ozonation), மெம்பிரேன்(Membrane) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல கட்ட சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. இதோடு சுவிட்சர்லாந்து பல கடுமையான மாசு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
4. நார்வே (Norway):
நார்வேயில் மலைகளிலிருந்து வரும் நீர், ஆறுகள், ஏரிகளாகப் பாய்கிறது. அங்குள்ள குறைந்த மக்கள் தொகையுடன், வலுவான சுற்றுச்சூழல் விதிமுறைகள் மாசுபாட்டைத் தடுக்கின்றன. நார்வே, நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் UV மற்றும் மணல் வடிகட்டுதல் முறையை பயன்படுத்துகின்றன. அதன் மூலம் வரும் கழிவுநீரும் (Waste water) வெளியிடப்படுவதற்கு முன்பு முழுமையாக சுத்திகரிக்கப்படுகிறது.
5. டென்மார்க் (Denmark):
டென்மார்க் முழுவதுமாக நிலத்தடி நீரை சார்ந்துள்ள நாடு; அங்கு எளிதாக ஊடுருவ முடியாத களிமண் அடுக்குகள் மூலம் (Impermeable clay layers) நீர் வருகிறது.
நீரில் இருக்கும் இரும்பை (Iron) அகற்ற ஆக்சிஜனேற்றம் (oxidation), மணல் வடிகட்டுதல் முறை பின்பற்றப்படுகிறது. கசிவு கண்டறிதல் அமைப்புகள் (Leak detection systems), பூச்சிக்கொல்லி மருந்து தடைகள் நீரின் தூய்மையைப் அந்நாட்டில் பராமரிக்க உதவுகின்றன.