இந்தியாவில் கோடை வெயிலையே சமாளிக்க முடியாமல் நாம் திண்டாடுகிறோம். ஆனால், இந்த உலகத்தில் அதீத வெப்பம் நிகழும் இடங்களிலும் சில உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றைப் பற்றி தெரியுமா?
‘பாலைவனக் கப்பல்’(ship of the desert) என்று பெரும்பாலும் அழைக்கப்படுவது ஒட்டகம். அதன் முதுகு பகுதியில் உள்ள கூம்பு(Hump) தேவையான கொழுப்பைச் சேமித்து வைத்துக் கொள்கிறது. அவற்றைதான் தேவையான ஆற்றலாகவும், தண்ணீராகவும் ஒட்டகங்கள் மாற்றிக்கொள்கிறது. இன்னொரு புறம் இதன் மூக்கிலிருந்து வெளியேற்றப்படும் காற்றிலிருந்தும் ஈரப்பதத்தை மீண்டும் உறிஞ்சி தேவையான நீரை எடுத்துக்கொள்கிறது. இதனால்தான் ஒட்டகங்களால் பல நாட்கள்வரை தண்ணீர் குடிக்காமல் இருக்க முடிகிறது.
அந்த வெப்பமான சூழ்நிலையில் கிடைக்கும் உலர்ந்த புற்கள், முட்கள் நிறைந்த தாவரங்கள், பாலைவனப் புதர்களை உணவாக எடுத்துக்கொள்கிறது. இதன்மூலம் ஊட்டச்சத்து, நீரேற்றத்தைப் பெறுகிறது.
சஹாரா வெள்ளி எறும்பு அதீத வெப்பத்தைத் தாங்கும் நிலப்பரப்பு உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த எறும்பை வேட்டையாடுபவர்கள் செயலற்ற (Tired) நிலையில் இருக்கும் போது, இந்த எறும்பு அதற்கு தேவையான உணவைத் தேடிக்கொள்கிறது. சூரிய கதிர்வீச்சைத் திசைதிருப்ப அதன் மேல் உள்ள பிரதிபலிப்பு முடிகளைப் (reflective hairs) பயன்படுத்திக்கொள்கிறது. இந்த எறும்புகள் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட பூச்சிகளின் சடலங்களை உண்கின்றன.
வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கை (Middle East) பூர்வீகமாகக் கொண்ட ரப்பல் நரி இரவு நேரங்களில் சுறுசுறுப்பாகவும், பகலில் பதுங்கு குழிகளில் பதுங்கிக்கொள்வதன் மூலமும் உயிர்வாழ்கிறது. அதன் சிறிய உடல் மூலம் ஆற்றலைச் சேமிக்கிறது. அடர்த்தியான முடிகள் நிறைந்த பாதங்கள் மூலம் சுட்டெரிக்கும் மணலில் இருந்து தற்காத்துக்கொள்கிறது.
பூச்சிகள், சிறிய பாலூட்டிகள் மற்றும் பாலைவன பழங்களை உட்கொண்டு அதிலிருந்து தேவையான ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொள்கிறது.
ஆஸ்திரேலியாவின் முள் பிசாசு பல்லி என்ற உயிரினம் அதன் தோல் மூலமாகவே அங்கு நிலவும் பனி(dew), மழைநீரை நேரடியாக அதன் வாய் பகுதிக்கு capillary action மூலம் செலுத்திக்கொள்கிறது. இது எறும்புகளை மட்டுமே உண்கிறது. அதன் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய தினமும் ஆயிரக்கணக்கான எறும்புகளை உட்கொள்கிறது.
வறண்ட மண்டலங்களில் வாழும் ஆப்பிரிக்க காட்டு கழுதை அதிக அளவு தண்ணீரை விரைவாகக் குடிப்பதன் மூலமும், வெப்பத்தை வெளியேற்ற அதன் பெரிய காதுகளைப் பயன்படுத்துவதன் மூலமும் வாழ்கின்றன. இது உலர்ந்த புற்கள், பாலைவனத் தாவரங்களை உண்கிறது. பெரும்பாலும் உணவைத் தேட நீண்ட தூரம் பயணிக்கிறது.