
தமிழ்நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கும் நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிந்து, விரைவாக குணப்படுத்தும் முயற்சியை கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் படி, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஆரம்ப கட்ட புற்றுநோயைக் கண்டறிய ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 3,192 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 43 பேருக்கு ஆரம்ப கட்ட புற்றுநோய் அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், இத்திட்டத்தை தமிழ்நாடு முழுக்க மேலும் விரிவுபடுத்த தமிழக அரசு ரூ.110.96 கோடியை ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் 11 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆரம்ப கட்ட புற்றுநோய் அறிகுறிகளைக் கண்டறியும் திட்டத்தை அடுத்த 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்த ரூ.110.96 கோடியை ஒதுக்கியுள்ளது தமிழக அரசு. இதன்மூலம் புற்றுநோயாளிகளின் வாழ்வைக் காக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் சிகிச்சைகளை மேம்படுத்த சென்னை ராயப்பேட்டை புற்றுநோய் மருத்துவமனை, தஞ்சாவூர், மதுரை, கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் புற்றுநோய் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதுதவிர்த்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை உள்பட 12 மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்கு அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்கள் பயன்படுத்தப்படும்.
இத்திட்டத்தை அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்த ரூ.110.96 கோடியை தமிழக அரசின் நிர்வாகத் துறை ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ் தேவைப்படும் அதிநவீன உபகரணங்கள் அனைத்தும் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மூலம் கெள்முதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகள் தென்படாத ஆரம்ப கட்டத்தில் புற்றுநோயைக் கண்டறிவது சவாலாக இருந்தாலும், நவீன பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து ஒரே சிகிச்சையில் குணப்படுத்த முடியும் என தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் தங்கள் உடல் மேல் பொதுமக்களுக்கு அக்கறையும், விழிப்புணர்வும் இருக்க வேண்டியது அவசியமாகும்.
புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் மிக எளிதாக குணப்படுத்த முடியும். இருப்பினும் கடைசி கட்டத்தில் தான் பலருக்கும் புற்றுநோயைக் கண்டறிய முடிகிறது. இதனால் தான் உலகளவில் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.